பத்மா சோமகாந்தன்

பத்மா சோமகாந்தன்

பாடசாலை அதிபராக இருந்து ஓய்வு பெற்ற திருமதி பத்மா சோமகாந்தன் நல்லூர் பிரதேச ஓட்டுமடம் கிராமத்தில் வாழ்ந்து தற்பொழுது பத்திரிகையாளராக பணிபுரியும் பொருட்டு கொழும்பில் வாழ்ந்து வருகிறார். ஈழத்தின் பத்திரிகைகளில் பல சாதனைகளையும், எழுத்தாளர்களையும் உருவாக்கிய சுதந்திரன் வாரப் பத்திரிகை ஈழத்தில் முதன் முதலாக 1954 ம் ஆண்டு ஒரு சிறுகதைப் போட்டியொன்றை நடாத்தியது. அப்போட்டியில் முதற்பரிசினைப் பெற்று ஈழத்தின் இலக்கிய உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர். எழுத்துத் துறையில் மட்டுமல்லாமல் மேடைகளில் உரையாற்றுவதிலும் தன் திறமையை வெளிக்காட்டியவர். இவர் ”புதுமைப்பிரியை” என்னும் புனைபெயரில் ஈழத்துப் பத்திரிகைகளில் எழுதி வந்தார்.

கடவுளின் பூக்கள், புதிய வார்ப்புக்கள், வேள்வி மலர்கள், மாண்புறு மகளிர் (புகழ் பூத்த ஈழத்துப் பெண்களின் வரலாறு), அனுமன் கதை, ஆகிய நூல்களை வெளியிட்டுள்ள பத்மா சோமகாந்தன் ”பெண்ணின் குரல்” என்னும் மகளிர் சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்குகிறார். இவர் கரம் பிடித்த அமரர் என். சோமகாந்தன் அவர்கள் ஈழத்தின் பிரபல எழுத்தாளர். இவர் வாழ்ந்த காலத்தில் தன் மனைவிக்கு வாழ்க்கையில் மட்டுமல்லாது எழுத்துத் துறையிலும் துணையாக இருந்தார். இவர் ”ஊடறு” தமிழ் ஊடகப் பெண்கள் அமைப்பின் தலைவியாகவும் இருந்து வருகிறார். இவர் வீரகேசரிப் பத்திரிகையில் 2002ம் ஆண்டு இறுதிப் பகுதியிலிருந்து 2005ம் ஆண்டு முற்பகுதிவரை வாராவாரம் எழுதிவந்த ”நெஞ்சுக்கு நிம்மதி” என்னும் கேள்வி பதில் நிகழ்ச்சி மூலம் பல வாசகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாண மண்ணில் புரையோடிப் போயிருந்த சாதிப் பிரச்சினைகளை தன் சிறுகதைகளில் எழுதி வந்த பத்மா சோமகாந்தன் மகளிர் முன்னேற்றம் குறித்து இலக்கியங்கள் படைப்பதில் ஆர்வமுள்ளவராகவும் செயற்பட்டு வந்தார்.

ஈழநாட்டில் மட்டுமல்லாது இந்திய நாட்டின் தமிழ் நாட்டிலும் புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாட்டிலும் தனது இலக்கிய காலடிகளை பதித்துள்ள பத்மா சோமகாந்தன் பல பரிசில்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு ”இலக்கிய கலாவித்தகி”, ”செஞ்சொற்செல்வி” முதலிய கௌரவப் பட்டங்கள் சூட்டப்பட்டிருப்பது பொருத்தமானதே. முற்போக்குச் சிந்தனை உள்ள இவர் 2005 ம் ஆண்டு வீரகேசரியில் எழுதி வந்த இளம் பெண்களது பிரச்சினைகளின் தீர்வுக்கான ஆலோசனைகளைத் தொகுத்து ”நெஞ்சுக்கு நிம்மதி” என்னும் நூலை வெளியிட்டுள்ளார்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345