பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள்

“முத்தராய் மனமோன மெய்திய பக்தர் மேவுநற் பணிப்புலத் உறை
முத்துமாரி பொன்முளரி மென்பதஞ் சித்தமிருத்துவார் சித்தராவரே”

பாவலர் எஸ். சிவானந்தராஜா

பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் இந்து சமுத்திரத்தின் “முத்து” என வர்ணிக்கப் பெறும் ஈழ நாட்டின் “சிரம்” போல் அமைந்துள்ள யாழ்ப்பாண குடாநாட்டில் பழம் பெரும் பட்டணமாம் பண்டத்தரிப்பில் சைவமும், தமிழும் தழைத்தோங்க சமயத் தொண்டாற்றி வரும் வீரசைவர்கள் செறிந்து வாழும் பணிப்புலம்பதிதனில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வரலாற்றுப் புகழ்மிக்க பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள்  தேவஸ்தான வரலாறும் நிகழ்வுகளும்; வளர்ந்து வரும் எமது வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்காக இங்கு பிரசுரமாகின்றது.

சுருக்கம்: பூசகர் வேலாயுதர் கனகர் என்பவரால் ஸ்தாபிக்கப் பெற்று அவரின் பரம்பரையில் வந்தோரால் பராமரித்து, பூசைகள் செய்து வந்த பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயம் திருப்பணி செய்வதற்காக அமைக்கப் பெற்ற திருப்பணிச் சபையினரின் ஆதிக்கத்தால் உரிமைப் பிரச்சனை தோன்றி ஆலயம் பூட்டப் பெற்று மாவட்ட, மேல், உயர் (சுப்பிறீம்) நீதி மன்றங்களில் நடைபெற்ற விசாரணைகளின் பின்னர், 1994 ம் ஆண்டு வழங்கப் பெற்ற உயர் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் ஆலய ஸ்தாபகரின் பரம்பரையில் வந்த பூசகர்களிடம் மீண்டும் ஆலயம் ஒப்படைக்கப் பெற்று பூசைகள், திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

விரிவாக: இக் கிராமத்தில் ஆலயப் பணி செய்வோர் நிறைந்து வாழ்வதால் பணிப்புலம் என பெயர் பெற்றது என ஒரு சாராரும் பன்னைப் பற்றைகள் நிறைந்து காணப பெற்றதால் பன்னைப்புலம் என பெயர் பெற்று காலப் போக்கில் அப் பெயர் மருவி பனிப்புலம் –பணிப்புலம்என அழைக்கப் பெறுவதாக இன்னொரு சாராரும் கூறுகின்றனர்.

முன் ஒரு காலத்தில் (சுமார் 300 வருடங்களுக்கு முன்) இக் கிராமத்தில் வாழ்ந்து வந்தவேலாயுதர் கனகர் அவர்கள் ஒரு அம்பிகைப் பக்தராவார். அவர் ஓர் நன் நாள் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தான் ஓர் கனவு கண்டதாகவும் அதில் அம்பிகை தன் முன் தோன்றி பின்வளவில் இருக்கும் பன்னைப் பற்றைக்குள் கத்தி ஒன்று இருப்பதாகவும், அவ்விடத்தில் தான் குடிகொண்டிருப்பதாகவும், அக் கத்தியை அவ்விடத்தில் வைத்து தன்னை ஆதரிக்கும்படி தனக்கு அருள் வாக்கு கொடுத்து மறைந்து விட்டதாகவும் கூறியபடி அவர் பன்னைப் பற்றைகள் நிறைந்த தனது பின் வளவிற்குச் சென்று சல்லடை போட்டு தேடலானார்.என்ன ஆச்சரியம்! செழித்தோங்கி வளர்ந்து நின்ற பன்னைப் பற்றை ஒன்றின் அடியில் “மிருகபலியிடும் கத்தியின் தோற்றமுடைய ஒரு கத்தி” நிமிர்ந்த நிலையில் இருப்பதைக் கண்டு பேரானந்தம் கொண்டார். தான் கண்ட கனவு நனவாகி விட்டதே என பரவசமடைந்தார். இச் செய்தியை ஊர்மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன் அவர் அவ் இடத்தில் சிறிய ஆலயம் அமைத்து அப்புனித கத்தியை பிரதிஸ்டை செய்து பூசைகள் நடாத்தி வழிபட்டும் வந்தார்.

இவ்வாறு நிகழ்ந்துவரும் காகத்தில் இவ் ஆலயத்தில் நிகழ்வுற்ற அற்புதம் அம்பிகையின் மகிமையை வெளிப்படுத்துகின்றது. செவிவழி வந்த கதை ஒன்றின்படி இக் கிராமத்தில் பலர் கொள்ளை நோயால் பீடிக்கப்பட்டு மரணித்தனர் என்றும் அதனால் ஊர் மக்கள் எல்லோரும் இவ் ஆலயத்தில் ஒன்று கூடி அக் கொடிய நோயில் இருந்து தம்மை காப்பாற்ற இறைவியின் அருள் வேண்டி வழிபட்டுக் கொண்டிருந்த பொழுது ஆலயத்தின் முன்பாக மர்மமாக தோன்றிய ஒரு மந்திரவாதி தன் கையில் வைத்திருந்த மந்திர கோலை ஆட்டுவதன் மூலம் அக் கிராமத்தில் இருந்த எல்லா எலிகளையும் தம்மைச் சூழச்செய்தார் என்றும் அதன்பின் அவைகளை சம்பில்துறை கடற்கரை வரை அழைத்துச் சென்று மறைந்தார் என்றும் அதன் பின்னர் கொள்ளை நோய் அற்றுப்போகவே மக்கள் எல்லோரும் சந்தோஷமாக வாழ்ந்தனர் என்றும் மந்திரவாதியாக தோன்றியவர் அம்பிகையே என்றும் அம்பிகையின் மகிமையை பறைசாற்றுகின்றது. (கி.பி. 1898-1907)காலப் பகுதியில் கொள்ளை நோயினால் உலகின் பல பாகங்களிலும் 3,70,000 மக்கள் உயிரிழ்ந்தனர் என வரலாறு கூறுகின்றது)

இவ் அற்புத நிகழ்வின் பின்னர் (ஐம்பொன்னாலான) முத்துமாரி அம்பிகையின் விக்கிரகமும் புனிதகத்தியுன் பிரதிஷ்டை செய்து பூசைகள் செய்துவந்தார். அம்பிகையின் அருள் பெருகவே பொதுமக்களின் நேர்த்திகளும், நன்கொடைகளும் அதிகரித்தன. கிடைக்கப் பெற்ற நிதியை கொண்டு அவ்வப்போது ஆலய திருத்த-திருப்பணி வேலைகளும் ஆலய புனருத்தான-திருப்பணிகளும் செய்யப்பெற்றன. அத்துடன் தேரும் அமைக்கப் பெற்று மகோற்சவ விழாவும் நடைபெற்று வந்தன.

ஆலய நித்திய பூசைகள் யாவும் ஆலய ஆதீனகர்த்தாவின் வழித்தோன்றலில் வந்தோகளால் செய்யப்பெற்று வந்ததுடன் மகோற்சவ விழா கிரியைகள் சுளிபுரம் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த பிராமண குருமார் மூலம் நடாத்தப்பெற்று வந்தது. தேர்த்திருவிழாவின் போது அம்பாளுக்கு மாமிச-படையல்கள் படைக்கப்பெற்று தேருக்கு முன்னால் மிருகபலி கொடுக்கப்பெற்ற பின்னரே தேர் இழுக்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தது.

இவ் ஆலயத்தில் முதலாவதாக பலியிடப்பெறும் ஆட்டுகடா புளியங்கூடலில் வசித்து வந்த அன்பர் ஒருவரின் உபயமாக இருந்தது. ஒருமுறை தேர்த் திருவிழா தினம் கடலில் புயல் ஏற்பட்டதனால் படகு சேவையில் தாமதம் ஏற்பட்டது. அதனால் முதலாவதாக பலியிட வேண்டிய ஆட்டுக்கடா உரிய நேரத்திற்கு ஆலயத்திற்கு வந்து சேர முடியவில்லை.

முதலாவதாக பலியிடவேண்டிய ஆட்டுக்கடா வராத காரணத்தால் இரண்டாவதாக பலியிட வேண்டிய ஆட்டுக்கடாவை முதலாவதாக பலியிடப் பெற்று தேர்த்திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் முதலாவதாக பலியிட வேண்டிய ஆட்டுக்கடா ஆலயத்திற்கு வந்து சேர்ந்தது. தனது ஆட்டுக்கடா முதலாவதாக பலியிடப்பெறவில்லையே என புளியங்கூடலில் இருந்து வந்த உபயகாரனும், உறவினர்களும், நண்பர்களும் ஆத்திரமடைந்ததால் குழப்பம் மூண்டது. இக் கைகலப்பின்போது புளியங்கூடலில் இருந்து வந்தோரால் ஆலயத்திலிருந்த புனித-கத்தி அபகரிக்கப்பெற்று புளியங்கூடலுக்கு எடுத்துச் செல்லப் பெற்றது.

இப் புனிதகத்தியை புளியங்கூடலுக்கு எடுத்துச் சென்றவர்கள் அங்கு ஒரு சிறிய ஆலயம் அமைத்து அப் புனிதகத்தியை பிரதிஷ்டை செய்து; தாம் பலியிட கொண்டு வந்த அந்த ஆட்டுக்கடாவை அங்கு பலியிட்டனர். அந்த புனித கத்தியை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு பலர் முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை.

இவ் ஆலயத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பெற்ற புனித கத்தியை வைத்து புளியங்கூடலில் அமைக்கப் பெற்ற அந்த ஆலயமே தற்பொழுது புளியங்கூடலில் பிரசித்தி பெற்று விழங்கும் மாரி அம்மன் ஆலயமாகும். இவ் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் (கருவறையில்) அந்த புனித கத்தி வைக்கப்பெற்று தற்பொழுதும் பூசிக்கப்படுகின்றது.

 

யாழ்ப்பாணத்தில் பிரபல்லியமான தினசரி இதளான “உதயன்” பத்திரிகையில் புளியங்கூடல் மாரியம்மன் ஆலய தர்மகர்த்தவினால் எழுதப்பெற்று கடந்த 2003ம் வருடம் பிரசுரிக்கப்பெற்ற புளியங்கூடல் மாரியம்மன் ஆலய வரலாற்றில் அவ் ஆலய மூலஸ்தானத்தில் இருக்கும் புனித கத்தி வலிகாமம்-மேற்கில் இருக்கும் பிரசித்தி பெற்ற அம்பாள் ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்பெற்றதாகமறைமுகமாக குறிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆலயத்தில் 1946 ம் ஆண்டு மிருகபலிநிறுத்தப்பெற்று நேர்த்திப் பொருட்கள் யாவும் ஆலயத்தில் ஒப்படைக்கப்பெற்றன. அவை யாவும் ஏலத்தில் விற்கப் பெற்ற பணத்தில் திருப்பணி வேலைகள் செய்யப்பெற்றன. தேர்த் திருவிழாவின் போது அம்பிகைக்கு படைக்கப்பெற்ற மாமிச-படையல் சைவ பொங்கலாக மாற்றப்பெற்று படைக்கப் பெறுவதுடன் மிருக பலிக்குப் பதிலாக தேங்காய்கள் சிதறு-தேங்காய்களாக அடிக்கப்பெற்ற பின்னர் தேர் இழுக்கப்பெறுகின்றது.

 

1965 ம் ஆண்டு இவ் ஆலயத்தின் கருவறைத் ஸ்தூபி சுண்ணாம்பினால் கட்டப் பெற்றது) சிதைவுற்று இருந்தமையால் புனருத்தானம் செய்வதற்கு ஒழுங்குகள் செய்யப்பெற்றன. இத் திருப்பணி வேலைகளில் தொண்டுகள் செய்வதற்கு; இவ் ஆலயத்தின் திருப்பணிகளில் பெரும் தொண்டாற்றி வந்த பெரியார் தம்பு சிவசம்பு அவர்களை தலைவராக கொண்ட திருப்பணிச்சபை ஆலய தர்மகர்த்தாக்களினால் நியமிக்கப்பெற்று அவர்களின் பெரும் தொண்டுடன் (செதுக்கப்பெற்ற கற்களைக் கொண்டு உள்ளூர்ச் சிற்பாச்சாரிகளினால்) கருவறைத் ஸ்தூபி புனருத்தானம் செய்யப்பெற்றது. இதுவரை காலமும் கருவறையில் இருந்த பஞ்சலோகத்தினால் ஆன அம்பாள் விக்கிரகத்திற்கு பதிலாக கருங்கல்லால் ஆன அம்பாள் விக்கிரகம் (சலா விக்கிரகம்) பிரதிஷ்டை செய்யப்பெற்று குடமுழுக்கும் நடைபெற்றது.

அதன் பின்னர் பொதுமக்கள் விருப்பிற் அமைய கிராமத்தில் இருந்த ஒவ்வொரு குடும்பமும் தங்கள் உபயமாக மாதாந்த பூசைகளை பொறுப்பேற்றதுடன் அவர்கள் கேட்டு கொண்டதற் கிணங்க ஆலய பூசகர்கள் செய்து வந்த நித்திய பூசைக் கிரிகைகளையும்; நைமித்திய பூசைக் கிரிகைகள் செய்து வந்த பிராமண குருமார் மூலம் செய்வதற்கு ஒழுங்குகள் செய்யப்பெற்றன. அதன் பிரகாரம் ஆலயப் பூசகர்கள் (ஆதீனகர்த்தாக்கள்) பூசைக்கான எல்லா ஆயத்தங்களும் செய்து கொடுக்க பிராமண குருமார் கிரியைகளை செய்து வந்தனர்.

பூசகர்களான கனகர் வேலயுதம், கனகர் தம்பிப்பிள்ளை ஆகியோர் குறுகிய கால இடைவெளியில் (இரண்டு கிழமைகள்) இறைபதம் எய்தியதால் ஆலய தர்மகர்த்தாகாளிற்கு ஆலயத்திற்கு செல்ல முடியாது “ஆசூசம்” ஏற்பட்டது. ஆலயத்திற்கு செல்ல முடியாது போகவே பிராமணக்குரு தினமும் அப்போதைய ஆலய உரிமைகாரராக இருந்த பூசாரியார் கனகர் தம்பிப்பிள்ளை அவர்களின் வீட்டிற்கு சென்று படலையில் சயிக்கிள் மணி அடிக்க வீட்டில் இருப்போர் ஆலயத் திறப்புகளை ஐயரிடம் ஒப்படைப்பார்கள். ஐயர் பூசை முடிந்ததும் திறப்புகளை திரும்ப பூசாரியார் வீட்டில் கொண்டுவந்து குடுத்துச் செல்வார்.

இந் நிகழ்வினைக் கண்ட பூசகர் தம்பிப்பிள்ளை அவர்களின் மருகன்; பிராமணக்குரு தினமும் வீட்டிற்கு வந்து திறப்பை பெறுவது பிராமண ஐயாவிற்கு சிரமம் என்பதனால் திறப்புகளை தற்காலிகமாக ஆறு மாத காலத்திற்கு பிராமணக் குருவிடமே ஒப்படைத்து திரும்பப் பெறுவதற்கு மற்றைய ஆலய தர்மகர்த்தாக்களிடம் அனுமதி பெற்றார்.

அதன் பிரகாரம் ஆலய திறப்புகளை ஆலயத்திற்கு எடுத்துச் சென்று பல தொண்டர்கள் முகதாவில் அப்போதைய பிராமணக் குருவானநடராசக் குருக்கள் சோமாஸ்கந்த குருக்களிடம் ஒப்படைத்து ஆறு மாத காலத்தில் எல்லாத் திறப்புகளையும் தன்னிடம் ஒப்படைக்கும் படி ஆலய வாசலில் கையளித்தார். அதற்கு பிராமணக்குரு சோமஸ்கந்த குருக்களும் முழுமனதுன் கேட்கும் போது திருப்பித் தருவதாக சம்மதித்து திறப்புகளைப் பெற்றுக் கொண்டார்.

 

ஆனால் ஆறுமாதம் கடந்த பின்னர்; ஆலய பூசை உரிமைகளை மற்றைய தர்மகர்த்தாவிற்கு பாரங் கொடுப்பதற்காக திறப்புகளை திருப்பித்தரும்படி பூசகர் தம்பிப்பிளையின் மருமகன் சோமாஸ்கந்த குருக்களை கேட்ட போது பிராமணகுரு திருப்பணிச்சபையினரைகாரணம் காட்டி திறப்புகளை திருப்பி வழங்க மறுத்துவிட்டார்.

பெரியார் தம்பு சிவசம்பு ஐயா அவர்கள் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற வருடாவருடம் புதிய தலைவர்கள் நியமிக்கப் பெற்றனர். தலைவர்கள் காலத்திற்கு காலம் மாற்றப்பட திருப்பணிச் சபையின் பெயரும் மாற்றமடைந்தது. திருப்பணிச்சபை திருப்பணிப் பரிபாலனசபையாக பெயர் மாற்றமடைந்தது. அதன் பின்னர் பூசகர் கனகர் வேலாயுதம் அவர்களும், பூசகர் கனகர் தம்பிப்பிள்ளை அவர்களும் இறைபதம் எய்தியதும் திருப்பணிப் பரிபாலனசபை ஆலய பரிபாலனசபை என பெயர் மாற்றப் பெற்றது. அதனால் அப்போதய ஆலய தர்மகர்த்தாக்களுக்கும் ஆலய பரிபாலனசபை என பெயர் மாற்றப்பெற்ற திருப்பணிச் சபையினருக்கும் இடையில் உரிமைப் பிரச்சனை எழுந்தது. இதே காலகட்டத்தில் தான் ஆலயத் திறப்புகள் சம்பந்தமான பிரச்சனையும் ஏற்பட்டது.

இதனால்; 1976 ம் ஆண்டு ஆலய ஆதீனகர்த்தாக்களுக்கும், ஆலய திருப்பணி சபையினருக்கும் இடையில் ஏற்ப்பட்ட உரிமைத் தகராறு காரணமாக இவ் ஆலயம் பூட்டப்பெற்று மாவட்ட / மேல் / உயர் நீதிமன்றுகளில்வழக்குகள் நடைபெற்று வந்தன.

1978 ம் ஆண்டு மல்லாகம் நீதிமன்றின் இடைக்கல தீர்ப்பின் பிரகாரம் இவ் ஆலயம் தர்மகர்த்தாக்களினால் திறக்கப்பெற்று பூசைகள் நடைபெற்று வந்தன. பிராமண குருமார் திரும்பவும் பூசை செய்வதை விரும்பாத பொதுமக்கள் சிலர், பூசை செவதற்கு வந்த பிராமண குருமாரை வழிமறித்து வெருட்டியும், தாக்கியும் ஆலயத்திற்கு வரவிடாது தடுத்து ஆலய பூசகர்களை மீண்டும் பூசைசெய்வதற்கு வழி சமைத்துக் கொடுத்தனர்.

சில வருடங்களின் பின்னர் இவ் ஆலயத்தில் மூண்ட கைகலப்பைத் தொடர்ந்து மீண்டும் இவ் ஆலயம் பூட்டப் பெற்று வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

1986 ம் ஆண்டளவில் ஆலயவழிபடுவோர் சபையினால் சமர்பிக்கப்பெற்ற மனுவின் பிரகாரம் இடைக்கால தீர்ப்பு வழங்கப்பெற்று வழிபடுவோர் சபையினரால் மீண்டும் இவ் ஆலயம் திறக்கப்பெற்று சில வருடங்கள் பூசைகள் நடைபெற்றன. மீண்டும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திரும்பவும் ஆலயம் பூட்டப் பெற்றது.

இறுதியாக 1994ம் ஆண்டு வழங்கப்பட்ட மாவட்ட / மேல் / உயர் நீதிமன்ற தீர்ப்பில்;ஆலய ஸ்தாபகர் வேலாயுதர் கனகர் பரம்பரையில் வந்த சிவஸ்ரீ. கந்தையா சதாசிவ குருக்கள், சிவஸ்ரீ. வேலாயுதம் பேரின்பநாத குருக்கள், சிவஸ்ரீ. வேலாயுதம் பாலசுப்பிரமணிய ஐயர் ஆகியோருக்கு இவ் ஆலயம் சொந்தமானது என்றும், அவர்களுக்கு இவ் ஆலயத்தில் பூசைகள் செய்யவும், இவ் ஆலயத்தை பரிபாலிக்கவும், பராமரிக்கவும் முழு அதிகாரம் உண்டு எனவும்; மற்றும் ஆலய வளாகத்தில் உள்ள அசையும் அசையாத சொத்துக்கள் அனைத்தையும் பரிபாலிக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு எனவும் தீர்ப்பு வழங்கப்பெற்றது. இத்தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு அப்போது இலங்கை அரச பொலிசார் (காவல்துறையினர்) யாழ் பிரதேசத்தில் (செயல்பெறாத) இல்லாத காரணத்தால், அப்போது  இப் பகுதிகளில் பொலிஸ்கடமைகளை செய்து வந்த காவல்துறையினர் நீதிமன்ற தீர்ப்பை பொறுப்பேற்று அதனை நடைமுறைப் படுத்தினர்.

ஆலய பூசகர்களோ “இறைவியின்” விருப்பம் எதுவோ அப்படியே நடக்கட்டும் என இறைவியின் தீர்பை எதிபார்த்தனர். கடைசியில் இவ் ஆலயத்தில் நீதி நிலைநாட்டப் பெற்று தீர்ப்பு வழங்கப் பெற்றது. அந்த தீர்ப்பை “ஆலயத்தில் அநீதிக்கு கிடைத்த அடி” என்றும்;“அம்பிகையின் தீர்ப்பு” என்றும் பொதுமக்கள் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டனர். அத்துடன் அம்பிகை சாட்சியாக ஒப்படைக்கப் பெற்ற திறப்புகளை அம்பிகையே திரும்ப பெற்றுக் கொடுத்து; ஆலயத்தில் குளப்பத்திற்கு காரணமாய் இருந்த பிராமணக் குருக்களைஆலயத்தில் இருந்து துரத்தி ஆலய பூசகர்களை திரும்பவும் பூசைசெய்யும் வாய்ப்பினையும் பெற்றுக் கொடுத்தார்.

ஆலய பூசகர்கள் “நல்ல குரு நாதர் எம்மை வருத்தியது கொல்லவல்ல, கொல்லவல்ல, எம்மை நல்வழிப்படுத்தி, தொடர்ந்தும் தம்மை ஆதரித்து பூசைகள் செய்கவே” என எண்ணி மனம் மகிழ்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் ஆலயம் திறக்கப்பெற்று இன்றுவரை திருப்பணி வேலைகளும், நித்திய, விசேஷ, நைமித்திய பூசைகளும் ஆலய ஆதீனகர்த்தாக்களினால் வெகுசிறப்பாக செய்யப்பெற்று வருகின்றன. வடமாகாண ஆலயங்களில் குறிக்கப்பெற்ற நேரத்தில் நேரம் தவறாது பூசைகள் நடைபெறும் ஆலயங்களில் இவ் ஆலயமும் ஒன்றாகும்.

ஆலய பிரதம குருவான “அஹோரசிவம்”, “சைவாச்சார்யா”“சாதகபாஸ்கரன்”, “சிவாகம சாதக பூஷணம்” சிவஸ்ரீ. இன்பராச குருக்கள் அவர்கள் இவ் ஆலய ஸ்தாபகரான பூசகர் வேலாயுதர்-கனகர் அவர்களின் தலைமுறையில் வந்தவராவர். இவர் தென் இந்தியாவில் உள்ளபிள்ளையார்பட்டி வேதாகம குருகுல சேஷ்த்திரத்தில் நான்கு வருடங்கள் ஆச்சாரியார் பயிற்சி பெற்று சமயதீட்க்ஷ, விசேஷதீட்க்ஷ, நிருவாணதீச்க்ஷ, ஆசாரியார்-அபிழ்ஷேகமும் பெற்றதுடன், சைவ ஆகம கிரிகைகளில் பாண்டித்தியமும், ஆறு கருமங்களையும்,மந்திரம், பாவனை, கிரியை என்னும் மூன்றும் வழுவா வண்ணம் பக்தி, சிரத்தையோடு விதிப்படி பூசை செய்யும் வல்லமை பெற்ற“இட்டலிங்கதாரி” என்பது குறிப்பிடத்தக்கது.

சிவஸ்ரீ. இன்பராச குருக்கள் அவர்களினால் மகோற்சவ விழாக்களும், விசேஷ பூசைகளும், அவ்வப்போது நித்திய பூசைகளும் செய்யபபெற்று வருகின்றன. இவ் ஆலயத்தில் மூத்த குருமார்களான கிரியா பூஷணம்” சிவஸ்ரீ. வேலாயுதம் பேரின்பநாத குருக்கள் அவர்களால் ஆலய நித்திய பூசைகளும், விசேஷ பூசைகளும் நடாத்தப் பெறுவதுடன் “சிவபூஜா துரந்தர்” சிவஸ்ரீ. வேலாயுதம் பாலசுப்பிரமணிய ஐயா,“தொண்டு மாமணி” சிவஸ்ரீ. சதாசிவக் குருக்கள் அற்புதராஜ ஐயர், சிவஸ்ரீ. பாலசுப்பிரமணிய வெங்கடேஸ்வர ஐயர், ஆகிய ஆலய பூச்கர்களினாலும் அவ்வப்போது நித்திய பூசைகள் செய்யப் பெற்றும் வருகின்றன.

வருடாந்த மகோற்சவ விழா பன்னிரண்டு தினங்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வந்தன. 2010 ஆம் ஆண்டிலிருந்து ஆகம விதிகளுக்கைய இவ் மஹோற்சவிழா பதினைந்து தினங்களாக அதிகரிக்கப் பெற்றுள்ளன. கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகும் இவ் விழாவின் தற்பொழுது பன்னிரண்டாவது நாள் வேட்டைத் திருவிழாவும், பதின்மூன்றாவது நாள் சப்பறத் திருவிழாவும், பதின்நான்காவது நாள்தேர்த்திருவிழாவும், பதினைந்தாவது நாள் தீர்த்த திருவிழாவும் நடைபெற்று நிறைவு பெறுகின்றது.

தீர்த்த உச்சவம் அம்பிகை பூப்பெய்திய தினமான “ஆடிப்பூரம்” தினத்தில் நடைபெறுவதால் அத் தினத்தை ஆதாரமாக கொண்டு கொடியேற்ற விழாவுக்கான தினம் தீர்மானிக்கப்பெறுகின்றது. (அத்துடன் தீர்த்த உச்சவம் காலைப்பொழுதில் நடைபெறுவதால் “பூரம் நட்சத்திரம்” காலைப் பொழுதில் உதயமாகி உள்ளதா என்பது கவனத்தில் கொள்ளப் பெறுகின்றது).

இவ் ஆலயத்தில் மகோற்சவ விழா மட்டுமின்றி மார்கழி நோன்பு, நவராத்திரி விழா, கேதார-கௌரி நோன்பு, சுமங்கலி நோன்பு, தைப்பூச விழா, சிவராத்திரி விழா, வருடப்பிறப்பு விழா போன்ற விசேஷ விழாக்களும், நவக்கிரகங்களின் இடப்பெயற்சியால் ஏற்படும் கிரகதோஷ நிவர்த்தி பூசைகளும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பிரதி வெள்ளிக் கிழமை தோறும் விசேஷ பூசைகள் நடைபெற்று வருவதுடன் மாலைப் பூசையைத் தொடர்ந்து ஆலய ஓதுவார் குழுவினரால் பஜனைகள் நடாத்தப்பெற்று பிரசாதம் வழங்கப்பெறுகின்றன. இவை தவிர ஆடி அமாவாசை, சித்திரா பறுவம் (பூரணை) போன்ற விசேஷ தினங்க்ளில் விசேஷ பூசைகளும் நடைபெற்றுவருகின்றன.

பணிப்புலம் சிற்றூரில் வடக்குப் பக்கமாக உள்ள சாந்தையில் சித்தி விநாயகர் ஆலயமும், கிழக்காக உள்ள காலையடியில் ஞான வேலாயுத சுவாமி ஆலயமும் அதனோடு இணைந்து சிவன் ஆலயமும், தெற்கே உள்ள காலையடி- தெற்கில் ஞான பைரவர் ஆலயமும்,“பறாளாய்” திடலில் விநாயகர், முருகன் ஆலயங்களும்; தென்-மேற்கே உள்ள சுளிபுரம்-கிழக்கில் கண்ணகி அம்பாள் ஆலயமும், மேற்கே உள்ள சுளிபுரம்-கிழக்கில் சம்புநாத ஈஸ்வரர் மற்றும் காடேறி பைரவர் ஆலயங்களும் சூழ்ந்திருக்க அருள் மிகு முதுமாரி அம்பாள் மையப்பகுதியில் வீற்றிருந்து அருள் பாலித்துக் கொண்டிக்கின்றார்.

ஆலயத்தின் அமைப்பு:
இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் வீற்றிருக்கின்றார். உள்பிரகாரத்தில் வலது பக்க மூலையில் கிழக்கு நோக்கியவாறு விநாயகப் பெருமானும், இடது பக்க மூலையில் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானும், கிழக்கு பிரகாரத்தின் மணிக் கோபுரத்துடன் பைரவர் மூர்த்தியும், கருவறை கோமுகைக்கு அருகில் தெற்கு நோக்கியவாறு சண்டேஸ்வரியும், தம்ப மண்டபத்திற்கு வடக்குப் பக்கத்தில் நவ-கிரகங்ளும் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளன. வசந்த மண்டபமும் விசாலமானதாக அமைக்கப்பெற்றுள்ளதுடன் அங்கு அம்பாள்; விநாயகர், சுப்பிரமணியர் சகிதம் காட்சி கொடுத்து அருள் புரிகின்றார். மகாமண்டபத்தில் தெற்கு திசையை நோக்கிய வாறு ஆலய ஸ்தாபகரினால் ஆரப்பகாலத்தில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பெற்ற அம்பிகைலிங்கேஸ்வரர் சமேதராய் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றார்.

இவ் ஆலயத்தின் வெளிப் பிரகாரம் பசுமை மிகு ஆல், அரசு, வெம்பு போன்ற விருட்சங்களினாலும், வில்வம், நித்திய கல்யாணி, அரளிபோன்ற பூ மரங்களினாலும் சூழப்பெற்று செழுமையான சோலைக்குள் அம்பாள் ஆலயம் இருப்பது போல் காட்சியளிக்கின்றது. அத்துடன் ஆலய வாசலில் நிற்கும் மிக முதுமை வாய்ந்த வெள்ளரச மரம் ஆலயத்தின் பழமையை எடுத்தியம்புகின்றது. வெளிப்பிரகாரத்தின் கிழக்கு பகுதியில் வெள்ளரசமரத்துடன் பைரவர் மூர்த்தியும், வட-கிழக்கில் தேரும்-தேர்முட்டியும், கிழக்கு வீதியில்“அன்னபூரணி” அன்னதான மடமும், கிழக்கு மூலயில் அம்பாள் சனசமூக நிலைய கிராம முன்னேற்றச் சங்கமும் அமைந்துள்ளது. ஆலய வடக்கு வீதிகளிற்கு (உள் வீதிக்கும் வெளிவீதிக்கும்) இடையில் ஆலய தர்மகர்த்தாவின் வாசஸ்தலமும் அமைந்துள்ளது.

இராஜ-கோபுரமும் அதனோடு இணைந்த மணிமண்டபமும்:
ஆலய பிரதான வாயிலில் ஐந்து தளங்களைக் கொண்ட இராஜ கோபுரமும் மணிமண்டபமும் அமைந்துள்ளது.  வெளிநாடுகளில் வசித்து வந்த திரு. இராசையா சிவபாதம் அவர்களையும், திரு. சுப்பிரமணியம் கங்காதரன் அவர்களையும், திரு. கணபதிப்பிள்ளை கனகரத்தினம் அவர்களையும் ஒன்றாக தன் மகோற்சவ விழாவைக் காண வரவழைத்த இறைவி; அவர்களின் உள்ளத்தில் இராசகோபுர உணர்வை உருவாக்கி அது அமைவதற்கான ஆயத்தங்களையும், பொறுப்புக்களையும் தகுதியானவர்களிடம் ஒப்படைக்கச் செய்து அதனை உரிய முறையில் அமைவதற்கும் அருள் புரிந்தார்.

ஐந்து தளங்களைக் கொண்ட இராஜ கோபுரமும் மணிமண்டபமும் அமைப்பதற்கு வேண்டிய பணத்தை வெளிநாடுகளில் வாழும் அம்பிகை அடியார்களிடம் இருந்து சேகரித்து தருவதாக நோர்வே நாட்டில் வாழும் திரு. இராசையா சிவபாதம் அவர்களும், டென்மாக் நாட்டில் வாழும் திரு. சுப்பிரமணியம் கங்காதரன் அவர்களும், கனடா நாட்டில் வாழும் திரு. கணபதிப்பிள்ளை கனகரத்தினம் அவர்களும் ஆலய தர்மகர்த்தாகளிடம் ஒப்புக்கொண்டு கேட்டுக் கொண்டதற் இணங்க ஆலய தர்மகர்த்தாக்களினால் இத் திருப்பணியை பொறுப்பேற்று நடாத்துவதற்காக ஒரு திருப்பணிக் குழு நியமிக்கப்பெற்றது.

அதன் பிரகாரம்; திரு. இராசையா பாலசுப்பிரமணியம் அவர்களை தலைவராகவும்திரு. பொன்னம்பலம் சூரசங்காரன் (சமாதான நீதிவான்) அவர்களை நிதிப் பொறுப்பாளராகவும், சிவஸ்ரீ. வேலாயுதம் பாலசுப்பிரமணிய ஐயர் அவர்களை திருப்பணி மேற்பார்வையாளராகவும், அவர்களுடன் ஆறு உதவி அங்கத்தினரயும் கொண்ட இராஜ-கோபுர திருப்பணிக் குழு 2003 ம் ஆண்டு நியமிக்கப்பெற்றது.

இத் திருப்பணிக் குழுவினர் இவ் ஆலய திருப்பணிகளை ஆரம்பிப்பதற்கு முதல் கட்டமாக பல சிவாலய நிர்மாண வல்லுணர்களிடமும், சிவாகம சாஸ்திர சிற்பாச்சாரியார்களிடமும் ஆலோசனைகள் பெற்றுக் கொண்டனர். அத்துடன் அம்பிகையின் அருளினால் வெளிநாடுகளில் பணம் சேகரிப்பதற்கு பல தொண்டர்கள் முன்வந்து உழைத்ததினால் திருப்பணி வேலைகள் உடனடியாக ஆரம்பமாகியது.

இவ் இராசகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு (பூமி பூசை) விழா 05.02.2010 திங்கட்கிழமை, அமைந்த சுப முகூர்த்த வேளையில் ஊர்த் தொண்டனும், கல்விமானும், இவ்வாலயத்தின் திருப்பணி சபைத் தலைவராக தொண்டாற்றிய, “தொண்டர்” கு. வி. கந்தசாமி அவர்களால் அடிக்கல் நாட்டப் பெற்று கோபுர திருப்பணி வேலைகள் உடனடியாக ஆரம்பித்து வைக்கப்பெற்றன.

ஆலய ஆதீனகர்தாக்களின் மேற்பார்வையின் கீழ் இராஜ-கோபுர திருபணி குழுவினரின் பெரும் தொண்டுடன் குறிப்பாக நிதிப் பொறுப்பாளராக இருந்த திரு.பொன்னம்பலம் சூரசங்காரன் அவர்களின் முழுநேர அற்பணிப்புடன் தென்-இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட “ஸ்ரீ லோகோஸ் இன்ரநஷனல்” கோபுர சிற்பாச்சாரிகளினால் ஐந்து தளங்களைக் கொண்ட இராச-கோபுரமும், மணிமண்டபமும் நிர்மாணிக்கப் பெற்றதுடன், பழுதடைந்து இருந்த கருவறையின் ஸ்தூபியும் ஆகம விதிகளுக்கு அமைய திருத்தி அமைக்கப்பெற்று; கடந்த 2006 ம் ஆண்டு யூன் மாதம் (28) இருபத்தெட்டாம் திகதி மூல மூர்த்தியாகிய அம்பிகைக்கும், பரிவார தெய்வங்களுக்கும், இராஜ-கோபுரத்திற்கும் (குடமுழுக்கு) “புனஸ்வர்த்தம்” மகாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இத் திருப்பணி இனிதே நிறைவு பெற அம்பிகையின் அருளினால் உள்ளூர் அடியார்களும் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பக்தர்களும் வாரி வழங்கிய நன்கொடைகளும், உதவிகளும், ஒத்துழைப்புகளும் (அவுஸ்திரேலிய நாட்டில் இருக்கும் பெரியார் நவரத்தினம் அவர்களின் நன்கொடையும்) அம்பிகையின் ஆலயத்தில் அடையாளச் சின்னமாக காட்சியளிக்கின்றன.

ஆலய திருப்பணிக்கென வழங்கப பெற்ற நன்கொடைகளையும், ஏலவிற்பனையில் கிடைக்கப் பெற்ற நிதியையும் கொண்டு ஆலய தர்மகர்த்தாக்களினால் ஆலய திருப்பணி வேலைகள் செய்யப்பெற்று வருகின்றன. தற்பொழுது ஆலய உள்பிரகாரம் முழுவதும் கொட்டகைகள் அமைக்கப்பெற்றுள்ளன.

 

சித்திர தேர்த் திருப்பணி:
மஹோற்சவ காலத்தில் தேர் உற்சவத்தின் போது அம்பிகை வீதி வலம் வரும் தேரானது மிகவும் பழைமையானது. அதன் சில்லுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதனால் புதிய சித்திரத் தேர் அமைப்பதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப் பெற்றுள்ளன. அத் திருப்பணியினை முன் நின்று செய்விப்பதற்காக திருப்பணிக் குழு நியமனம் பெற்றதும், பொதுமக்களிடம் இத் திருப்பணிக்கான நன்கொடைகள் சேகரிக்க அனுமதி வழங்கப்பெற உள்ளதாக ஆலய தர்மகர்த்தாவினர் தெரியத் தந்துள்ளனர். அத் திருப்பணியும் இனிதே நிறைவுபெற எல்லாம் வல்ல எம்பிராட்டியை பிரார்த்திப்போமாக.

இத்திருப்பணிக்கு தாங்கள், தங்கள் நேர்த்திகளாக இச் சித்திரத்தேரின் ஒரு பகுதியை (சில்லுகள், தளம், மேற்பகுதி, மணிகள், கலசம், தேர்முட்டி போன்றவைகள்) நிறை வேற்றுவதாகற்கான பொறுப்பாகவோ, பொருட்களாகவோ அல்லது தங்களால் இயன்ற நிதி நன் கொடையாகவோ அமையலாம். நேர்த்திகள் செய்ய விரும்பும் அடியார்கள் தங்கள் நேர்த்திகளை முன் கூட்டியே பணிப்புலம்.கொம் மூலம் வெளிப்படுத்தினால்; அப் பொறுப்பை ஏற்க இருக்கும் திருப்பணிக் குழுவினருக்கு சித்திரத் தேரின் சிற்பங்களை, வேலைகளை திட்டமிட்டு செயல்பெறச் செய்ய வசதியாக அமையும் என்பதனையும் அறியத் தருகின்றோம்.

இறைவியின் அற்புதம்.
பசுவின் பாலைக் கறந்தெடுப்பதற்கு நாம் பல முறைகளை கையாளுகின்றோம். பசுக்கன்றை ஊட்டவிட்டு பால் கறப்பது சாதாரண மக்கள் செயும் பொதுவான ஒரு முறையாகும். ஆனால் பசுக்கன்று இல்லாது பசுவில்பால் கறந்தெடுப்பவர்களும் இருக்கிறார்கள். அதற்கு பல அனுபவங்களும் நுணுக்கங்களும் தெரிந்திருக்க வேண்டும்.

கன்றை விட்டு பால் கறப்பது எப்படி எனறு பார்ப்போம்; பசுவையும் கன்றையும் ஒன்றாக விடாது ஒரே இடத்தில் ஒன்றை ஒன்று பார்க்கக் கூடியதாக கட்டிவைப்பார்கள்.  பால் கறக்கும் நேரம் வந்ததும் பசுவுக்கு கொஞ்சப் புல்லோ, வைக்கோலோ போட்டு, கன்றை பால் ஊட்ட விடுவார்கள்.. கன்றானது தாய் பசுவிடம் சென்று பால் குடிக்க முலைக்காம்புகளைச் சூப்பும்.  சில வேளைகளில் பால் வராது போகவே தாய்ப் பசுவின் மடியை(முலையை) இடித்து “ம்பா” “ம்பா” என்று கத்தும். தாய்பசு கன்றுக்குட்டியை தலையால் அரவணைத்து நக்கும். அப்பொழுதுதான் மடி இரங்கி பால் சுரக்கும். பால் சுரந்ததும் கன்றுக்குட்டியை சிறிது குடிக்க விட்டு பின் கன்றை விலக்கி பாலை கறந்தெடுப்பார்கள். பசுவானது பால் இரங்காவிட்டால் கன்றுக் குட்டிக்கு பால் வராது. எமக்கும் கறந்தெடுப்பதற்கு பால் இருக்காது. பசுவில் பால் இரங்க வேண்டுமாயின் பசு தன் கன்றுக்குட்டியை நக்கி அன்பு காட்ட வேண்டும். வேறு ஒரு பசுவின் கன்றாக இருந்தால் முகர்ந்து பார்த்து இடித்துத் தள்ளிவிடும். இவை நாம் அனுபவத்தில் கண்ட உண்மை.

தாய்ப்பசுவிடம் பாலை இரங்கப் பண்ணுவதற்காகவே கன்றுக்குட்டி“ம்பா” நான் உனது கன்று வந்திருக்கிறேன் பால் தாருங்கள் அம்மா என்று கூறிக் கொண்டே தாய்ப்பசுவிடம் ஓடுகின்றது. பால் இன்னமும் வரவில்லையே என தாய்ப்பசுவுக்கு உணர்த்த மடியில் இடிக்கின்றது. அப்போது பால் சுரக்க கன்று ஆனந்தத்துடன் குடிக்க ஆரம்பிக்கின்றது. கன்றுக்குட்டி பசுவின் சொந்தக் கன்றாயின்பசுவானது மடி இரங்கி பால் சுரக்கின்றது. அது வேறு ஒரு பசுவின் கன்றாக இருந்தால் கன்றுக்கு இடியும் மூசுதலும்தான் கிடைக்கும்.

மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியை, ஒரு ஆலயதில் நடைபெறும் பூசைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது பல உண்மைகள் எமக்குப் புரியும். பசு மாட்டை ஆலயமாகவும், பசுவின் கன்றை ஒரு குருவாகவும், பசுவிற்கு இரை போடுவதை பிரசாதம் படைப்பதாகவும், கன்று கத்துவதை மந்திரமாகவும்பூசைக் கிரியைகளும் மணி, மேளதாள ஓசைகளையும் கன்று தாயை இடித்து அன்பு காட்டுவதாகவும், பசுவின் பாலை இறைவனின் அருளாகவும், ஒப்பனை செய்யுங்கள். பால் சுரந்ததும் கன்றுக்குட்டி விலகிச் செல்ல அதனை வளர்த்தவர் கறந்தெடுப்பது போல்,குருவானவர் மந்திரம், பாவனை, கிரியை என்பவற்றின் மூலம் இறையருளைச் சுரக்கச் செய்ய பக்தர்கள் தங்கள் பக்திக்கு ஏற்றவாறு அருள் பெற்றுக் கொள்கின்றனர். அத்தோடு தானாகவே இறையருள் பெறக்கூடியவர்கள் சித்தர்கள், யோகிகள், ஞானிகள் என்றும் கூறலாம்..

ஒரு பசுவானது தனது சொந்தக் கன்றை எப்படி ஆதரித்து பால் சுரக்கின்றதோ, அதேபோல பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும் பரம்பரை குருவானவர் கிரியைகள் செய்யும் போது அம்பிகை மனம் குளிர்ந்து அருளை வாரி வழங்குகின்றாள். அதனை அள்ளிப் பருக வரும் பக்தர்களுக்கு அங்கு ஒரே கொண்டாட்டம்.

அதனால் போலும் பணிப்புலம் முத்துமாரி அம்பிகையின் அருள் பெற நேர்த்தி வைத்து விரதமிருப்போரும், உபயங்கள் செய்வோரும், திருப்பணிகள் செய்வோரும், தொண்டு செய்வோரும் அதிகரித்து செல்கின்றனர். எல்லாம் அந்த இறைவியின் அற்புதம்.

 

“அம்மாளே என மனமுருகி அழைத்தால் தாயாக வந்து அரவணைப்பாள்”

“மாயவினை தீர்த்தருளும் தாயே போற்றி
மன்னுபுவி காத்த மலைமகளே போற்றி
தூய புகழ் விளங்கு பணிப்புலத்து மேவும்
சோதி முத்துமாரியம்மா போற்றி போற்றி”

 

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே

“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்”

“இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க”

ஓம் சக்தி ஓம்

 

கணபதிப்பிள்ளை கனகரத்தினம்

பணிப்புலம்
பண்டத்தரிப்பு

10.10.2008

 

 

 

துர்க்காதேவியே போற்றி

ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் அபிராமியே போற்றி 
ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி

ஓம் அம்பிகையே போற்றி 
ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி
ஓம் அன்பின் உருவே போற்றி
ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி

ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி
ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆற்றல் தருவாய் போற்றி

ஓம் இமயவல்லியே போற்றி
ஓம் இல்லறம் காப்பாய் போற்றி
ஓம் இரு சுடர் ஒளியே போற்றி
ஓம் இருளை நீக்குவாய் போற்றி

ஓம் ஈசனின் பாதியே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உமையவளே போற்றி
ஓம் உளைமான் கொண்டாய் போற்றி

ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி
ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி

ஓம் என் துணை இருப்பாய் போற்றி
ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் எம்பிராட்டியே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி

ஓம் ஐமுகன் துணையே போற்றி
ஓம் ஐயுறு தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒளிர்வு முகத்தளவே போற்றி
ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி

ஓம் கங்காணியே போற்றி
ஓம் காமாட்சியே போற்றி
ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி

ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கற்பூர நாயகியே போற்றி
ஓம் கற்பிற்கரசியே போற்றி
ஓம் காம கலா ரூபிணியே போற்றி

ஓம் கிரிசையே போற்றி
ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி
ஓம் கூர்மதி தருவாய் போற்றி

ஓம் குவலயம் ஆள்பவளே போற்றி
ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி
ஓம் குமரனின் தாயே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி

ஓம் கொற்றவையே போற்றி
ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி
ஓம் கோமதியே போற்றி 
ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி

ஓம் சங்கரியே போற்றி
ஓம் சாமுண்டேஸ்வரியே போற்றி
ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி
ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி

ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சாபம் களைவாய் போற்றி
ஓம் சிம்ம வாகனமே போற்றி
ஓம் சீலம் தருவாய் போற்றி

ஓம் சிறு நகை புரியவளே போற்றி
ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் சுந்தர வடிவழகியே போற்றி
ஓம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி

ஓம் செங்கதி ஒளியே போற்றி
ஓம் சேவடி பணிகிறேன் போற்றி
ஓம் சோமியே போற்றி
ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி

ஓம் தண்கதிர் முகத்தவளே போற்றி
ஓம் தாயே நீயே போற்றி 
ஓம் திருவருள் புரிபவளே போற்றி
ஓம் தீங்கினை ஒளிப்பாய் போற்றி

ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி
ஓம் திசையெட்டும் புகழ் கொண்டாய் போற்றி
ஓம் தீரம் அளிப்பாய் போற்றி

ஓம் துர்க்கையே ! அம்மையே போற்றி
ஓம் துன்பத்தை வேரறுப்பாய் போற்றி
ஓம் துணிவினைத் தருவாய் போற்றி
ஓம் தூயமனம் தருவாய் போற்றி

ஓம் நாராயணியே போற்றி
ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் நிந்தனை ஒழிப்பாய் போற்றி
ஓம் பகவதியே போற்றி

ஓம் பவானியே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாக்கியம் தருவாய் போற்றி
ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி

ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி
ஓம் புகழினை அளிப்பாய் போற்றி
ஓம் பூஜிக்கிறேன் துர்க்கா போற்றி
ஓம் பொன்னொளி முகத்தவளே போற்றி

ஓம் போர்மடத்தை அளிப்பாய் போற்றி
ஓம் மகிஷாசூரமர்த்தினியே போற்றி
ஓம் மாதாங்கியே போற்றி
ஓம் மலைமகளே போற்றி

ஓம் மகாமாயி தாயே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
ஓம் தவன் தங்கையே போற்றி
ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி

ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் வேதவல்லியே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே போற்றி

ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே போற்றி
ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் துர்க்காதேவியே போற்றி

 

மதுரை மீனாட்சி அம்பாள் தேவஸ்தானத்தில் அடியார்கள் தோத்திரம் செய்வதற்காக எழுதப் பெற்றிருக்கும்
அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்களை நாமும் பாடி இஷ்ட சித்திகளைப் பெற்றுய்வோமாக.

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
ஓம் அரசிளங்குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுதநாயகியே போற்றி
ஓம் அருந்தவநாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி 10

ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈசுவரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி 20.

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி 30.

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக்குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி 40.

ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி 50.

ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்தவல்லியே போற்றி
ஓம் சிங்காரவல்லியே போற்றி
ஓம் செந்தமிழ் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
ஓம் சேனைத்தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி 60.

ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி அம்மையே போற்றி 70.

ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி 80.

ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன்மயில் அம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி 90.

ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் மழலைக்கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்கவல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி 100.

ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
ஓம் வடிவழகு அம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேதநாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி 108.

 
By – Shutharsan.S

நன்றி -ஆக்கம்: திரு. கணபதிப்பிள்ளை கனகரத்தினம் (கனடா)

மூலம்- http://panippulam.comஇணையம்

Sharing is caring!

Add your review

12345