பாண்டிருப்பு

பாண்டிருப்பு

பாண்டவருக்கும் திரௌபதைக்கும் ஆலயம் அமைத்ததால் உருவான பெயரே பாண்டிருப்பு. பாரம்பரிய புகழ்மிக்க தீப்பள்ளம் உற்சவம் இவ்வார முடிவில் நிறைவு.

இற்றைக்கு பல்லாண்டு காலத்துக்கு முன் மாருதசேன அரசனின் மகன் எதிர்மன்னசிங்கம் என்னும் அரசன் மட்டக்களப்புப் பிரதேசத்தை சம்மாந்துறை என்னும் இடத்தில் இராஜ தானியாக அமைத்து ஆட்சி புரிந்து வந்தான்.

அக்காலகட்டத்தில் வட நாட்டில் உள்ள கொங்கு நகரிலிருந்து வைசிய குலத்தைச்சேர்ந்த தாதன் என்னும் விஷ்ணு பக்தர் இலங்கையில் உள்ள புனிதத் தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், கதிர்காமம் போன்ற தலங்களைத் தரிசிக்கும் நோக்கத்தோடு வந்து தரிசித்த பின் அந்த ஆலயங்களில் தங்கி பஞ்ச பாண்டவர்களுடைய வரலாற்றைப் பாடிக்காட்டினார்.

அதன் பின் கதிர் காமத்துக்கும் சென்று வழிபட்டு பாண்டவர் வரலாற்றைப் பாடிக்காட்டி குமணை வழியாக நாகர் முனை என்று அழைக்கப்பட்ட திருக்கோயிலை வந்தடைந்தார்.

திருக்கோயில் முருகன் ஆலயத்தினைப் பரிபாலிப்பதற்குச் சென்ற திக்காதிபதியாக இருந்த நற்பிட்டிமுனையைச் சேர்ந்த வீமாப்போடி என்பவரிடம் தாதன் கொண்டு வந்த மஹாபாரத வரலாற்றைப் பாடிக்காட்டி பக்தர்களைப் பரவசப்படுத்திய தன்மையைக் கண்ட திக்காதிபதி வீமாப்போடி அவர்கள் அவரை அணுகி குசலம் விசாரித்து தனது பகுதியில் திரெளபதை அம்மன் ஆலயம் அமைத்து மஹாபாரதத்தின் சிறப்புக்களை ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் பெருமைகளையும் விளக்கிக் காட்ட வேண்டும் என்று கேட்டதன் பிரகாரம் தாதன் மன மகிழ்ச்சியோடு அம்மனின் ஆலயம் அமைய வேண்டிய இடத்தை தெரிவு செய்யும்படி வீமாப்போடி திக்காதிபதியை வேண்ட அவரும் மனமகிழ்வு கொண்டவராய் கடலை அண்டியதும், ஆல், அரசு, கொக்கட்டி போன்ற மரங்கள் அடர்ந்து காணப்பட்ட ஆலஞ்சோலை என்னும் இடத்தை (தற்போதைய பாண்டிருப்புக் கிராமம்) தெரிவு செய்து கொடுத்தார். பாண்டவர்களுக்கும், திரெளபதை தேவிக்கும் ஆலயம் அமைக்கப்பட்டதனாலேயே பாண்டிருப்பு என்ற பெயர் வந்தது.

அவ்விடத்திலேயே இருந்த கொக்கட்டிய மரத்தடியில் அட்ஷரத்தைப் பதித்து திரெளபதை அம்மன் சிலையையும், விஷ்ணு சிலையையும் வைத்து வணக்க முறைகளைக் கொண்டு வணங்கி பூசைகளையும் நடாத்தினார். தாதன் வகுத்த பூசைகள் வருடம் ஒரு முறை பதினெட்டு நாட்கள் புரட்டாதி மாதம் வரும் அமாவாசையில் வரும் செவ்வாய்க்கிழமை அல்லது அமாவாசையை அண்டி வரும் செவ்வாய்க்கிழமை கொடியேற்றி பதினெட்டாவது நாள் வெள்ளிக்கிழமை தீமிதிப்பு நடைபெறும்.

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் உற்சவத்திலே ஏழாம் நாள் பாண்டிருப்பு ஶ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து கிருஷ்ண பகவானை எழுந்தருளப் பண்ணுதலும், பன்ரெண்டாம் நாள் கலியாணக்கால் வெட்டுதல், பாண்டிருப்பு வடக்கில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் மருதமுனைக்கு அருகாமையில் இருக்கும் கொஸ்தாப்பர் வளவிலிருந்து மேற்படி கலியாணக்கால் வெட்டிக்கொண்டு வருவது சிறப்பான நிகழ்ச்சியாகும். மேற்படி நிகழ்வின்போது தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து சிறப்பிப்பது விசேட அம்சமாக்கும்.

பதின்மூன்றாம் நாள் தோரண அலங்காரப்பூசையும் பதினான்காம் நாள் மஹாவிஷ்ணுவைத் தோத்திரம் செய்யும் பூசையும், பதினாறாம் நாள் புதன்கிழமை வனவாசம் செல்லும் நிகழ்ச்சியும் இடம்பெறும். பதினேழாம் நாள் அருச்சுனர் சிவபெருமானைத் தியானித்து தவம் செய்து பாசுபதாஸ்திரம் பெற்றுவர தவத்துக்குப் போகும் நிகழ்ச்சி இடம்பெறும்.

பதினெட்டாம் நாள்  தீமிதிப்பு வைபவம். கடலில் குளித்து மஞ்சள் பூசித் தீக்குளியை வலம்வந்து கமுகம்பூ, அரிசி கலந்து அக்கினியில் இட்டு தருமர், பூசகர் ஏனைய கொலுவிருக்கும் அனைவரும் தீமிதிக்கும் வைபவம் பார்ப்போர், மனதில் பக்திப் பரவசமூட்டும் நிகழ்ச்சியாகும். இவ்வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இலங்கையின் பலபாகங்களிலும் இருந்து வந்து கலந்து அம்மனின் அருள்பெற்றுச் செல்வார்கள்.

பத்தொன்பதாம் நாள்  பால் வார்ப்பு நிகழ்ச்சி இடம்பெறும். அதனைத் தொடர்ந்து மகாவிஷ்ணு மீண்டும் எழுந்தருளி நகர்வலம் வந்து ஶ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தைச் சென்றடையும் நிகழ்ச்சி இடம்பெறும். இந்தப் பதினெட்டு நாட்களும் மகாபாரத பாராயணம் அறிஞர்களால் நடாத்தப்படுதல் விஷேட அம்சமாகும்.

பாண்டிருப்பு திரௌபதையம்மன் வழிபாடும் சிறப்பும்

பாண்டிருப்பு

கிழக்கு மாகாணத்தின் பாண்டிருப்பு என்னும் கிராமத்தில் திரெளபதை அம்மன் வழிபாடும் இற்றைக்கு 400 வருடங்களுக்கு முன்பிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

பாண்டியூர் மக்கள் திரெளபதை அம்மனுக்கு வருடாவருடம் 18 நாட்கள் அலங்கார உற்சவம் எடுத்து, விரதம் அனுட்டித்து அன்னையின் அருளைப் பெற்று வருகின்றனர்.

இக்கோயிலுக்கும் பஞ்சபாண்டவர்களுக்கும் நிறையவே தொடர்புகள் இருப்பதால் இக்கோவில் இருக்கும் ஊரும் பாண்டிருப்பு என அழைக்கப்படலாயிற்று. பாண்டவர் கதையைப் பிரதிபலிக்கத் தொடங்கிய காலம் முதல் முன்னர் ஆலஞ்சோலையாக இருந்த கிராமம் “பாண்டிருப்பு” என வழங்கப்படலாயிற்று. அதாவது பாண்டவர் இருப்புக் கொண்ட இடம் பாண்டிருப்பாயிற்று என்பது மரபு.

இவ்வாலயத்தில் பெரிய கோயிற்கோபுரங்களோ தூபிகளோ இல்லை. ஆனால் மகோற்சவ பக்திச் சிறப்பு மிக்கது. கிழக்கு நோக்கிய சந்நிதானம் அம்மனை நோக்கிய வண்ணம் வீரபத்திரர் ஆலயம் என்பன அங்குண்டு. சுற்றுப் பிரகாரங்களில் காடேறி கோயில், கமலகன்னிக் கோயில், பட்டாணி கோயில், வைரவர் கோயில் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன. வீரபத்திரர் கோயிலுக்குப் பின்புறமாக வெளிவீதியில் தீக்குளிக்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாலய வருட உற்சவம் புரட்டாதி மாத அமாவாசைக்கு முன்பின்னாக வரும் செவ்வாய்க்கிழமை கொடியேற்றமும் 18ஆம் நாள்  தீமிதிப்புமாக இடம்பெறும்.

பாண்டிருப்பு

பூசை முறை ஆகமமுறை சார்ந்ததல்ல. பூசை செய்பவர் பூசாரி என அழைக்கப்படுகின்றார். காலைப் பூசையும் மாலைப்பூசையுமே இடம்பெறுகின்றது. பஞ்சபாண்டவர், கிருஷ்ணன், திரெளபதை, காளி, வீரபத்திரர் எனப் பலர் கொலுவிருப்பர். விரதம் அனுட்டித்தே கொலுவிருக்கின்றனர். 18 நாட்களும் இவர்கள் முழுநேரமும் கோயிலிலே தங்கியிருப்பர். எனவே இவர்களைக் கோயிலார் என்பர்.

இவ்வாலயக் கொடியேற்ற நாளன்று பூசையில் உபயோகப்படுத்தும், வில், வாள், பிரம்பு, மணி, தண்டாயுதம், தம்பட்டம், சல்லாரி உடுக்கு, சங்கு, தாரை, சிலம்பு, சக்கரம் என்பவற்றைக் கோயிலார் புடைசூழப் பூசாரிமாருடன் கடலுக்கு எடுத்துச் சென்று கழுவி வந்த பின் கொடியேற்றப்படும். அதைத் தொடர்ந்து காலைப்பூசையும் மாலைப்பூசையும் நிகழும். 18 நாள் உற்சவத்தில் 7ஆம் நாள், 12ஆம் நாள், 16ஆம் நாள், 17ஆம், 18ஆம் நாட் திருவிழாக்களே பக்த அடியார்களைப் பரவசப்படுத்துவனவாக உள்ளன.

7ஆம் நாள் சுவாமி எழுந்தருளச் செய்தல் என்னும் திருவிழா இடம்பெறும். சில பழைய காலத்தில் நீலாவனையில் இருந்து விஷ்ணுவை பாண்டிருப்பு திரெளபதை அம்மன் ஆலயத்துக்கு எடுத்து வருவதாக நடைபெற்றது. விஷ்னு சிலையை அக்காலத்தில் பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலேயே வைத்துப் பூசைசெய்வதாகக் கூறப்படுகின்றது. எனவே திரெளபதை அம்மன் ஆலயத்தில் கொலுவிருக்கும் அனைவரும் கொடி தீவர்த்தி என்பவற்றுடன் வந்து விஷ்னுபகவானை அவரது தேரில் வைத்து எடுத்துச் செல்லும் காட்சி பக்திப்பரவசமானது.

பாண்டிருப்பு

அடுத்த முக்கிய நிகழ்வாக 12ம் நாள் கலியாணக் கால் வெட்டும் திருவிழாவைக் கூறலாம். இன்றைய திருவிழாவில் சமீரக் காட்சி இடம்பெறும். இதற்கென்று வளர்க்கப்பட்டுவரும் பூவரசு மரத்தை கோயிலார் அனைவரும் வந்து பூசை மடைவைத்து மரத்தைச் சுற்றிவந்தபின் 10-15 நீளமுள்ள தடியை வீமன் வெட்டிவிடுவார். அதனை வெள்ளைத் துணியால் சுற்றி பஞ்சபாண்டவர் அலங்கரிக்கப்பட்ட பூப்பந்தலுடன் சென்று, சப்பரம் முன்னே செல்ல தூக்கிக்கொண்டு செல்வர். திரெளபதை அம்மன் ஆலய முகப்பு மண்டபத்துள் வைத்து பல நிறச் சீலைகளைச் சுற்றி அலங்கரித்து விடுவர்.

16ம் நாள் மகாபாரதத்தில் செய்யப்படுவது போல இது வனவாசம் என்படும். அன்றைய தினம் 3-4மணியளவில் கோயிலார் உணவு, உடை எடுத்துச் செல்வது போல் பூசை முடிந்ததும் எல்லோரும் பஞ்சபாண்டவர் போல் அலங்கரித்து வெற்றிலை பழம் பாக்கு முதலியவற்றையும், வில், வாள் சக்கரம் என்பவற்றையும் எடுத்து காடுசெல்வது போல் கோயிலுக்கு மேற்கே செல்வர். பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் நூற்றுக்கணக்கான காவடிகளும், கற்பூரச்சட்டி எடுப்போரும் புடைசூழ இவ்வவைபவம் நடைபெறும். “வாள் மாற்றம் சந்தி’ எனப் பெயர் பெறும் கோயிலின் முன் சந்திக்கு வந்ததும் வீமர் தருமரை வலம் வந்து வாளைப் பெற்று வணக்கிச் சென்றுவிடுவார். ஏனையோர் வனவாசம் செய்யக் காடு செல்வர். வீமர் வாழைக்குலமாங்காய் என்பவற்றை வெட்டி வீழ்த்தி காடுசெல்வோருடன் வந்து சேர்ந்து விடுவார்

Sharing is caring!

Add your review

12345