மதுரகவி

மதுரகவி

கவிஞர் பாலசிங்கம் அருளானந்தம் அவர்களின் தோற்றம் 18.10.1961. இவர் மதுரகவி எனப்படுவார். கவிதை புனைதல், கவியரங்க ஆற்றுகை, சமயப் பேருரை, கட்டுரைகள் எழுதுதல், வானொலி தொலைக்காட்சி வர்ணணை அறிவிப்பாளர், இலக்கியத் திறனாய்வு, சமயச் சொற்பொழிவு ஆகிய கலை இலக்கியச் செயற்பாடுகளில் முதன்மை பெற்று விளங்கும் இக்கவிஞர் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது பலாலி வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.
மதுரகவி காரை எம்.பி. அருளானந்தம் என்னும் சொந்தப் பெயரிலும், தமிழானந்த பாரதி, ஈழத்தரசன், தமிழிழம்பரிதி, சங்குசாதன் என்னும் புனை பெயர்களிலும் ஈழத்தில் வெளியாகும் தமிழ்ப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும், தன் கவித்திறனை வெளிப்படுத்தி வரும் இவர் யாழ் களகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியப் பணியாற்றி வருகிறார். காரைநகர் திருமணற்காடு அருள்மிகு ஸ்ரீ கும்பநாயகி முத்துமாரி அம்பாளை சிறுவயது முதல் வழிபட்டு வரும் தனக்கு அம்பாளின் கடாட்சமே கவிதையெழுத் தூண்டியது எனக் கூறும் இவர் வேறு யாரையும் குருவாகக் கொள்ளவில்லை.
மதுரகவி, கவிமாமணி, கவியரசு, மகாகவி சாகரம், சிவநெறித்தொண்டர், செஞ்சொல் ஞானவாரிதி, வர்ணணைக் கலாநிதி ஆகிய பட்டங்களை தேவஸ்தான பீடங்கள் இவருக்கு வழங்கியுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், உலகத் தமிழர் வானொலி, அனைத்துலக வானொலி, கனேடிய தமிழ் வானொலி, அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் வானொலி ஆகியவற்றின் வெளிக்கள வர்ணணையாளராக இவர் செயற்பட்டுள்ளார்.
இலங்கை நீதி அமைச்சினால் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்ட இவர், ஆன்மீகக் கலாநிதி அருட்கவி விநாசித்தம்பி புலவர், சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, மகா வித்துவான் வீரமணி ஐயர், ஆகியோர் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களால் பாராட்டப் பெற்று வாழ்த்துப் பெற்றார். யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் முன்னாள் முதல்வரான கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதனை தலைவராகக் கொண்ட பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் மணிவிழாச் சபையின் செயலாளராக இருந்து “சண்முகதரிசனம்” நூலினை வெளியிட்டு பாராட்டுப் பெற்றார். இளவயதினரான இவர் தமிழுக்கும், சைவத்திற்கும் பெரும் தொண்டாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

By -‘[googleplusauthor]’

நன்றி – தகவல் மூலம்- கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – கலைஞானம் 2009 வெளியீடு

Sharing is caring!

Add your review

12345