மகாதேவ சுவாமிகள்

ஊர்காவற்றுறைப் பட்டினத்திற்கு அணித்தாய் விளங்குவது கரம்பொன் கிராமம். இக்கிராமத்திலே திரு. இராமநாதருக்கும் திருமதி. அன்னபூரணிக்கும் 5-9-1874 வெள்ளிக்கிழமை பின்னிரவு திருவாதிரை நட்சத்திரமும் கடக இலக்கினமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் ஒரு திருமகன் அவதரித்தார். இவர்தான் “தம்பையா” என்னும் அன்புப் பெயர்பூண்ட வைத்தியலிங்கம் ஆவார். இவரே பிற்காலத்தில் மகாதேவ சுவாமிகள் என்று கொண்டாடப்பெற்றவரும் ஆவார்.
இவரது ஆரம்பக்கல்வி கரம்பன் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளால் நடாத்தப்பெற்ற ஆரம்பப்பாடசாலையில் தொடங்கியது. எட்டு வயதில், கரம்பொன் மேற்கில் முத்துக்குமாருச் சட்டாம்பியாரால் நடத்தப்பட்ட திண்ணைப்பள்ளியில் இரண்டாவது கல்வி ஆரம்பமானது. இவர் அக்கம் பக்கங்களில் நடைபெறும் பெரியார்களுடைய உபந்நியாசங்களையும் சங்கீத கதாப்பிரசங்கங்களையும் தவறாது கேட்டு வந்தார். கேள்வி அறிவினாலே தமது அறிவைப் பூரணப்படுத்திக்கொண்டார்.
மகாதேவ சுவாமிகள்சீலர்களையே சிவமாகக் கருதித் தம்மாலியன்ற தொண்டுகளையும் உதவிகளையும் செய்வதே இவரது புறவழிபாடாயிற்று. கடவுட் கலப்புடன் உலகக் கோயிலுக்கு அருட்பணி புரிவதே இவரது மதமாயிற்று. மனித சமுதாயமெல்லாம் ஒரே குலம்- உலகமெலாம் ஒரே வீடு அனைத்திற்கும் ஒரே கடவுள் – அன்பும் அருட்பணியுமே அவரை அடையும் வழி என்பது அவர் கொள்கையாயிற்று. எப்பெரியாரைக் கண்டாலும் அவரை வணங்கி ஏதாவது கேட்பதும், கேட்டவற்றை சிந்திப்பதுமாக இருப்பார். அதிகம் பேசமாட்டார். பிறர் பேசுவதை தாம் செவிமடுப்பார். வீண்பொழுதும் கழிக்க மாட்டார். பொழுது கழிவதும் தெரியாது. நாளெல்லாம் உள்ளும் புறமும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பார். மோனமும் தியானமும் அடக்கமும் அன்பும் திருவும் அருளும் செறிந்த அவரது தவமும் பணிவும் இளமையில் யாவரையும் கவர்ந்து இழுத்தன. அதிகாலையில் எழுந்து வேப்பம் குச்சியால் பல்துலக்கி, குளிர்ந்த நீரிலே குளித்து, நன்றாகத் தோய்த்துலர்ந்த ஆடை அணிவது இவரது வழக்கமாக இருந்தது.

இவருக்கு மூன்று ஆண் சகோதரர்களும், இரண்டு பெண் சகோதரிகளும் இருந்தனர். இவர் குடும்பத்தின் முதல் பிள்ளை. தமது பெருமுயற்சியினால் தமது குடும்பத்தை பேணி பாதுகாத்து வந்தார். ஒருபக்கம் ஆத்மீகப்பசி எடுக்க, மறுபக்கம் தன் தாய் தந்தையரை வயிற்றுப்பசியால் வாடாது பாதுகாத்து வந்தார். இதற்காகத் தமது கிராம்த்தில் விவசாயத்தில் ஈடுபட்டதோடு நில்லாது, சங்குவேலியைச்சேர்ந்த மட்டக்களப்பு வைத்தியலிங்கம் எனும் தனவந்தருக்கு கணக்கப்பிள்ளையாய் அமர்ந்து அதனால் வரும் ஊதியத்தைக் கொண்டே தன்னையும் தன்பெற்றோரையும் ஒம்பிவரலானார். இதனால் இவர் வாழ்க்கையில் பிறர் கையை எதிர்பார்க்கும் சூழ்நிலை ஏற்படவில்லை. தமது ஓய்வுநேரம் முழுவதும், சாத்திரம், தோத்திரம் பயிலுவதே தொழிலாகக்கொண்டார். இப்படியாக நாட்கள் செல்லச்செல்ல ஞான தாகமும் அதிகரித்தது.
மட்டக்களப்பு வைத்தியலிங்கம் கீரிமலையிலே ஒரு மடங்கட்டுவதற்கு ஆவல் கொண்டார். அதற்கு மேற்பார்வையாளராகச் சுவாமிகளையே அமர்த்தினார். மடங் கட்டுப்படுங்காலையில் ஆலயதரிசனைக்காக அங்குள்ள சிவாலயத்துக்கு செல்லுவார். அங்கு ஒருநாள் கண்ணம்மாச்சி என்ற அம்மையார் ஒரு புத்தகம் வைத்து படித்துக்கொண்டிருக்கக் கண்டார். இவர் இப்புத்தகம் ஒரு உயர்ந்த நூலாக இருக்க வேண்டும் என்று எண்ணி ‘ஒருதரம் பார்த்துவிட்டு தருகிறேன் தாருங்கள்’ என்று அந்த அம்மையாரைக் கேட்டார். அதற்கு அந்த அம்மையார், ‘இதை என் குருநாதரின் உத்தரவின்றி தருவதற்கில்லை’ என்று கூறிவிட்டார். குருவின் மூலம்தான் இத்தகைய நூல்கள் தரப்படவேண்டும் என்று கூறினார்.
இவ்வார்த்தைகள் அவருடைய உள்ளத்திலே ஒரு புத்துணர்வை உண்டாக்கின. அக்குருநாதனைத் தரிசிக்க வேண்டும், அப்புத்தகத்தை படிக்கவேண்டும் என்கின்ற பேரவா எழுந்தது. குருநாதன் எங்கே இருக்கிறார் என்று அம்மையாரிடம் கேட்டறிந்து கொண்டு, உள்ளம் சிலிர்க்க உணர்ச்சி வசப்பட்டுக்கொண்டு, அம்மையார் காட்டிய இடத்துக்கு விரைந்து சென்றார்.
கனகரத்தினம் சுவாமிகள் சிறாப்பர் மடத்து அறையில் அதுவரையும் தியானித்து இருந்துவிட்டு ஞானகுரவனைத்தேடிவரும் தம்பையாவை எதிர்கொள்ள வாசலண்டை வந்து சேர்ந்தார். அக்கணமே தம்பையாவும், மெய்ம்மறந்து, அந்த ஞானகுரவரின் திருப்பாதங்களை சிரமேற்கொண்டு வீழ்ந்து வணங்கி, ஆனந்தக் கண்ணீர் பெருகக் கிடந்தார். குருநாதனும் தன் குழந்தையின் பரிபக்குவ நிலையினை உணர்நது, அவரைத்தேற்றி வேண்டியதென்ன? என்று வினாவினார். பிறவாப்பெருவாழ்வு தரும், மெய்ஞ்ஞானம் பெறுவதே தமது அபேட்சை என்று தழுதழுத்த குரலில் கூறிப் பணிந்து நின்றார்.
கனகரத்தினம் சுவாமிகள், எதற்கும் அஞ்சேல் என்று தஞ்சம் அளித்து, தம்மிடம் அடிக்கடி வந்து போகுமாறு கூறினார். கண்ணம்மாச்சி கையில் இருந்த, ‘மோட்ச சாதன இரகசியம்’ என்ற நூலையும், தமது கரத்தால் வாங்கித் தம்பையாவின் கையில் கொடுத்தார். அன்றுதொட்டுத் திருநெல்வேலியில் உடையார் வீட்டில் பெரிய சுவாமிகள் நடாத்தும், வேதாந்த வகுப்பிற்குக் கிரமம் தவறாமல் சென்று பாடங்கேட்டு வரலானார். தம்பையா பெரியகடை தையல்நாயகி அம்பாளைத் தினமும் தரிசனை செய்வது வழக்கம். தேவி உபாசனையில் மிக ஈடுபாடுடையவராக விளங்கினார்.
யாழ்ப்பாணத்துக் கந்தர்மடப் பகுதியில் கந்தபுராண ஒழுங்கை என்று அழைக்கப்பட்ட வீதியில் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக்கொண்டவரும் இலங்கை அரசாங்கப் பிஸ்கால் பகுதியிலே சார்ஜண்டாகக் கடமை ஆற்றியவருமான திரு. சின்னத்தம்பி என்பவர் வாழ்ந்து வந்தார். இவரைச் “சார்ஜண்ட் சுவாமி” என்று மக்கள் அன்பாக அழைப்பர். தத்துவ சாஸ்திரங்களிலும், சமய அறிவிலும் மிக ஆற்றலுள்ளவராக இவர் விளங்கினார். எந்த நேரமும் இவரைச்சுற்றி ஒரு கூட்டமே இருக்கும். இவர் சுவாமி சின்மயானந்தாவின் சீடராவார். சார்ஜன் சுவாமிகளின் சீடர் பெரிய சுவாமி என்றழைக்கப்படும் கனகரத்தினம் சுவாமிகள் ஆவார். கனகரத்தினம் சுவாமிகளின் உத்தம சீடரே மகாதேவ சுவாமிகள் ஆவார்.
தம்பையா தனது குருநாதராம் கனகரத்தினம் சுவாமிகளுடன் தலயாத்திரை செய்யப் புறப்பட்டார். இந்தியாவில் பாடல் பெற்ற தலமெல்லாம் யாத்திரை மேற்கொண்டார். மணிவாசகப்பெருமான் ஞானதீட்சை பெற்ற திருத்தலமாகிய திருப்பெருந்துறைக்கும் சென்றார். அங்குதான் தம்பையாவுக்குக் கனகரத்தினம் சுவாமிகளால் ஞானதீக்கை வைக்கப்பெற்று மகாதேவ சுவாமி என்ற தீட்சா நாமமும் சூட்டப்பெற்றது.
சுவாமிகள் யாத்திரை முடிந்து ஈழநாடு திரும்பி வந்து சேர்ந்ததும், தம் குருநாதனுக்கேற்ற ஆசிரமம் ஒன்று அமைக்க வேண்டும் என்று திருவுளங்கொண்டார். பல அன்பர்களிடம் உதவி கோரினார். திரு. வை. சி. சி. குமாரசுவாமி அவர்களுடைய தந்தையார் நிலம் அளித்தார். மற்றும் பல அன்பர்கள் கட்டிடத்துக்கு வேண்டிய நிதி அளித்தார்கள். குருநாதருடைய மனதிற்கியையந்த ஆசிரமத்தை மகாதேவ சுவாமிகள் முன்னின்று கட்டி முடித்தார்கள். ஆச்சிரமத்திற்கு சிவகுருநாதபீடம் என்று பெயரிடப்பட்டது. கனகரத்தினம் சுவாமிகளே முதலாவது பரமாசாரியாராக வீற்றிருந்து குருபீடம் செயலாற்றத்தொடங்கியது. ஆண்-பெண் இருபாலாருமாக நூற்றுக்கணக்கானவர்கள் கூடி வேதாந்த சிரவணம் செய்து வரலானார்கள். இதில் வேதாந்தம் போதிக்கப்பட்டுவரும்போது வேதாந்த சித்தாந்த மாறுபாடுகளுக்கிடமளியாது சமரச நோக்குடனேயே கல்வி போதிக்கப்பட்டது. இதனால் கனகரத்தினம் சுவாமிகளாயினும் சரி, அவர்பின் வந்த மகாதேவ சுவாமிகளாயினும் சரி, தம்மை அடுத்துவரும் மாணவர்களுக்கு அவரவர் தரத்துக்கேற்ற முறையில் உண்மையை விளக்கி வந்தார்கள்.
கரம்பொன் சைவத்திலும் தமிழிலும் பின்தங்கிய கிராமமாக விளங்குவது கண்ட சுவாமிகள் அங்கு சண்முக வித்தியாலயம் என்ற பெயரில் ஒரு பாடசாலையை தாபித்தார்கள். இதன்பின் பல இடங்களிலும் சைவத்தமிழ் பாடசாலைகளை ஆரம்பிக்குமாறு பலரையும் தூண்டி வந்தார்கள். இதன் பயனாக துன்னாலையில ஒரு வித்தியாசாலைக்கு அத்திவாரமிட்டு அரம்பித்து வைத்தார்கள். அது இப்போது ஒரு மாகவித்தியாலயமாக விளங்குகின்றது. சுவாமிகள் அத்திவாரக்கல் நாட்டிய தினத்தை சுவாமிகளின் நினைவு தினமாக இன்றும் கொண்டாடி வருகின்றனர்.
மகாதேவ சுவாமிகள் பொதுவேலைகளில் ஈடுபட்டு நித்திய பிரமச்சாரியாக விளங்கினார்கள். இவரது பக்குவநிலையறிந்த இவரது குருநாதர் இவருக்கு காவி உடைகொடுத்து, சந்நியாசமும் வளங்கினார். இனிமேல் மடத்திலிருந்து ஞானத்தொண்டு புரியவேண்டும் என்றும் கட்டளையிட்டருளினார். இதன்பின் குடும்பப் பொறுப்பு முழுவதையும் சகோதரர்கள் பால் விட்டுவிட்டு, குடும்பத்தொடர்பையும் நீக்கிக்கொண்டார்.
கனகரத்தினம் சுவாமிகள் அவர்கள் 14-09-1922 மிருகசீரட நட்சத்திர நன்னாளிலே பரிபூரணத்துவம் பெற்றார். மறுதினமாய வெள்ளிக்கிழமை இவரை இம்மடத்தில் சமாதி வைத்தனர். ஆண்டுதோறும் ஆவணிமாதம் மிருகசீரிட நன்னாளில் கனகரத்தினம் சுவாமிகளது குருபூசை வெகுவிமரிசையாக இம்மடத்திற் கொண்டாடப்பெற்று வருகின்றது.
இப்போது மகாதேவ சுவாமிகளின் பொறுப்பு இன்னமும் கூடிவிட்டது. சுவாமிகள் ஆச்சிரமத்துக்கு வரும் மாணவர்களுக்கு பாடம்போதிப்பதோடு ஆங்காங்கு ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் சென்று சமயப்பிரசங்கங்கள் செய்து மக்களிடையே அரிய உண்மைக்கருத்துக்களை பரப்பி வருவாராயினர். இவர் பொதித்தவாறே சாதனையிலும் ஈடுபட்டவராதலினால் மக்கள் இப்பெருந்தகையைப்போற்றி இவர்சொற்கேட்டு ஒழுகி வரலானார்கள். இவர் ஞானமுதிர்ச்சியடைந்தவரன்றி அனுபூதிச்செல்வருமாவார். இவர்தம் பேச்சு தோற்றம் நடை யாவும் எவரையும் தம்பால் ஈர்க்கும் அன்புமயமான தன்மை வாய்நதவை. சுவாமிகளின் சீடர்கள் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் இன்றும் இருக்கின்றார்கள்.
சுவாமியவர்கள் 30-10-1942 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு சமாதிநிலை எய்தினார்கள்

 By – Shutharsan.S

நன்றி – http://www.ejaffna.net இணையம்

Sharing is caring!

Add your review

12345