பொன்னாலைப் பெருமாள் பெருங்கோயில்

கடலோரம் அமைந்த அந்த ஊரில் அன்று பெரும் ஆரவாரமாயிருந்தது. அந்த ஊரில்
ஒரு அதிசயமான இளைஞன் இருந்தான். வலைஞனான அவன் அழகில் சிறந்தவன். வலிமை
நிறைந்தவன். எதற்கும் எப்போதும் அஞ்சாதவன்.. அவனது அழகில், வலிமையில்
மங்கையர் மட்டுமல்ல. ஆடவர்களும் மயங்கிப் போயினர். இவ்வாறு
மயங்கியவர்கள் அவனை இந்திரனோ? சந்திரனோ..? மன்மதனோ? என்று மயங்கினர்.

இத்தகு இளைஞனால் கூட அன்றைக்கு கடலில் ஏற்பட்ட சவாலை எதிர்கொள்ள
இயலவில்லை. அது என்ன சவால்? அது ஒரு ஆமை வடிவில் வந்தது..

தன் தொழிலின் வண்ணம். தம் குலதெய்வமான மாயவன் மாதவனை வணங்கி விட்டு
தொழிலில் அந்த இளைஞன் வழமை போல ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது தான் அவனது வலையில் அந்த அதிசய ஆமை பிடிபட்டது. வெற்றிகரமான
சாதனை தானே.. பொன் போல மின்னிப் பிரகாசிக்கிற ஆமையை தந்தமைக்கு
ஆண்டவனுக்கு நன்றி செலுத்த முனைந்த போது.. ஆமை தன் ஓட்டத்தைத்
தொடங்கியது.

ஊர்ந்து செல்லும் ஆமையினத்தில் வந்த அந்த ஆமையோ.. வலையையும் இழுத்துக்
கொண்டு பாய்ந்து ஓடியது… இளைஞன் திரத்திக் கொண்டு ஓடினான்.. ஓடினான்..
அது ஆங்காங்கே, மறைந்தும் தோன்றியும் வேடிக்கை காட்டிக் காட்டி ஓடியது..
இளைஞனைத் தொடர்ந்து அந்த ஊர்ச்சமூகமே ஓடியது..

எல்லோரும் ஓடினர்.. ஆமையைத் தேடினர். இளைஞன் ஒருவாறு ஆமையைக் கண்டு
விட்டான். ‘இனி எங்கு ஓடுவாய்..’
தன் குலதெய்வமான நாராயணனின் நாமத்தை ஜெபித்த இளைஞன் அப்படியே தன் இரண்டு
கைகளாலும் ஆமையைப் பிடித்துக் கொண்டான்.
ஆ… என்ன அதிசயம்… ஓடிய ஆமை கல்லாமை ஆகியது… ஆமையைத் தொட்ட இளைஞனோ.. தேவ
வடிவம் பெற்று விட்டான். ஆங்கே பொன் விமானம் தோன்றி அவனை எற்றிச்
சென்றது.

‘இங்கே உங்களுடன் இருந்தவன் தேவேந்திரன். ஒரு சாபம் காரணமாக, இப்பிறவியை
அடைந்திருந்தான்.. இப்போது சாபவிமோசனம் பெற்று விட்டான்.. இங்கே ஆமை
வடிவில் தோன்றி அருளியது நாமே..’ இப்படி அசரீரி ஒலித்தது.

கூர்மாவதாரம் கொண்டு ஆடல் செய்தது நாராயணனே என்று அறிந்த அங்குற்ற
அனைவரும் வியந்தனர்.. கல்லாக உருவம் கொண்ட கண்ணனுக்கு கோயில் அமைத்தனர்.
கல்லுருவமாக அமைந்த ஆமையை இன்றும் ஆலயக் கருவறையில் காணலாம். அந்த
கூர்மாவதார மூர்த்திக்கே ஆலயத்தின் முதற்பூஜை இன்றும் நடக்கிறது.

இதுவே, பொன்னாலைத் தலத்தின் புராண வரலாறு.. இந்த வரலாற்றுச் செய்தி
பதிணெண் புராணங்களுள் ஒன்றான ஸ்காந்தம் முதலியவற்றிலும் இருக்கிறது.
இப்படி வரலாற்றுக்கு முந்தைய காலப் பெருமை மிக்கது பொன்னாலை பெருமாள்
கோயில்.

ஆமை வடிவில் பெருமாள் தோன்றிய சமுத்திரம் திருவடிநிலை என்று இன்றும்
போற்றப்படுகிறது. இங்கே முன்னர் ஸ்ரீ ராமர் சீதா லஷ்மண ஹநுமார் சஹிதமாக
தன் திருவடிகளை நிலை நிறுத்தியதாகவும் நம்பப்படுகிறது.. இவ்வாலய தீர்த்த
விழா வருடாந்தம் இச்சமுத்திரக் கரையிலேயே நடைபெறுகிறது.

ஸ்ரீமந் நாராயணனை இத்தலத்தில் மஹாலஷ்மித் தாயார் வழிபட்டதாகவும் புராணச்
செய்தி இருக்கிறது.. பொன் மகளாகிய திருமகள் பரந்தாமனை வழிபட்டதாலேயே
இத்தலம் பொன்னாலயம் என்று அழைக்கப்படுகிறதாம்.
யாழகத்தின் மேற்குத் திசையில் அமைந்திருக்கிறது பொன்னாலைக் கிராமம்.
கடலோரம் இருக்கிற இக்கிராமத்தில் முதன்மை பெற்று விளங்குகிறது பொன்னாலைப்
பெருமாள் ஆலயம்.

பதினாறாம் நூற்றாண்டுக் காலத்தில் இத்தலம் ஏழு பிரகாரங்களுடன்
காணப்பட்டது என்றும் குறிப்புகள் உள்ளன. வைணவர்களுக்கு முக்கிய தலமான
ஸ்ரீ ரங்கம் பெரிய கோயிலுடன் அக்கால இக்கோயிலை ஒப்பிட்டுப் பேசுவர்.
இப்பெரிய கோயிலை போர்த்துக்கேய மதவெறியர்கள் துடைத்தழித்து விட்டனர்.

இன்றைக்கு இருக்கிற கோயில் பிற்காலத்தில் அமைக்கப்பட்டது தானாம். ஆனாலும்
பழைய அடையாளங்கள் இன்றும் உள்ளன. ஏழாம் திருவீதியில் அமைந்திருந்ததாகக்
கருதப்படும் தும்பிக்கையாழ்வார் கோயில் (பிள்ளையார் கோயில்) இன்றும்
இருக்கிறது. ஐந்தாம் திருவீதியில் இருந்ததாக நம்பப்படும்
நரசிம்மப்பெருமாள் (நரசிம்மபைரவர்) கோயில் ;இருக்கிறது.

போர்த்துக்கேயர் இக்கோயிலை இடித்துப் பெற்ற கற்களைக் கொண்டு தமது
ஊர்காவற்துறை, சங்கானைக் கோட்டைகளை அமைத்ததாகவும் குறிப்பிடுவர். ஆதற்கு
ஆதாரமாக, அக்கோட்டைச் சுவர்களில் சங்கு, சக்கர முத்திரகள்
பதிக்கப்பட்டகற்கள் இருப்பதைக் கண்டதாக சிலர் கூறுவதும் அக்கூற்றுக்கு
வலுச் சேர்க்கிறது.

ஆலய கருவறையில் வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன்
காட்சியளிக்கிறார். தனியான மண்டபத்தில் ஒரே கல்லில் அமைந்த சிற்ப எழில்
கொஞ்சும் பள்ளிகொண்ட பெருமாளையும் தரிசிக்கலாம

போரனர்த்தம், கடற்பேரலை அனர்த்தம் இரண்டு நெருக்கடியிலும் மிகவும்
பாதிக்கப்பட்ட பகுதியிலேயே இக்கோயில் உள்ள போதும் கோயிலுக்குப் பெரியளவு
சேதங்கள் ஏற்படாமை வரதனின் கிருபையையே காட்டும்.
வைஷ்ணவ சம்ப்ரதாயங்களை அனுசரித்து அதே வேளை இந்துத்துவ சமரச மரபில்
நின்று வைதீக நெறி நிற்கும் குருமார்களே இன்றைக்கு இக்கோயிலில் ஆராதனை
செய்கின்றனர்.

தற்போது 108 அடி உயரமான இராஜகோபுரம் அமைக்கப்பட்டு அழகுற விளங்குகிறது
பொன்னாலைப் புனித வரதராஜப் பெருமாள் கோயில். வருடம் தோறும் ஆவணியில் ஸ்ரீ
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 19 நாட்களும், மார்கழியில் பரமபதவாயில்
ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்களும் இரண்டு மஹோற்சவங்களை இத்தலத்தில்
காணலாம்.

பிரபலம் வாய்ந்த இத்தலத்தில் 22.06.2011 புதன்கிழமை மஹாசம்ப்ரோட்ஷணம்
(கும்பாபிஷேகம்) நடைபெறவுள்ளது. இலங்கையில் வைஷ்ணவ ஆலயங்களில் முதன்மை
மிக்கதான, பெருமையோடு இத்தலம் விளங்குகிறது..

கூர்மாவதார ஸ்தலம் என்றும் “ஈழத்துத் திருவரங்கம்” என்றும் புகழப்பெறும்
பொன்னாலையம்பதியில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கிரியைகள் ஆரம்பமாகி
நடைபெற்று வருகின்றன. க.ச.சோமாஸ்கந்தாச்சார்யார் மற்றும் ஸ்ரீவத்ஸ.வரதராஜ
இராஜேஸ்வரக்குருக்கள் ஆகியோரின் நெறியாள்கையில் நிகழும் இக்குடமுழுக்கு
ஈழத்தில் விஷ்ணுவழிபாட்டியலில் புதிய எழுச்சியை உருவாக்கும் என நம்பலாம்.

ஆழ்வார்களால் போற்றப்பெற்ற 108 வைணவத்தலங்களுக்கு ஈடாகப் போற்றப்பெறும்
இக்கோயிலில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யார்களுக்கும் திருவுருவங்கள்
அமைந்து தமிழுக்குச் சிறப்புச் சேர்க்கின்றன. திருக்குடமுழுக்குக்
கிரியைகளில் தினமும் காலை மாலை வேளையில் நாலாயிரம் தமிழ் பாராயணம்
நடைபெறுவதும் சிறப்பிற்குரியதாகும

கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகையறிந்தேன் – ஆற்றங்
கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும் மாயன்
உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு

என்ற திருமழிசையாழ்வார் திருமொழியின் வண்ணம் கடலோரம் காட்சி கொடுத்துக்
காத்தருளும் கண்ணன் கருணை வரதனின் அருளாட்சியை உணர்பவர்கள் இத்தலத்தைப்
பெருமையோடு போற்றுகின்றனர்.

பொன்னாலைப் பெருமாளை போற்றுவோருக்கு பொன், புகழ், பெருமை, வளம், எல்லாம்
குறைவறக் கிடைக்கும் என்பதும் பரவலான நம்பிக்கையாகும்.

நன்றி – நீர்வை தி.மயூரகிரி சர்மா
நீர்வேலி இணையம்

Sharing is caring!

Add your review

12345