பேராசிரியர் ஆ.சதாசிவம்

அராலி தெற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆறுமுகம் சதாசிவம் மாவிட்டபுரத்தில் திருமணம் புரிந்து கொண்டார். எனவே அவருக்கு வலிகாமம் வடக்கும் வாழிடமாக அமைந்தது. க.பொ.த. உயர்தரப்பரீட்சையிலே 1947இல் சித்தியெய்தினார். இதே ஆண்டில் மதுரைத் தமிழ்ப்பண்டிதர் பரீட்சையிலும் சித்தியடைந்தார். 1948-1952இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்று சிறப்புக்கலைமாணி முதற்பிரிவில் சித்தியெய்தினார். 1952இல்  பேராதனைப் பல்கலைக்கழகத்தில் துணைவிரிவுரையாளரானார். அங்கு 1954இல் கலைமுதல்வர் (M.A)பட்டம் பெற்றார். 1954-1956இல் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று கலாநிதிப்பட்டம் பெற்றார். 1956முதல் 1965வரை பேராதனையில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் 1965முதல்1980வரை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராவும், தலைவராகவும், பேராசிரியராகவும் பதவிவகித்தார். 1981முதல்1988இல் அமரராகும் வரை பேராதனையில் பேராசிரியராகப் பதவிவகித்தார். இவர் மொழியியலில் தீவிர ஆய்வாளராக விளங்கியதால் உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் புலமைப்பரிசு பெற்றார்.

சமஸ்கிருதம், மலையாளம், பாளி, தெலுங்கு, கன்னடம், ஜேர்மன் முதலிய மொழிகளிற் புலமை சான்றவராக விளங்கினார். ஞானப்பிரகாசஅடிகளாரின் பின், பன்மொழிப்புலமையில் தலையாயவராக விளங்கியவர் இவரே. சுமேரிய மொழியையும், திராவிட மொழியையும், ஒப்பியல்முறையில் ஆராய்ந்து சுமேரிய மொழியையும் திராவிட மொழி என நிறுவினார்.

பேராசிரியராக இருக்கையில் ஆரிய திராவிட பாஷாபிருத்திச் சங்கத்தின் தலைவராகவும் விளங்கினார். எனவே மரபு வழியில் தமிழ் மொழியைக் கையாள வேண்டுமென்று உரத்து உரைத்தார். பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை இவரது இந்த நெறியைப் பின்வருமாறு விளக்குகிறார்.

“பேராசிரியர் சதாசிவம் பல்கலைக்கழக பண்டிதராகிவிட்டார். பண்டிதர் பயிற்சி அவருடைய ஆளுமையிலே பெரியதாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. பழமையிலும் சமய இலக்கியங்களிலும் அவருக்கு ஆழமான பற்று இருந்தது. சைவத்திற்கும் சைவசித்தாந்தத்திற்கும் நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம்  அவர் குரல் கொடுக்கத் தயங்கியதில்லை. அறுபதுகளிலே தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்போர் இக்காலத் தமிழ் எழுத்திலே மரபு எந்த அளவுக்கு பேணப்பட வேண்டுமென்ற கட்சிக்குப் பேராசிரியரே தலைமை தாங்கினார்.”
பேராசிரியர் கலாநிதி ஆ. சதாசிவம்
அவர்களின் நினைவுமலர்
கொழும்பு 31.7.1988  பக்  1-2

1960களிலே “மரபுத் தமிழா? பேச்சுத் தமிழா? என்ற போர் ஈழத்தில் நிகழ்ந்தது. பேச்சுத் தமிழ் என்பதன் தலைவர்களாகப் பேராசிரியர்கள் கைலாசபதியும், சிவத்தம்பியும் விளங்கினார். மரபுத் தமிழ் என்பதன் தலைவர்களாகப் பேராசிரியர் சதாசிவமும் எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரையும் விளங்கினார். இந்தப் போராட்டத்தில் சதாசிவம் அவர்களின் நிலைப்பாட்டின் விளைவு யாது எனப் பேராசிரியர் சிவத்தம்பி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். (மேலது ப. 10)”

“பேராசிரியர் சதாசிவம் அவர்களின் மிகப் பெரிய சான்றாக அமையப் போவது மொழி அறிவின் பேராசிரியர்கள் பறோ, எமனோவனால் தொகுக்கப் பெற்ற திராவிடையன் எதிமோலொயிக்கல் டிக்ஸ்சனறி (திராவிட சொற்பதிர் வழி அகராதி) யில் வரும் முன்னுரைக் குறிப்பாகும். உலகப் பிரசித்தியடைந்துள்ள இவ்வகராதியின் தொகுப்புக்கு பயன்படுத்தப்பட்ட தமிழுக்கான ஆய்வுச் சான்றுகளில் ஒன்று பேராசிரியர் சதாசிவத்தின் கலாநிதிப்பட்ட ஆய்வான “த ஸ்ரக்சர் ஒவ் த தமிழ் வேப்” ஆகும்.”

கருத்துரைக் கோவை (1959), ஆராய்ச்சிக்கட்டுரை எழுதும் முறை (1963) என்னும் இரு நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.

Sharing is caring!

Add your review

12345