நீர்வேலி வாய்க்காற்றரவை மூத்த விநாயகர் ஆலயம்

வாய்க்காற்றரவை பிள்ளையார் கோயில் கொண்டிருக்குமிடம் பண்டுதொட்டு மூத்தநயினார் கோயில் வளவு என அழைக்கப்பட்டு வந்தது. இற்றைக்கு ஐந்நூறு வருடங்களுக்கு முன்னர் மூத்தநயினார் கோயில் வளவு, மரங்கள் நெருங்கியுள்ள சோலையையும் மாடு, ஆடுகள் நீர்குடிக்கத்தக்க கேணியையுடையதாயிருந்தது. போர்த்துக்கீசர் இலங்கையை ஆண்ட காலத்திலே குப்பிளான், குரும்பசிட்டி, கட்டுவன் முதலிய ஊர்களிலுள்ளவர்கள் வழிநடையாய் நீர்வேலிக்கூடாக வன்னிக்குச் சென்று கமம் செய்வதும் மீண்டும் தம்மூருக்குச் செல்வார்கள். அங்ஙனம் செல்பவர்கள் நீர்வேலியில் மூத்தநயினார் வளவில் தங்கிச் செல்வார்கள். மேலே குறிப்பிட்டவர்கள் ஒருமுறை வன்னிக்குச் சென்று கமம் செய்தபோது வயலொன்றில் ஒரு விநாயகர் விக்கிரத்தைக் கண்டெடுத்தார்கள். அவ்விக்கிரகத்தை தங்கள் சொந்த ஊரிலே ஸ்தாபிக்க விரும்பி நெல்லுச்சாக்குக்குள்ளே வைத்துக்கொண்டு திரும்பி வரும் சமயத்தில் நீர்வேலியிலே மூத்தநயினார் கோயில் வளவிலே வழமைபோலத் தங்கினார்கள். தங்கியவர்கள் ஆயாசத்தைத் தீர்த்த பின்பு, பிள்ளையார் விக்கிரகம் வைக்கப்பட்ட நெல்லுச்சாக்கைத் தங்கள் ஊருக்குக் கொண்டு போகத் தூக்கினார்கள் அச்சாக்கைத் தூக்கமுடியவில்லை. பின்பு பலர் கூடித்தூக்கினார்கள். அதன் பின்பு அவர்கள் தங்களால் இயன்ற முயற்சிகளையெல்லாம் செய்தார்கள். எல்லாம் வல்ல இறைவன் வல்லமைக்கு முன் மனிதர் வல்லமை எம்மட்டு! முடிவில் இது பிள்ளையார் விக்கிரகத்தின் திருவிளையாடலென எண்ணி அந்நெல்லு மூட்டையை மூத்தநயினார் கோவில் வளவிலேயே விட்டு விட்டு அச்சத்தோடு, ஆச்சரியத்தோடு தங்கள் இருப்பிடங்களுக்கு சென்றுவிட்டனர். இவற்றைக் கேட்ட காணிக்குரிய சிறுப்பிட்டியைச் சேர்ந்த உயர் வேளாண் மரபினர் அக்காலத்திலேயே கோவிலைக்கட்டி கும்பாபிஷேகம் செய்து விநாயகரை பிரதிட்டை செய்தனர். சில வருடங்கள் சென்ற பின்பு காணிக்குரியோர் கோயிற் பரிபாலனத்தை சிவசாமிக் குருக்களிடம் ஒப்படைத்தனர். அன்று தொடக்கம் அவர் பரம்பரையினரால் கோயில் பரிபாலிக்கப்பட்டு வருகிறது.

Sharing is caring!

Add your review

12345