நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலை

நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலை ஆனது யாழ் மாவட்டத்திலுள்ள யாழ் வலயத்திலே கோப்பாய்க் கோட்டத்திலே நீர்வேலி எனும் எழில்மிகு கிராமத்தில் அமைந்திருப்பதுதான். “கற்ககசடற” எனும் மகுடவாசகத்தை தனதாகக் கொண்டே கல்விப் பணியாற்றுகின்றது இப் பாடசாலை.

நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலை

இக்கிராமத்தில் உள்ள பாடசாலைகளில் காலத்தால் முந்திய பாடசாலை என்ற சிறப்பைப் பெறுவது இப்பாடசாலையே ஆகும். யாழ்ப்பாணத்திலே கத்தோலிக்க மதம் பரப்பப்பட்ட காலத்திலே கல்விப்பணியினூடாக மதம் பரப்பும் முயற்சி மிசனரிமாரால் மேற்கொள்ளப்பட்டன. அம் முயற்சியின் பயனாகவே இப் பாடசாலையும் உதயமாகியது. 1905ம் ஆண்டு ஒரு அதிபரினதும் ஒருஆசிரியரினதும் சேவையோடு தரம் 5வரை வகுப்புக்களைக் கொண்டதாக யாழ் நகர் ஆசனக் கோயில் திருப்பணியாளர் அருட்திரு தியோமர் ஆண்டகை அவர்களின் முயற்சியினால் திரு எஸ். கபிரியேற்பிள்ளை உபதேசிகரால் இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. ஆரம்பத்திலே இப் பாடசாலை ஓலைக் கொட்டிலாகவே ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்திலே கத்தோலிக்க மாணவர்களே கல்வி கற்றனர்.

காலச்சக்கரம் சுழல காலமாற்றத்தின் காரணமாக ஒரு அதிபர் ஒரு ஆசிரியர் என்ற நிலை மாறி பல ஆசிரியர்களையும் காலத்திற்கு காலம் வேறு வேறு அதிபர்களையும் கொண்டதாக மாற்றம் பெற்றது. ஆரம்பகால அதிபராக திரு. ஆபிரகாம் யோசேப்பு (கதிரவேலு) உபாத்தியார் அவர்கள் அவர் வழி தொடர்ந்து ஏறத்தாழ 14 அதிபர்களால் இப் பாடசாலை வழி நடாத்தப்பட்டு இன்று அதிபர் திரு. சி. தர்மரத்தினம் அவர்களால் சிறந்த முகாமைத்துவத்தோடு 16 ஆசிரியர்களும் சுமார் 250 மாணவர்களையும் கொண்டுதரம் 9வரை வகுப்புக்களைக் கொண்டதாக மிளிர்கின்றது. ஆரம்பகால அதிபர்களான திரு.ஆபிரகாம் யோசேப்பு(கதிரவேலு உபாத்தியார் நீர்வேலி, வசாவிளான் திரு. எஸ்.பிலிப்பு,வசாவிளான் திரு.எஸ்.அப்புத்துரை, கரம்பன் திரு. எஸ்.மரியாம்பிள்ளை ஆகியோரது பணி மிகச் சிறப்பானதாகும். இவர்களைத் தொடர்ந்து வசாவிளான் கே. பிலிப்பு, அச்சுவேலி எஸ்.கிறிஸ்சோஸ்தம் அவர்கள் தலைமையாசிரியர் பதவியை வகித்தார். அவர் தம் சேவைக்காலத்திலே பாடசாலை வளர்ச்சிஅடைந்தமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

ஆரம்பத்திலே அமைக்கப்பட்ட ஒரு ஓலைக்குடிலுடனும் மரங்களின் கீழுமான வகுப்புக்கள் வசாவிளான் திரு. கே. பிலிப்பு அவர்களது தலைமை ஆசிரியர் காலத்திலே 40’x20’அளவு கொண்ட புதிய ஓலைக் கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டது.

இவரைத் தொடர்ந்து அச்சுவேலி எஸ். கிறிஸ்சோஸ்தம் அவர்களும் அவர் இளைப்பாற நீர்வேலி வடக்கைச் சேர்ந்த திருமதி.சொர்ணம் அந்தோனிப்பிள்ளை அவர்கள் இப் பாடசாலையின் பதில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.

இவர் இளைப்பாற 1969ல் நீர்வேலி மத்தியைச் சேர்ந்த பண்டிதர் செ. துரைசிங்கம் இப் பாடசாலையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இக் காலத்திலேயே தலைமையாசிரியர் பதவி, அதிபர் பதவி எனப் பெயர் மாற்றம் பெற்றது. அக் காலத்திலேயே அதிகமான இந்து மாணவர்கள இப் பாடசாலையில் கல்வி கற்க இணைந்து கொண்டனர். அக் காலத்திலே குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க காமாட்சி ஐக்கிய கைத்தொழிற் சங்க முயற்சியால் குழாய் நீர் வழங்கப்பட்டது. அத்துடன் கூரையானது ஓட்டுக் கூரையாக மாற்றியமைக்கப்பட்டது. இவரது காலம் பாடசாலை வரலாற்றிலே ஒரு மைல்கல் எனக் கூறலாம்.

1973ல் பண்டிதர் துரைசிங்கம் அதிபர் இளைப்பாற கோப்பாய் மத்தியைச் சேர்ந்த திரு. மு. வைத்திலிங்கம் அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டார். இக் காலத்தில் மாணவரது தொகை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் கட்டடத் தேவை ஏற்படலாயிற்று. இதனால் 40’x20’, 60’x20’அளவு கொண்ட இரு புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டன. மலசலகூட அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. தளபாடத் தேவைகளும் உடனுக்குடனே பூர்த்தி செய்யப்பட்டு பாடசாலைக்கான சுற்றுமதில்  கட்டப்பட்டு அத்துடன் பாடசாலை வரலாற்றிலே முதன் முதலிலே பெற்றோர் ஆசிரியர் சங்கம் அமைக்கப்பட்டது. மாணவர்களிடையே இல்லங்கள் அமைக்கப்பட்டு காமாட்சி அம்பாள் சனசமூக விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. இக்காலத்திலேயே மாணவர்களிடையே கலை உணர்வு பேணப்பட்டது. கலை விழாவும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மாணவரிடையே சீருடை பேணப்பட்டது. இக்காலம் பாடசாலை வரலாற்றிலே பொற்காலம் எனக் குறிப்பிடத்தக்கதாகும். இவர் 1985ம் ஆண்டு இளைப்பாறினார். இவரது நினைவாக பரிசளிப்பு நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை சிறப்பாக இயங்கி வருகின்றது.

இவரைத் தொடர்ந்து 1985 ஏப்ரலில் நீர்வேலி வடக்கைச் சேர்ந்த திரு. மயில்வாகனம் அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார். இவரது காலத்திலே 42’x22’அளவு கொண்ட புதிய இரு மாடிக் கட்டடம் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இக்காலத்திலே யுத்தம் காரணமாக கட்டடங்கள் அழிவடைந்தன. எனினும் மீண்டும் 50’x20’, 40’x20’ அளவு கொண்ட இரு மாடிக் கட்டடங்கள் உருவாக்கப்பட்டன. இக்காலத்திலேயே பாலர் வகுப்பு முதல் தரம் 5 வரையாக இருந்த வகுப்புக்கள் தரம் 8 வரை மாற்றப்பட்டன.

அத்துடன் மாணவர்களது குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க புதிய குழாய்க்கிணறு உருவாக்கப்பட்டது. இக்காலத்தில் 537 மாணவர்களுடன் இயங்கிய இப்பாடசாலையிலே முதன் முதலில் மாணவர்களது திறன் மதிப்பிடப்பட்டு பரிசளிப்பு விழா இடம் பெற்றது.

இவரைத் தொடர்ந்து கோப்பாய் வடக்கைச் சேர்ந்த திரு. த. இராசா அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டார். இவரது காலத்திலே பாடசாலையிலே கலை விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் என்பன சிறப்பாக இடம் பெற்றன. இவரைத் தொடர்ந்து 1992 இல் திரு.க. அருமைத்துரை அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார். இக்காலப் பகுதியில் பாடசாலையின் மின் இணைப்பு வசதிகள் பழையமாணவராகிய திரு. ச. புவிச்சந்திரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் செயற்பாட்டறை ஒன்றும் இப் பாடசாலையில் உருவாக்கப்பட்டது. இக் காலத்திலேதான் ஆசிரியர் தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டமை பாடசாலை வரலாற்றிலே குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இக் காலத்திலே தரம் 9 வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தரம் 1 –9 வரை வகுப்புக்களுடன் சிறப்பாக இயங்கி வருகின்றது. திரு.க.அருமைத்துரை அவர்களைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு இடைக்காட்டைச் சேர்ந்த ச. வேலழகன் அவர்கள் அதிபராக பொறுப்பேற்றார். இவரது வருகை பாடசாலைக்கு புத்துயிர் ஊட்டியது. பாடசாலை வளர்ச்சிக்கென பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வருடார்ந்த பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. அபிவிருத்திக் குழு, முகாமைத்துவக் குழுக்கள் என்பனவும் பழைய மாணவர் சங்கம், உணவு முகாமைத்துவக் குழுக்கள் இவரது காலத்திலே உருவாக்கப்பட்டன. பாடசாலை நூல்நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. இது பாடசாலையின் பழையமாணவன் அருளானந்தஸ்ரீ ஞாபகமாக உதயமாகியது.

இக் காலத்திலே பாடசாலை மாணவரது கற்றல் வளவிருத்திக்காக சுவிஸ் நற்பணிச் சங்கத்தினரால் மேத்தலை எறியி (OHP) ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு படிப்படியாக வளர்ச்சி கண்டு பௌதீகவள விருத்தி பெற்ற இப் பாடசாலை மாணவரின் கல்வி அடைவு மட்டம் இணைபாடவிதான செயற்பாடுகள் என்பவற்றிலும் உயர்ந்து கொண்டே சென்றது. இக் காலத்திலே 2005ம் ஆண்டு பாடசாலையானது நூற்றாண்டு பூர்த்தியை எட்டியது. எனினும் 2007ம் ஆண்டு தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடி பூரித்து நின்றது. திரு. ச. வேலழகன் அவர்களைத் தொடர்ந்து 2007.11.19 நீர்வேலி தெற்கைச் சேர்ந்த திரு. சி. தர்மரத்தினம் அவர்கள் பாடசாலையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இக் காலத்தில் இருந்து இன்று வரை பாடசாலை வரலாற்றிலே ஒரு புத்தெழுச்சிக் காலம் என்றே கூறலாம்.இக் காலத்திலே பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக இடம் பெற்றது. அத்துடன் முறைசாராக் கல்விப் பிரிவு மூலம் சிங்களம் கற்பிக்கப்பட்டது.

அத்துடன் பாடசாலைக்கு அண்மையிலுள்ள காணிரூபா 600,000/=கொடுத்து பாடசாலைக்கு எனக் கொள்வனவு செய்யப்பட்டது. (சுவிஸ் நற்பணிச் சங்கம், நலன்புரிச் சங்கம், கனடா நீர்வேலி கிளை பழைய மாணவர் சங்கம் என்பவற்றின் பங்கு அளப்பெரியது.) இக் காலப் பகுதியில் பாடசாலையின் நுழைவாயிலில் பூப்பந்தல் ஒன்று உருவாக்கப்பட்து. தற்போதைய அதிபரின் காலத்திலே சமையற் கூடம், கணணிஅறை, விஞ்ஞான கூடம், பாண்ட் வாத்தியக் குழு, வாத்தியங்கள், சுவிஸ் நற்பணிச் சங்கபுலமைப் பரிசில் திட்டம், கனடா நற்பணிச் சங்க புலமைப் பரிசில் திட்டம் என்பனவும் மாணவர் கல்விஅபிவிருத்தி ஊக்குவிப்பாக செயற்பட்டது இக்காலத்திலேயே ஆகும்.

மேலும் 70’x25’அடி கொண்ட இரு மாடிக் கட்டடத்திற்கான அத்திவாரத்தினை நோர்வேயைச் சேர்ந்த செ. சண்முகநாதன்,இலண்டனைச் சேர்ந்த இ. சதீஸ்குமார்,பிரான்சினைச் சேர்ந்த அன்ரனிதாஸ் ஆகியோரினதும் பழைய மாணவர் சங்க உறுப்பினர் மூலமும் நூறு ஆயிரமும் (100,000/=)சேர்த்து தற்காலிக மண்டபம் உருவாக்கப்பட்டு மாணவர்களின் வகுப்பறைத் தேவைகள் நிறைவு செய்யப்பட்டன. அத்துடன் போட்டோபிரதி இயந்திரம், தொலைக்காட்சி,  மல்ரிமீடியா போன்றவையும் தெற்குப் பக்கம் 50 அடி, கிழக்குப் பக்கம் 35 அடிநீளமான மதில்கள் கட்டப்பட்டுள்ளது. விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்காக மேலும் ஒருபரப்பு காணியும் கொள்முதல் செய்யப்பட்டது. பாடசாலையின் மேற்குப்பக்க புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டது. இவ்வாறாக பௌதீகவள விருத்தியில் முன் நிற்கும் இப் பாடசாலை கல்வி விருத்தியிலும் சிறப்பிடம் பெற்று கோப்பாய் கோட்டத்தில் தனியிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

1991ம் ஆண்டிலிருந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலே சிறப்பான இடத்தை பெற்று வரும் மாணவர்கள் இம்முறை 3 மாணவர்கள் சித்தியடைந்து கோப்பாய் கோட்டத்தில் 186 புள்ளிகளைப் பெற்று, கோப்பாய் கோட்டத்தில் 2வது இடத்தையும் விகிதாசார அடிப்படையில் 1ம் இடத்தையும் பெற்றமை பாராட்டுக்கும் மகிழ்விற்கும் உரியதாகின்றது. அத்துடன் திருக்குறள் மனனப் போட்டி, தழிழ்த்தினப்போட்டி, ஆங்கிலதினப்போட்டி, அறநெறிப்போட்டி, சிறுவர் சித்திரப் போட்டி, சமூக விஞ்ஞானப் போட்டி, சிறுவர் தினப் போட்டி, சமய அறிவுப் போட்டி, புத்தாக்கப் போட்டி என்பவற்றில் ஊக்கத்துடன் பங்கு பற்றி கோட்ட,வலய,மாகாண மட்டங்களில் தமதாக்கிக் கொள்ளும் மாணவர் திறன் வியக்கத்தக்கதும்  பாராட்டுக்கு உரியதும் ஆகும்.

இவ்வாறு பௌதீகவள விருத்தி, கல்வித்தர விருத்தி என்பவற்றில் உயர் நிலையில் மிளிரும் இப் பாடசாலையின் சிறப்பை வார்த்தைகளால், எழுத்துக்களால் வடிக்க முடியாதவாறு நீண்டு செல்வது சிறப்பானது ஆகும்.

நோக்கக் கூற்று

மாணவர் ஆற்றல்களையும், பொருத்தமான கற்றல் வளங்களையும் ஒருங்கிணைத்து உலக சவால்களை எதிர் கொண்டு ஆரம்ப, இடைநிலைக் கல்வியினூடாக சுபிட்சமான  எதிர் காலத்திற்கு பிள்ளைகளை இட்டுச் செல்லல்.

பணிக் கூற்று

பாடசாலையின் முழு வளர்ச்சிக்கு வேண்டிய வளங்களைப் பாடசாலைச் சமூகத்தினூடாக ஒருங்கிணைத்தல்

பாடவிதான, இணைப்பாடவிதான  செயற்பாடுகளைத் திட்டமிட்டுத்  தொடர்ச்சியான மேற்பார்வையினூடாக       மாணவர்களின் ஆற்றல்களை  வளர்த்தல்.

பாடசாலை சார்ந்த சங்கங்கள், மன்றங்கள் மற்றும் அமைப்புக்களின் மூலம் பாடசாலையின் வளர்ச்சிக்கு உச்ச பயனைப் பெற்றுக் கொடுத்தல்

Sharing is caring!

Add your review

12345