மல்லாவி மத்திய கல்லூரி

மல்லாவி மத்திய கல்லூரி

விருட்சம் போல் வளர்ந்து வரும் மல்லாவி மத்திய கல்லூரி வரலாறு முழுமையாகக் கிடைக்காத காரணத்தால் கிடைத்த தகவல்களை தொகுத்து எழுதப்பட்டிருக்கின்றது என்பதையும், எதிர் வரும் காலங்களில் வரலாற்றை முழுமையாக வெளியிடுவதற்கு சமூகத்தின் மத்தியிலிருந்து உதவிக்கரங்கள் எழ வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. மீள் குடியேற்றத்தின் பின்னர் கல்வி வளர்ச்சியைப் பொறுத்த வரையில் கல்லூரி மாணவர்கள் முதன் நிலையில் உள்ளனர். 2009, 2010 ஆண்டுகளில் உயர்தர பரீட்சைகளில், மாவட்ட நிலைகளில் முதல் நிலைகளைப் பெற்றுள்ளனர். பல மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றும், இன்னும் சிலர் கல்வியியற் கல்லூரிக்குச்  சென்றும், மற்றும்  பலர் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்குரிய அடிப்படைத் தகுதியினையும் பெற்றுக் கொண்டுள்ளனர். விளையாட்டுப் போட்டி, தமிழ்த்தினப் போட்டி, ஆங்கில தினப் போட்டிகளில் மாணவர்கள் சாதனைகளைப் படைத்து கல்லூரிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். கட்டிட வசதிகளை நோக்கின் வகுப்பறைகள் தனியாகப் பிரித்து அடைக்கப்பட்டுள்ளன. அதிபர் அலுவலகம், குடிநீர் விநியோகம், மலசலகூடம் ஆகியவற்றோடு ஆசிரியர் விடுதிகளும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு புதிய கட்டிடமாக விசேட கல்விக் கூடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.  கல்லூரி ”இசுறு” திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளதனால் ஆரம்பப்பிரிவு தனியாக பிரிந்து இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளின் பிரகாரம் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களை ஒன்று கூட்டி ஆரம்பப் பிரிவை தனியாக்குவது பற்றி கலந்துரையாடப்பட்டது. இறுதித் தீர்மானமாக மேல்மாடிக் கடடிடத் தொகுதி ஆரம்பப் பிரிவிற்காக ஒதுக்கப்பட்டது. 03.01.2011 இலிருந்து ஆரம்பப் பிரிவு தனி நிர்வாகமாக அதிபர் திருமதி கீதா பாலசிங்கம் தலைமையின் கீழ் இயங்கத் தொடங்கியது. தனியாக்கப்பட்ட ஆரம்பப்பிரிவு பாடசாலைக்குப் புதிதாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பெரும் பங்காற்றியவர் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.த.மேகநாதன் அவர்கள். கடந்த காலங்களில் அதிபராக இருந்து அனைத்து மக்களின் மனங்களிலும் நிறைந்திருந்த செம்மல் அமரர் செ.மயில்வாகனம் அவர்களின் பெயரே ஆரம்பப் பிரிவுப் பாடசாலைக்கு (மு/மயில்வாகனம் தமிழ் வித்தியாலயம் ) நாமமாக இடப்பட்டது. மாணவர்களுக்குத் தேவையான தளபாடங் கள், இலவச பாடநூல்கள், சீருடைகள் என்பன காலக்கிரமத்தில் கல்லூரிக்கு வந்தசேர்ந்தன. ஆய்வுகூடப் பொருட்கள் நூலகத்தின் நூல்கள், கணினிகள் என்பன முற்றாக அழிந்துவிட்ட நிலையில் ஆய்வுகூடத்துக்கான வளங்கள் சிறிதளவு வழங்கப்பட்டன. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டிருந்த நூலகம் இன்று 1000 வரையான நூல்களை மாத்திரமே கொண்டு இயங்குகின்றது. கணினி வளத்தைப் பொறுத்தவரை 20கணினிகளைக் கொண்டிருந்த நிலையில் 05 கணினிகள் மாத்திரம் தற்போது காணப்படுகின்றன. சுற்றுப்புறச் சூழலைப் பார்த்தால் UNOPS நிறுவனம் கல்லூரி வளாகத்தின் சுற்றுவேலியை அமைத்து கொடுத்திருக்கிறது.  இத்தோடு கல்லூரியின் விளையாட்டு மைதானம் வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு மைதானம் ஆகும். இதன் முதல் கட்ட வேலையாக கூடைப் பந்தாட்டத்திற்கான மைதானம் பூரணப்படுத்தப் பட்டுள்ளது. 08.12.2010 இல் வட மாகாண வீர வீராங்கனைகளுக்கான பதினெட்டு நாள் கொண்டதான பயிற்சி முகாம் ஒன்று நடாத்தப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வுக்கு வடமாகாண கல்விச் செயலாளர் திரு.இ. இளங்கோவன், கலாநிதி நா.எதிர்வீரசிங்கம் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்த சிறப்பித்தனர்.

14.12.2010 அன்று

சர்வதேச குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா அவர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காகக் கல்லூரிக்கு வந்திருந்தார். நாடெங்கிலும் அமுல்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் “இசுறு” பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் இக்கல்லூரியும் உள்வாங்கப்பட்டது. இசுறு வேலைத்திட்டம் தொடர்பாக கல்லூரியை மேற்பார்வை செய்வதற்காக அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் கல்விக்கான இணைப்பு செயலாளர் (பி.கே. கெட்டியாராட்சி) அவர்கள் 28.07.2010 கல்லூரியைப் பார்வையிட்டுச் சென்றார். மீள் குடியேற்றத்தின் பின்னர் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. ஏற்கனவே அமைந்திருந்த இந்திர வதனி கலையரங்கம் வடமாகாண ஆளுநர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் (1 மில்லியன்) புனர் நிர்மானம் செய்யப்பட்டது.

20.04.2010

மல்லாவி மத்திய கல்லூரி

வடமாகாண ஆளுநர், வடமாகாணத்தின் கல்விச் செயலாளர் உட்பட வட மாகாண திணைக்கள அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்ட விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. தேசிய ஒருமைப்பாட்டுடன் கூடிய பண்பாட்டு பன்முகப் பாடுகளுக்கு மதிப்பளித்து இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது. கடந்த கால யுத்தத்தின் வடுக்களைச் சுமந்த மாணவமணிகளின் மனங்களில் புதிய உணர்வு அலைகளை உருவாக்கவேண்டும் என்ற நோக்கில் BANK OF LIFE எனும் அமைப்பினரால் மகிழ்ச்சி இல்லம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு 31.01.2010 அன்று வன்னி இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணவர்த்தன அவர்களாலும், முல்லை அரச அதிபர் இமெல்டா சுகுமார் அவர்களினாலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்லூரியின் இல்ல மெய்வன்மைப் போட்டி நிகழ்வுகள் 03.03.2010 இல் நடைபெற்றன. பிரதம அதிதியாக கௌரவ அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் கலந்து கொண்டார். அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கனகரட்ணம் ஆகியோரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். கல்லூரி ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரதம அதிதியால் பாடசாலைக்கென போட்டோ கொப்பி மெசின், றோணியோ மெசின், பாண்ட் செற் என்பனவும் ஆசிரியர்களுக்கான 42 துவிச்சக்கரவண்டிகளும் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். வடக்கில் வசந்தம் வீசியது. முட்கம்பி வேலிகளை விட்டு 23.10.2009இல் முதன் முதலில் துணுக்காய் பிரதேச செயலகத்திற்குள் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுகிறார்கள். பாதுகாப்பு என கருதிய இடங்களில் மக்கள் தொடர்ந்து மீளக் குடியமர்த்தப்பட்டு வந்தனர். பாடசாலையும் மீள ஆரம்பிக்கப்பட்டது.

27.11.2009 இல்

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் துரித மீள்குடியேற்றத்தின் மூலம் பாடசாலை திறக்கப்பட்டது.

23.12.2009 இல்  

வட மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரஸ்ரீ அவர்கள் நேரடியாக பாடசாலைக்கு வருகை தந்து மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை வழங்கியிருந்தார்.

நினைவுகளில் மேலும் சில

2009 ல்

யுத்தம் உக்கிரம் அடைந்தது. கிளிநொச்சி பகுதியைக் கிபீர் விமானங்களும், எறிகணைகளும் பதம் பார்த்தன. மீண்டும் இடம் பெயரவேண்டிய கட்டாயம். அரைகுறைப் பொருட்களுடன் 05.01.2009 இல் றெட்பானா பாரதி வித்தியாலயத்துக்கு கல்லூரி நகர்த்தப்படுகின்றது. போர் நீடித்தது. பாடசாலையின் சொத்துக்களில் சம்பவத்திரட்டு, மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள், மாணவர்களின் பிறப்பு சான்றிதழ்கள், ஆசிரியர் சம்பளப் பட்டியல் என்பன அதிபர் அவர்களினால் 25.01.2009 இல் சுகந்திரபுரம் 40 வீட்டுதிட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இறுதியாக சுகந்திரபுரத்துடன் கல்லூரியின் ஆவணங்கள் யாவும் தொலைந்தன. வன்னி மக்கள் அனைவரையும் முகாம்கள் அரவணைத்தன. யுத்த காலம் ஆதலால் வவுனியா வடக்கு, மாந்தை கிழக்கு பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் இக்கல்லூரியில் வந்து இணைந்து கொண்டனர். இடப்பெயர்வு வன்னியில் யாரைத்தான் விட்டுவைத்தது. கல்லூரியும் இடம்பெயரும் நாள் வந்தது. லொறிகளில் பொருட்கள் ஏற்றப்பட்டன.

2008 ல்

மல்லாவி மத்திய கல்லூரி

11.07.2008 இலிருந்து அக்கராயன் முதலாம் பாடசாலையில் கல்லூரி இயங்கத் தொடங்கியது. தொடர்ந்து வந்த எறிகணைத் தாக்குதல்களால் மீண்டும் கல்லூரி 22.09.2008 இல் கிளி/இராமநாதபுரம் ம.வி இல் தமது சேவையை ஆரம்பித்தது. தனியாக கொட்டில் அமைத்து அங்கிருந்த கல்லூரி மாணவர்களுடன் ஏனைய பாடசாலை மாணவர்களையும் இணைத்து சிறப்பாகக் கல்விச் செயற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதற்கு அதிபர், ஆசிரியர்கள், தொண்டராசிரியர்கள், பணியாளர்களோடு பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பழைய மாணவர் சங்கத்தினரின் பங்களிப்பும் மிகுதியாகக் காணப்பட்டது. என்பனவும் 18.03.2008 இல் திறந்து வைக்கப்பட்டன. கல்லூரியில் கடந்த காலங்களில் இல்லாத சில வசதிகள் காரணமாக மாணவர்களின் கல்வியில் சில தடைகள் ஏற்பட்டன. இதனை நிவர்த்தி செய்யும் முகமாகக் கல்லூரியின் பிரித்தானியக் கிளையினரின் ஆதரவில் மாணவர்களுக்கான குடிநீர் வசதிகள், மல சல கூடத்துக்கான நீர் விநியோகம், இஞ்சின் உட்பட மின்சாரவசதிகள் போன்ற அடிப்படை தேவைகள் செய்து கொடுக்கப்பட்டன. அலுவலகம் (புனரமைப்பு), பாற்சாலை, சமையற் கூடம், ஆசிரியர் ஓய்வு அறை ( கல்லூரி ஆசிரியை அமரர் வாசுகி தியாகராசா நினைவாக) ஆகியனவும் புதிதாக அமைக்கப்பெற்ற, கற்றல் வள நிலையம், மாடிக்கட்டடம் அதிபர் அவர்கள் மாணவர்கள் விரும்பத்தக்க நடத்தைகளை வெளிக்காட்டுதல், கற்பித்தல் வகுப்பறைச் சூழலை கவின் நிலையில் வைத்திருத்தல் போன்ற விடயங்களில் மிகுந்த அக்கறை காட்டிவந்தார்.

2007 ல்

மல்லாவி மத்திய கல்லூரி

01.03.2007 திரு.து.ஜேசுதானந்தர் அவர்கள் கல்லூரிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் யாராலும் மறக்க முடியாது. வழமைபோலவே ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலையை வந்தடைகின்றனர். புதிய அதிபரும் கல்லூரிக்கு சமூகம்மளித்து விட்டார். காலைப் பிரார்த்தனை மணி அடிக்கின்றது. வகுப்பறைகளில் மாணவர்கள் அமைதி பேணுகின்றனர். திடீரென வானில் பேரிரைச்சல். பச்சிளம் பாலகர்கள் முதல் பெரியவர்கள் யாவரும் வானத்தினை பார்த்தபடி அலறியடித்துக் கொண்டு கட்டடங்களிற்குள் மறைந்து கொள்வதற்கு முன்பே வெடிச்சத்தம் கட்டடத்தை அதிர வைத்தது. தேறாங்கண்டல் பகுதியில் கிபீர்  விமானத்தின் குண்டுகள் வீசப்பட்டன. அந்த வெடியோசைகளின் மத்தியில்  தற்போதைய அதிபரின் பதவியேற்பு வைபவம் நடைபெற்றமை அனைவராலும் மறக்க முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

2005 ல்

மல்லாவி மத்திய கல்லூரி

01.10.2005இல்  திரு.கு.சத்தியபாலன் அவர்கள்  பாடசாலையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். போர்க்காலச் சூழல் என்பதால் இவருடைய செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கதாகவே இருந்தது. இக்காலத்தில் முறைசாராக் கல்வி மூலம் பாடசாலைக் கல்வியை முடித்த மாணவர்களுக்கு கணினி வகுப்புக்கள் நடைபெற்றன. மின்சார வசதி இல்லாத போதும் இயந்திரம் மூலம் மின்சாரம் பெறப்பட்டு இலவசமாக பயிற்சிகள் நடைபெற்றன. பௌதீக வளத்தைப் பொறுத்தவரை மதில் சுவர் அமைக்கப்பட்டது. கல்வித் திணைக்களத்தின் ஆதரவில் கணினி அறை, கட்புல செவிப்புல சாதன அறை என்பன மாணவர்களின் நலன் கருதி பாவனையில் இருந்தது. இக்கல்லூரியின் பழைய மாணவர்களின் அயராத முயற்சியால் பிரித்தானியாவில் உள்ள கல்லூரியின் பழைய மாணவர்கள் பழைய மாணவர் சங்கக் கிளையொன்றை நிறுவியதோடு முதன் முதலாக “அழியாத கோலங்கள்” எனும் நூலொன்றையும் வெளியிட்டிருந்தனர். சுவிற்சர்லாந்தில் உள்ள பழைய மாணவர் சங்க கிளையினர் 60,000 ரூபா நிதியினை அபிவிருத்திக்காக அன்பளிப்பு செய்திருந்தனர்.

11.01.2005 இல்

மல்லாவி மத்திய கல்லூரி

திருமதி.பு.பாலசுப்பிரமணியம் அவர்கள் தற்காலிக அதிபராகச் செயற்பட்டார். இக்காலப்பகுதியில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரால் ஆண்களுக்கென தனியாக சைக்கிள் தரிப்பிடம் ஒன்று அமைக்கப்பட்டது. UNICEF நிறுவனத்தின் ஆதரவில் நிரந்தர சமையலறை, தற்காலிக வகுப்பறைக் கொட்டகைகள் திருத்தப்பட்டன. இளைஞர் சேவை மன்றத்தினரின் ஆதரவில் விளையாட்டு மைதானம் சிறு புனரமைப்புச் செய்யப்பட்டது. பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினரால் முன்புறவேலி (200அடி) முட்கம்பி இட்டு தகரத்தால் அடைக்கப்பட்டது. தற்காலிகமாக நடன அறை ஒன்றும் புனரமைக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு

க.பொ.த (சா.த) பரீட்சையில் முல்லை மாவட்டத்தில் சிறந்த பெறுபேற்றினை பெற்ற கல்லூரி மாணவி ஆ.சுகர்ணியா DIALOG GSM நிறுவனத்தினரால் கௌரவிக்கப்பட்டார் அத்தோடு முல்லை மாவட்டத்தில் இளம் சாதனையாளராக தே.வைதேகி தெரிவு செய்யப்பட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களால் கௌரவிக்கப்பட்டார்.

05.04.1999 ஆம் ஆண்டு

இது வரை காலமும் ஆசிரியராகவும் பிரதி அதிபராகவும் கடமையாற்றிய திருமதி கோகிலவாணி தேவராஜா அவர்கள் அதிபர் பொறுப்பை ஏற்றுகொண்டார். 1985 ஆம் ஆண்டு தொடக்கம் இக்கல்லூரியிலே பணியாற்றிய இவர் கல்லூரியின் முதல் பெண் அதிபர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார். இக்காலப் பகுதியில் உயிரியல், கணிதப்பிரிவுகளில் பல மாணவர்கள் பல்கலைக் கழகம் சென்றதுடன் மாவட்ட நிலையில் முதல் நிலைகளையும் பெற்றுக்கொண்டனர்.

2000ஆம் ஆண்டு

விஜயபாலா ஜீவகன்உயர்தர உயிரியல் பிரிவில் தேசிய நிலையில் 24வது நிலையிலும், தமிழ்மொழி மூலம் தேசியரீதியில் 2வது நிலையிலும், மாவட்டநிலையில் முதல் நிலையையும் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமைசேர்த்திருந்தார். 1999 ஆம் ஆண்டுக்குப் பின் இக்கல்லூரிக்காக அரசசார்பற்ற நிறுவனங்கள் பல உதவிகளைச் செய்து வந்தன. குறிப்பாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம், வன்னிதமிழ் சமூக கலாசார மையம் – கனடா போன்ற நிறுவனங்களினால் ஏழைச் சிறுவர்களுக்கு உதவிகள் கிடைத்தன. இந்த சூழலிலும் இப்பாடசாலை மீண்டும் தரமுயர்த்தப்பட்டு 01.01.1996 இல் மல்லாவி மத்திய கல்லூரி எனும் நாமம் தாங்கி நின்றது. புதிய நாமத்துடன் விளங்கிய கல்லூரிக்கு கீதம் இயற்றப்பட்டது. இக்கீதத்தை இயற்றியவர் முல்லைமணி வே.சுப்பிரமணியம் ஆவர்.

இடப் பெயர்வுகளினால் மக்களையும் மாணவர்களையும் சுமந்துகொண்டிருந்த பாடசாலைக்கு

01.10.1996 இல்

திரு.சு.கலாதரன் அவர்கள் புதிய அதிபராக நியமிக்கப்பட்டார். பல நெருக்கீடுகளுக்கு முகம் கொடுத்து தம் பணியினை திறம்பட நடத்திய பெருமை இவரையே சாரும். சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களையும் நூறுக்கு மேற்பட்ட ஆசிரியர்களையும் கொண்டு இப் பாடசாலை பல இடங்களில் மர நிழல்களின் கீழ் இயங்கி வந்தது. இக்காலப்பகுதியில் க.பொ.த உயர்தர விஞ்ஞானப் பிரிவில் பல மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றமை கல்லூரிக்கு பெருமையை ஏற்படுத்தியது.

1997 ஆம் ஆண்டு

இக்கல்லூரி மைதானம் 400m ஓட்டப் பாதையாக விஸ்தீரணமாக்கப்பட்டது. “மதுர இரவு” எனும் நாமம் கொண்டு கலை விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது யாராலும் மறக்க முடியாது. அதிபராக இருந்த திரு.த.சிவபாலு அவர்கள் (10.09.1989) மாற்றலாகிச்செல்ல 11.09.1989 திரு.செ.சிவராஜா அவர்கள் அதிபர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். இக்காலப்பகுதியில் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக மாணவர்கள் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது. க.பொ.த உயர்தர வகுப்புக்களுக்குமான மாணவர் தொகை கணிசமான அளவில் அதிகரித்தது. மாணவர்களின் சைக்கிள் பாதுகாப்புக்காகக் கொட்டகை அமைக்கப்பட்டது. முறைசாராக் கல்வி மூலம் வானொலித் திருத்தம், ஒட்டுவேலைகள் என்பன ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவந்தன.

26.06.1994 இல்

திரு.செ.சிவராஜா அதிபர் அவர்கள் பதவி உயர்வு பெற்று செல்ல 27.06.1994 புதிய அதிபராக திரு.மா.இராஜ்குமார் அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் காலத்தில் பாடசாலைக் கல்வியும், இணைபாட விதானச் செயற்பாடுகளும் நடைபெற்றது. தொடர்ந்து வந்த காலப்பகுதியில் (11.09.1995) அதிபராக திரு.ஜீ.எஸ் பரமேஸ்வரன் அவர்கள் பாடசாலையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது காலப்பகுதியில் தான் பாடசாலை நிறையச் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. நாட்டில் ஏற்பட்ட போர் காரணமாக அகதிகளாக்கப்பட்ட யாழ் மாவட்ட எம் உறவுகள் வன்னி மண்ணை நாடி வந்தனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நோக்காக பாடசாலையும் பலரைத் தாங்கி நின்றது. அத்துடன் இழப்புக்களைச் சந்தித்துள்ள மக்களின் பிள்ளைகளுக்கு அவர்கள் கல்வியை இழந்த விடக்கூடாது என்பதற்காக மர நிழல்களில் சோர்வின்றி கல்விப்பணி சேமமுடன் தொடர்ந்தது. பல கட்டிடங்களைக் கொண்ட பாடசாலையாக இருந்த போதிலும் இரவல் காணியில் நிழல் மரம் தேடி கல்வி கற்க வேண்டிய சூழலிலும் கல்வியைக் கற்று சிறப்படைந்தனர். இவ்வளவு வளர்ச்சிகளையும் அக்கால கட்டத்தில் அதிபராக இருந்த திரு.த.சிவபாலு அவர்களும் அவருடன் ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன முன்னின்று உழைத்ததால் பாடசாலைக் கல்வி மென்மேலும் வளர்ச்சியடைந்து வந்தது.

1985 இல்

இப்பாடசாலையில் விஞ்ஞானப்பிரிவும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் கல்வித் திணைக்களத்திடம் அனுமதி பெறுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டன. இப்பாடசாலை கொத்தணிப் பாடசாலையின் தலைமைப் பாடசாலையாகவும் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. மைதான திருத்த வேலைகளுடன் பாடசாலை காணிகளைச் சுற்றி முட்கம்பிகளால் வேலிகள் அமைக்கப்பட்டன. அதற்குப் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தவர்களின் உதவி கிடைக்கப்பெற்றது. மைதானத்துக்குப் போதியளவு காணியை விடுத்து மீதிக் காணியை சிறு தானியம் செய்வதற்கு குத்தகைக்கு விடப்பட்டதனால் பெருந்தொகைப் பணம் பாடசாலைக்கு கிடைத்தது. பாடசாலையின் ஆசிரியர் நலன்புரிச்சங்கத்தினரால் சிற்றுண்டிச்சாலையொன்று அமைக்கப்பட்டது. இத்துடன் பாடசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இரவு நேர காவலாளியினை பாடசாலை அபிவிருத்திச்சங்கம் நியமித்தது.  இது மட்டுமல்லாமல் இவரின் அர்ப்பணிப்பால் பாடசாலைக்காக முன்னர் ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் காட்டுக் காணிகளை வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளரின் உதவியுடனும், பெற்றோரின் உதவியுடனும் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. காடுகள் வெட்டப்பட்டதைத் தொடர்ந்து விளையாட்டு மைதானம் துப்பரவு செய்யப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இவ்வளவு பாரிய வேலைத்திட்டத்திற்கும் உறுதுணையாக இருந்தவர் நீர்ப்பாசன பொறியியலாளராக இருந்த திரு.ஏ.ரீ பொன்னுத்துரை என்பவர் ஆவார்.

31.12.1983 இல்

திரு செ.மயில்வாகனம் அதிபர் அவர்கள் ஓய்வு பெற்ற நிலையில் திரு.தா.சிவசம்பு அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் மூன்று மாதம் வரை கடமையாற்றி மாற்றலாகி வேறு பாடசாலைக்குச் செல்ல 05.03.1984 இல் திரு.த.சிவபாலு அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதிபர் செ.மயில்வாகனம் அவர்கள் விட்டுச்சென்ற பணிகளையும் தான் செய்யத்துணிந்த பணிகளையும் சிறப்பாகச் செய்த பெருந்தகை இவரென்பதில் இப்பாடசாலை நன்றியுடையதாகவே  உள்ளது. இப்பாடசாலை வளர்ச்சிக்கு வித்திடுவது கல்வி மட்டுமல்ல செயற்பாடுகளுமே என உணர்ந்தார். அதிபர் த.சிவபாலு அவர்கள் பாடசாலையை பொறுப் பேற்றுக்கொண்டதன் பின்னர் கல்விப் பணிப்பாளராக இருந்த ஜனாப் எம்.எம் மன்சூர் அவர்களிடம் அனுமதி பெற்று 18.07.1984 இல் வர்த்தக வகுப்பை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து அதிபரின் அயராத உழைப்பினால் எம் பிரதேசத்திற்குப் பொருத்தமான தொழில்சார் பயிற்சிகள் வழங்குவதற்காக மாட்டுப் பணணை, கோழிப்பண்ணை என்பவற்றை ஆரம்பித்தார். மாணவர்களுக்குச் சிறந்த பயிற்சி நிலையமாகவும் பாடசாலைக்கு நல்ல வருமானமாகவும் அவை திகழ்ந்தன. முறைசாராக் கல்வி மூலம் தையற்பயிற்சி நடைபெற்று வந்தது. இப்பாடசாலையில் தொழில்சார் பயிற்சிகளை மேற்கொள்ளும் பொருட்டு தச்சுவேலைக்கான கட்டிடம் ஒன்று பூர்த்தியாக்கப்பட்டு 1983 இல் திறந்து வைக்கப்பட்டது. இதே ஆண்டில் சாரணியக் குழுவினர் சர்வதேச சாரணிய பாசறைக்காக (ஜம்போறி) அநுராதபுரம் சென்று வந்தனர். இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு தன்னாலான பங்களிப்பைச் செய்து வந்த திரு.செ.மயில்வானம் என்னும் பெருந்தகையால் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் காணியின் சுற்றுப்புறத்தில் பனம் விதைகள் நாட்டப்பட்டன. அத்துடன் பாடசாலை வளவின் முன்றலிலும் வீதியோரத்திலும் நடப்பட்ட ஆலமரங்கள் இன்றும் நிழல் பரப்பி காட்சியளிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. இப் பாடசாலையில் இதே ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதியும் முதன்முதலாக கிடைக்கப்பெற்றது. முதன் முதலில் அனுமதி பெற்றவர்கள் செல்வி.இ.புஸ்பராணி, செல்வன் து.லிங்கேஸ்வரன் ஆவர்.

மல்லாவி மகாவித்தியாலயக் கீதம்

மல்லாவி பதி முல்லை நகர் வாழி பல்லோரும் வாழி –துதி பெறும் வித்தியாலயம் துலங்கிட வாழிமதி நிறை மாணவரும் மல்லாவி நகர் வாழிஅதிபரும் ஆசிரியர் அனைவரும் வாழிமல்லாவி அந்தமிழ் விவசாயம் அனைத்தும் தரும் அன்னை –சுந்தரச் சித்திரஞ்சேரும் தொழிற்கலைபைந்தமிழ் வர்த்தகம் பயிலும் உடற்கல்விசெந்தமிழ் ஆங்கிலம் செழுங்கலை விஞ்ஞானம்மல்லாவி பொழில் மேவும் எம் அன்னை எழில்கொஞ்சும் கலைக்கல்வி எல்லோரும் ஏற்றுபுகழ் – யோகபுரம் தனில்மல்லாவி பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே! மல்லாவி மகாவித்தியாலயம் – அன்னை

இப்பாடசாலை யாழ் கல்வித் திணைக்களத்திற்கு பின்னர் வவுனியா கல்வித் திணைக்களத்துடன் இணைக்கப்பட்டு வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.

15.02.1981 இல்

முல்லைத்தீவு கல்வித் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் பாடசாலை மாற்றப்பட்டது. 28.10.1982 வரை மல்லாவி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை என்ற பெயருடன் இயங்கிவந்த இந்தப் பாடசாலை 29.10.1982 இல் தரம் உயர்த்தப்பட்டு முஃமல்லாவி மகாவித்தியாலயம் எனப் பெயர் மாற்றப்பட்டது. பிரம்மஸ்ரீ வீரமணிஐயரைக் கொண்டு கீதம் இயற்றப்பட்டு பாடப்பட்டு வந்தது.  க.பொ.த சாதாரண தரத்துடன் இயங்கிவந்த இப்பாடசாலை 06.06.1979 இல் க.பொ.த உயர்தர கலை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. அன்றைய காலப்பகுதியில் வட்டாரக்கல்வி அதிகாரியாக இருந்த திரு.மு.சிவானந்தம் அவர்களால் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. வகுப்புக்களின் வளர்ச்சி ஒருபுறமிருக்க விஞ்ஞான ஆய்வு கூடம் அமைக்கும் பணியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டு வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டு 1981 இல் கட்டடம் ஒப்படைக்கப்பட்டது. இவ் ஆய்வுகூடம் பாடசாலையின் முதல் மாணவியான செல்வி செ.குலேஸ்வரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

28.02.1978 வரை

இப்பாடசாலை யாழ்ப்பாணக்கல்வித் திணைக்களத்தின் கீழ் செயற்பட்டு வந்தது. பின்னர் வவுனியா கல்வித் திணைக்கள நிர்வாகத்தின் கீழ் இப்பாடசாலை மாற்றம் செய்யப்பட்டது.

1977 இல்

வகுப்பறைகள் ஒன்றிணைந்த பாடத்திட்டத்திற்கேற்ப ஐந்தாம் ஆறாம் மண்டபங்கள் வரையறுக்கப்பட்டு பிரிக்கப்பட்டு ஒன்றிணைந்த பாடத்திட்டப்படி வகுப்புக்கள் நடத்தப்பட்டன. ஆனாலும் மாணவர்களின் குடிநீர்ப் பிரச்சினை தாண்டவமாடியதால் அப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக 15.09.1978 இல் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரால் தண்ணீர்க்குழாய்கள் பொருத்தப்பட்டு குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.என்பவற்றை வட்டாரக்கல்வி அதிகாரியாக இருந்த திரு.சி.இ.மயில்வாகனம் என்பவர் பொறுப் பேற்று அதிபர் திரு.செ.மயில்வாகனம் அவர்களிடம் ஒப்படைத்தார்.

1974 ஆம் ஆண்டில்

இப்பாடசாலையில் பரீட்சை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு பரீட்சைகள் நடைபெற்றன. காணி இருபத்தைந்து ஏக்கர்  8அறை கொண்ட தனிஆசிரியர்விடுதி –  01, ஆசிரியர் விடுதி – 01, அதிபர் விடுதி – 01, நிர்வாகப் பகுதி கட்டிடம் – 01, சலகூடம் – 01, தண்ணீர்த் தொட்டி – 01, மலசலகூடங்கள் – 02, பாடசாலைக்கட்டிடங்கள் – 03 என்பன 21.01.1974 இல் நிலஅபிவிருத்தி திணைக்களத்தினரால் அமைக்கப்பட்ட கட்டங்களாவன.

அன்னைஅரசினர் தமிழ்க்கலைவன் பாடசாலைக்கீதம்

(இக்கீதம் முழுமையாகக் கிடைக்கவில்லை)வாழியவேநற்றாயிவைகளும் நின்பணியே. எமை நல்வழியிலே ஏற்றி பணிந்திடும்சற்சனராக்குவதும் நின் பணியேசமயக்கலையினால் இறைவன்பாதம் தொழும்வாழியவேபார்மேல் எமக்கென்றும் தருவாயேபாகோவெனும் பாடல் பேச்சும் நடனமும்போற்றும் நல்லாங்கிலம் தருவாயேபூகோள சாத்திரம் வரலாறு சித்திரம்வாழியவேஎஞ்ஞான்றும் தந்திடும் எம் தாயே.அஞ்ஞானம் நீங்கிட அறிவுக்கலைகளைஎஞ்ஞான்றும் தந்திடும் எம் தாயேவிஞ்ஞான தத்துவம் மெஞ்ஞான பொக்கிசம்வாழியவேசோதி கொடுத்திடும் பாடசாலைசூழுகவே பலர் உள்ளத்திலே ஞானமல்லாவி அரசினர் பாடசாலைவாழியவே எங்கள் பாடசாலை.

01.01.1973 இல்

அரசாங்கத்தின் அனுமதியுடன் 10 ஆம் தரம் (க.பொ.த சாஃத) ஆரம்பிக்கப்பட்டது. 1973 மார்கழியில் முதன்முறையாக க.பொ.த சாஃத பரீட்சைக்கு 15 மாணவர்கள் தோற்றினார்கள். இவ் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயற்பட்டவர் அன்றிருந்த வட்டாரக்கல்வி அதிகாரி திரு.த.இராமலிங்கம் என்பவராவர்.

05.01.1971இல்

கல்வியமைச்சின்தீர்மானத்திற்கு அமைய 8ஆம் தரம் ஆரம்பிக்கப்பட்டது. 20.01.1972 இல் 9 ஆம் தரமும் ஆரம்பிக்கப்பட்டது. புதிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டமையால் இடப்பற்றாக் குறையினை சந்தித்தது இப்பாடசாலை. இக்குறையை நிவர்த்திசெய்யும் முகமாக 20.01.1972 இல் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடங்களை அபிவிருத்தித் திணைக்களத்திடமிருந்து பொறுப்பேற்று 26.01.1972 தொடக்கம் 01 ஆம், 02ஆம் மண்டபங்களில் வகுப்புக்கள் நடத்தப்பட்டன. பெற்றுக்கொண்ட காணிகள் நில அபிவிருத்தி திணைக்களத்தினரால் காடு வெட்டித் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. திணைக்களத்தினருடன் இணைந்து பொதுமக்களின் பங்களிப்பும் கணிசமாக இருந்தது. காடுகள் வெட்டி திருத்தப்பட்ட இடங்களில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ந்து வந்த காலப்பகுதியில் தான் இப்பாடசாலையும் கிராம வாழ் மக்களும் பெரும் பேற்றினைப் பெற்றனர். தன்னலமற்ற சேவையாளனும் பண்பாளனுமான அமரர் செ.மயில்வாகனம் அவர்கள் கல்விளானில் இருந்து மாற்றலாகி இங்கு வந்து தனது சேவைக்கென கால் பதித்த காலம். இக்காலம் கல்லூரியின் பொற்காலம். திரு.செ.மயில்வாகனம் அவர்கள் பெரியவர்களை நாடி இப்பாடசாலைக்கு உரமூட்ட உதவிக்கரங்கள் எழ வேண்டும் என வேண்டினார்.

17.05.1969 இல்

காணி ஆணையாளர் திணைக்களம் இப்பாடசாலையின் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளத் தொடங்கியது. இந் நேரத்தில் பாடசாலையின், பெற்றார் ஆசிரியர் சங்க செயலாளர் திரு.சு.தியாகராஜா அவர்கள் தனது வயற் காணியை  திரு.சு.இராமையா அவர்களுக்கு இலவசமாக வழங்கிவிட்டு பாடசாலைக்கு அருகிலுள்ள திரு.சு.இராமையா அவர்களின் காணியைப் பெற்றுக்கொண்டார். இவரது மனப் பூர்வமான நன்கொடையாக அக்காணியைப் பாடசாலைக்கென அன்பளிப்புச் செய்தார். அத்துடன் ஏனைய வகுப்புத் திட்டத்தின்கீழ் கொடுக்கப்பட்ட காணிகளும் பாடசாலையின் நற்பயனுக்கெனப் பெறப்பட்டது.

08.10.1964 இல்

நில அபிவிருத்தி திணைக்களத்தினரது ஆதரவில் பாடசாலை மண்டபம் ஒன்றும், கிணறொன்றும், மலசல கூடம் ஒன்றும், ஆசிரியர் விடுதிகள் இரண்டும், அதிபர் விடுதி ஒன்றும் அமைக்கப்பட்டது. வித்தியாதரசி திரு.க.கனகசபாபதி அவர்கள் இதனை பொறுப்பேற்று கட்டி முடித்து பாடசாலை அதிபரிடம் நிரந்தர கட்டடங்கள் ஒப்படைக்கப்பட்டன. வளர்ச்சிப் படியின் முதல் படியை அடைந்துவிட்ட மகிழ்ச்சியில் இப் பாடசாலை திகழ்ந்தது. தொடர்ந்து கல்விப் பணியின் விரிவுபடுத்தலினால் 1964 ஆம் ஆண்டில் 6 ஆம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1965 ஆம் ஆண்டில் 7 ஆம் வகுப்பு ஆரம்பமானது. இவ் வளர்ச்சிக்கு ஊன்று கோலாக செயற்பட்டவர் அன்று அதிபராக இருந்த  பண்டிதர் மு.ஆறுமுகம் என்னும் பெருந்தகை ஆவார். இவரின் காலப்பகுதியில் வகுப்புக்களின் வளர்ச்சியும் மாணவர்களின் கற்றல் ஈடுபாடும் உயர்ந்திருந்தது. இவரது அயராத உழைப்பால் பல்வேறு கல்வித்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன.  திருநெல்வேலியைச் சேர்ந்தவரும் வர்த்தகரும் ஆகிய திரு நல்லதம்பி அவர்கள் மல்லாவியிலே நடுத்தர வகுப்பு திட்டத்தின் கீழ், அரசாங்கத்திடம் இருந்து பெற்ற காணியில் ஐந்து ஏக்கரை நிறைந்த மனத்துடன் பாடசாலைக்கென இலவசமாக வழங்கினார். தமது பிள்ளைகளின் கல்வியை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த இக்கிராம வாழ் மக்கள் ஒன்று சேர்ந்து அன்பளிப்பாகப் பெறப்பட்ட காணியை சிரமதானம் மூலம் துப்புரவுசெய்து தற்காலிகக்கட்டடம் ஒன்றை அமைத்தனர்.  பழைய இடத்தில் இருந்த பாடசாலை இன்று உள்ள இதே இடத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டுப் பாடசாலை வடிவம் பெற்றதோடு இன்று தலை நிமிர்ந்து நிற்கும் கல்லூரியாகப் பரிணமித்தது. அக்காலப் பகுதியில் திரு.க.பெரியதம்பி அவர்கள் அதிபராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.  திரு.சி.நடராசா அவர்களின் சேவை மனப்பாங்கினாலும் மக்களின் ஊக்கத்தினாலும் 10.02.1961 இல் அரசாங்கம் இப் பாடசாலையைப் பொறுப்பேற்றுக் கொண்டது. அரசு பொறுப்பேற்றுக் கொண்ட போது திரு.சி.நடராசா அவர்களே அதிபராக செயற்பட்டார். இவரது சேவைக்காலம் குறுகிய சேவையே ஆனாலும் நீண்ட கால பயனுறுதிக்கான அடித்தளமாக அமைந்தது. வளங்கொழிக்கும் வன்னி வள நாட்டின் முல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மல்லாவி என்னும் பதி உண்டு. பண்டாரவன்னியனின் வழித்தோன்றல்கள் வாழ்ந்த இடம். வீரத்திற்கு தலைகுனியா மண். அம் மண்ணிலே கல்விக்கு ஏங்கித்தவித்த மக்களின் ஏக்கத்தை போக்கவென 26.11.1959 இல் திருமதி வேலுப்பிள்ளை செல்வமுத்துவின் காணியில் கல்விக்கான அத்திவாரம் இடப்பட்டது. புளிய மரத்தடியில் சிறு கொண்டிலில் வித்தியாதானம் ஆரம்பமானது. ஆரம்பத்தில் ஒன்பது மாணவர்களைக் கொண்டியங்கிய கல்விக்கூடத்தை அரசாங்கத்திடம் பதிவு செய்யும் நோக்ககுடன் விண்ணப்பம் செய்யப்பட்டது.

26.11.1959 அன்று

9 மாணவர்கள் பாடசாலைக்கு வந்திருந்தனர். 3 வயதில் இருந்து மாணவர்கள் வந்திருந்தார்கள். முதல் பதிவு செய்த மாணவி செ.குலேஸ்வரி ஆவர். 26.11.1959 வித்தியாதானம் ஆரம்பமானது. தொடர்ந்து பாடசாலை ஆரம்பித்ததை அறிந்து நடராசா, சிவபாக்கியம், பரமேஸ்வரி, சுந்தரமூர்த்தி போன்றவர்கள் படிப்படியாக வந்து சேர்ந்தனர். நடராசா அவர்கள் அதிபரானார்.  அரசு  பாடசாலையைப் பொறுப்பெடுத்துக்கொண்ட நாளன்றே எமக்கு (10.02.1961) நிரந்தர நியமனமும் கிடைத்தது என்றார். தொடர்ந்து முதல் ஆசிரியை சிவசக்தி சுந்தரமூர்த்தி அவர்கள். அவர் கூறிய விடயங்களை மிகவும்  சுருக்கமாகக் கூறலாம்.

பாடசாலை ஆரம்பித்ததற்கும் கொலனித் திட்டம் கொடுக்கப்பட்டதற்கும் சரியாக இருந்தது. எமது கொட்டில் பள்ளிக்கூடத்துக்கு கொலனித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் இருந்து வந்த மக்களும் தமது பிள்ளைகளை அனுப்பினார்கள். மாணவர் தொகை அதிகரித்தது. அன்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களைச் சென்று சந்தித்து மாணவர் தொகை, அயற் பாடசாலைகளின் தூரம் என்பவற்றை காரணம் காட்டி அரசிடம் பதிவு செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தோம். அரசிடம் பதிவு செய்வதற்காகப் பாடசாலைக்கு “கணேச வித்தியாலயம்” என்ற பெயரையும் இட்டிருந்தோம்.  பாராளுமன்ற உறுப்பினர் திருவாளர் நவரத்தினம்; அவர்கள் தாம் வந்து பார்வையிட்ட பின்னரே பதில் கூறுவதாகச் சொன்னார். புளியடிக்கொட்டிலைப் பார்த்தால் அரசு அனுமதி தரப்போவதில்லை என்பது எமக்குத் தெரியும். அதனால்  தற்போது பாடசாலை அமைந்திருக்கும் காணி, காணி உரிமையாளருக்கு (பெயர் ஞாபகம் இல்லை) வழங்கப்பட்ட போதும் அவர் தனது ஊரில் இருந்து இங்கு வரவில்லை அதனால் அக்காணி வெற்றுக்காணியாக இருந்தது. அன்றிருந்த DRO வின் வேண்டுதலின் பெயரில் அந்த காணியில் 20 × 40 அடி கொண்ட கொட்டிலை இக் கிராம வாழ் மக்கள் அனைவரும் சேர்த்து அமைத்துக் கொண்டோம். பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் வந்து பார்வையிட்டார். பாடசாலை அமைவதற்கான சூழல் அங்கு காணப்பட்டதால் அரசிடம் பதிவதற்கான அனுமதியும் கிடைத்தது. 10.02.1961 ஆம் ஆண்டு பாடசாலையை அரசு பொறுப்பெடுப்பதாகக் கூறினார்.  மல்லாவி பகுதியிலும் ஒரு பாடசாலை அமைந்தால் என்ன? ஏன் எமது பிள்ளைகள் தூர இடம் போய்ப் படிக்க வேண்டும்? என்ற எண்ணம் அலை மோதிக் கொண்டிருந்தது. அன்றிருந்த DRO, வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களைச் சென்று சந்தித்தேன். அவர்களின் ஆலோசனையைக் கேட்டக்கொண்டேன். கடவுளை வேண்டினேன் அம்மாவிடமும் விடையத்தைக் கூறினேன். அம்மா தனது வளவில் கொட்டிலைப் போடும்படி கூறினார். சிறிய கொட்டில் ஒன்றை அமைத்தேன். எனது துணைவியாரின் உறவினரான சிவசக்தியை மீசாலையில் போய்ச் சந்தித்து தகவலைச் சொன்னேன். கொட்டில் பள்ளிக்கூடத்துக்குப் படிப்பிக்க வர வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.  அவரும் சம்மதித்தார். 26.11.1959 ஆம் ஆண்டு கொக்காவில் வீதி, ஆலங்குளம், மல்லாவி போன்ற கிராமங்களில் இருந்து பிள்ளைகளை அழைத்து வந்தோம். வந்த பிள்ளைகள் 09 பேர் மாத்திரமே என்றாலும் கல்வி ஆரம்பிக்கப்பட்டது என்றார். மல்லாவிப் பகுதியில் பழைய குடியிருப்பாளர் ஆகிய நாம் எமது பிள்ளைகளை அணிஞ்சியன் குளம் பாடசாலைக்கு கல்வி கற்பதற்காக அனுப்பி வந்தோம். பாதைகள் இருமருங்கிலும் அடர்ந்த காடு சிறிய வீதி ஊடாகவே பிள்ளைகள் நடந்து செல்வார்கள். இடையிடையே காட்டு விலங்குகளின் தொந்தரவுகளும் இருந்து வந்தது. இதன் காரணமாக எமது பிள்ளைகள் பாடசாலைக்கு உரிய நேரத்திற்குச் செல்வது குறைவாக இருந்தது. நேரம் பிந்திப் பாடசாலைக்குச் சென்ற காரணத்தினாலும் ஏதோ குழப்படி செய்து விட்டான் என்றும் எனது மூத்த மகன் செல்வம், ஆசிரியரால் தண்டிக்கப்பட்டான். தந்தையாகிய என்னையும் அழைத்து “உனது மகனுக்குப் படிப்பு சரிவராது வீட்டை கூட்டிக்கொண்டு போ” என்று அந்த ஆசிரியை கூறிவிட்டார். உடனயே மகனை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். எனக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. இனிமேல் அந்தப் பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்புவதில்லை என முடிவுசெய்தேன்.

செல்லமுத்தாச்சி என்று செல்லமாக அழைக்கப்படும் அபிராமி அம்மாவின் மகன் கார்த்திகேசு (சைவம்) அவர்களை சந்தித்து பாடசாலை பற்றிக் கேட்ட போது புன்னகை பூத்த முகத்துடன்  தான் செய்து கொண்ட பணி பற்றி மிகவும் சுவாரசியமாக வரலாற்றைக் கூறி முடித்தார். இவர் கூறிய வரலாற்றுத் தகவல்களைச் சுருக்கமாக கீழே தருகின்றேன்.

செவி வழியாகக் கேட்கப்பட்ட வரலாறு- இடப்பெயர்வுகள், யுத்த கொடூரங்களில் எமது உடமைகளை இழந்தோம், உயிர்களை இழந்தோம், உடல் அவையங்களை இழந்தோம், கல்வியை மட்டும் எம்மோடு சுமந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் இருந்து முட்கம்பி வேலிவரை சென்று மீண்டும் வந்திருக்கின்றோம். அந்த கல்வியை தந்த கல்லூரியின் வரலாற்றை எழுதுவதற்கு கல்லூரியில் ஆவணங்கள் ஏதும் இல்லை இருந்த போதும் கல்லூரியை உருவாக்கிய தலைமுறையினர் இருப்பதனால் அவர்களிடம் கேட்டு பெற்றுகொண்ட தகவல்களுடனும்; “வரலாற்று பாதையில்” என்ற நூலில் இருந்து எடுத்து கொண்ட தகவல்களுடனும் தற்போதைய அதிபர், ஆசிரியர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களையும் சேர்த்து கல்லூரியின் வரலாறு எழுதப்படுகின்றது.  முல்லையும், மருதமும் ஒருங்கே சேர்ந்து குளங்களும், ஆறுகளும் என்றும் பசுமையைக் கொடுக்கும் வன்னி நிலத்தில் பண்டைய மரபுவழித் தோன்றல்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். எழில் கொஞ்சும் வன்னியில் வளங்களோ ஏராளம். வன்னியின் பழங்குடியினர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் துணுக்காய் பிரதேசமும் ஒன்று. ஆங்கிலேயர் காலத்தில் துணுக்காய், கோட்டைகட்டியகுளம், தென்னியன்குளம், ஆலங்குளம் போன்ற பகுதிகளில் மக்கள் வாழ்ந்ததாகவும் நாளடைவில் அவர்கள் வாழ்வாதாரத்தைத் தேடிப் பரந்து வாழ்ந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிற்குள் 19 குளங்கள் காணப்படுகின்றன. குளங்களை அண்டிய பகுதிகளில் மக்கள் தமது குடியிருப்புக்களை அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர். வேட்டைச் சமூகத்தில் இருந்து பிரதான உழவுத் தொழிலையும் மேற்கொண்டுள்ளனர். பேய் வழிபாட்டின் வளர்ச்சியாக சந்நியாசி, காளி, வைரவர் கோயில்களை இன்றும் காணக்கூடியதாக உள்ளது. வவுனிக்குளம் சிவாலயம், கோட்டைகட்டியகுளம் சிவலாயம் பழம்பெரும் வரலாற்றைக் கொண்டுள்ள சிவாலயங்கள் ஆகும். ஆங்கிலேயர் காலத்தில் இப்பிரதேசத்தில் ஓரிரு பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டாலும் குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கபட்ட பிற்பாடு பல பாடசாலைகள் உருவாகின. அந்த வகையில் இன்று துணுக்காய் பிரதேசத்தில் 19 பாடசாலைகள் உள்ளன. அதில் ஒன்று தான் மல்லாவி மத்தியகல்லூரி. காராளர் வாழும் கன்னியர் நாடு”கன்னி நாடு கதிர்சோலை நாடுவரியம் மூன்று விளைவுள்ள நாடு“வன்னி வளநாடு வளர்சோலை நாடுகல்லூரியின் வரலாறு

மேலதிக விபரங்களுக்கு – http://www.mallavicc.sch.lk இணையம்.
By – Shutharsan.S

Sharing is caring!

Add your review

12345