மட்டுவில்

தென்மராட்சி மருதநிலப் பிரதேசமாகும். பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி என்பவற்றால் வளர்ந்து கலை, கலாச்சாரத்துறையிலும், தாய்த் தெய்வ வழிபாட்டிலும் மக்கள் திளைத்திருந்த பிரதேசமாகும். முக்கனிகள் எனப்படும் மா,பலா,வாழை என்பவற்றுக்குப் பெயர் பெற்ற இப்பிரதேசம் இனிமையும், செழுமையும் நிறைந்தது. இப்பிரதேசத்தின் பொருளாதாரப் பயிராகத் தென்னை நன்கு பயன் தருகின்றது. கற்பக தரு என்ற நிலையில் ஆயிரம் காலத்துப் பயிராகப் பனைமரங்கள் நன்கு வளர்ந்து பயன் தருகின்றது. யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் 16 கி.மீ கிழக்கே விளங்குவது இப்பிரதேசத்தின் சிறப்பு மிகு கிராமம் மட்டுவில் கிராமமாகும்.

மட்டு என்றால் தேன்

வில்” என முடியும் பெயர் கொண்ட கிராமங்கள் பல யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றன. கொக்குவில், கோண்டாவில், நுணாவில், கெருடாவில், இணுவில், உடுவில், மந்துவில் போன்றன அவற்றுள் சிலவாகும். “வில்” என்ற சொல்லுக்குக் “குளம்” என்ற பொருளில் நீர் நிலைகளைக் கருதப் பயன்பட்டுள்ளது. இந்த வகையில் “மட்டுவில்” என்பதை எடுத்து நோக்கினால் “மட்டு” என்பது தேன் என்ற பொருளில் வழங்கக் காணலாம். இப்பிரதேசத்தில் தாமரை நிறைந்த பல தடாகங்கள் அல்லது பொய்கைகள் காணப்பட்டன. இவ்வாறு தேனும், பொய்கையும் சேர்த்துத் தேன் பொய்கை எனும் பொருள்பட “மட்டுவில்” என அழைக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் பெருங்குளம், நெனியன்குளம், சிலிவில் குளம், அம்பலந்துறைக்குளம், நுணாவில் குளம், மருதங்குளம் போன்ற இடப்பெயர்களை இன்றும் காணமுடிகின்றது. அத்தோடு இக்கிராமம் முன்பு காடாக இருந்ததால் இங்கு தேன்மிகுதியாகச் சேகரிக்கப்பட்டதென்றும் கூறுவர். இன்றும் இப்பிரதேசத்தில் தேன் சேகரிப்பாளர்கள் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கக் காண்கின்றோம்.
மட்டுவில் கிராமம் “சந்திரபுரம்” என முன்னர் வழங்கியிருக்க வேண்டும் என்பதை மட்டுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளை பாடிய ஈழமண்டலச் சதக்கம் என்பதால் அறியக்கிடக்கின்றது. அந்நியராட்சிக் காலத்திலேயே இப்பெயர் “மட்டுவில்” ஆக மாறியிருக்க வேண்டும். சோழர் காலத்தில் இவ்விடம் “மட்டிவால்” என்ற பெயரால் அழைக்கப்பட்டமை மூன்றாம் இராஐராசசோழனின் திருவாலங்காட்டுக் கல்வெட்டு ஒன்றினால் அறிய முடிகின்றது.
அப்பிரதேசம் சுமார் 5875 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு காணப்படுகின்றது.
இப்பிரதேசத்தில் பல்வேறு தொழில்களைப் புரியும் தொழிலாளர்கள் உள்ளனர். பொதுவாக விவசாயமே இக்கிராமத்தவர்களின் முதுகெலும்பாகும். கைத்தொழில் என்ற நிலையில் குடிசைத் தொழில்கள் பல உள்ளன.

Sharing is caring!

1 review on “மட்டுவில்”

Add your review

12345