மாதகல்

மாதகலின் தொன்மை வரலாறு நீண்ட முனைப்புக்களைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணப்பட்டினத்தின் வடமேற்குக் கடல் எல்லையில் அமைந்துள்ள இக்கிராமம், சங்க காலத்தில் வருணிக்கப்பட்டுள்ள, மருதம், நெய்தல் ஆகிய நிலங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
வரலாற்றுப் பின்னணியில், மாதகல் என்ற நாமத்திற்கு அர்த்தம் விளங்கிக் கொள்ளும் போது கி.பி. 3 ம் நூற்றாண்டில் அசோகச் சக்கரவர்த்தியினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மகிந்ததேரோவின் சகோதரி சங்கமித்தை சம்புத்துறையில் இறங்கி சென்றமையால் (மாது அகல்) மாதகல் என்றும், அக் கிராமத்தில் பல புலவர்கள் வாழ்ந்த படியால் கலை விருத்திக்குச் சிறந்த இடமாக கருதப்பட்டது. மாது – நாமகள், கல் – கல்வி என்று அர்த்தம் கொள்ளலாம். “மா” என்பது பெரியது. “தகல்” என்பது “அகல்” என மருவியது. அது கிடங்கு எனப் பொருள் படும். பல கிடங்குகளில் நீர் நிறைந்து நின்ற கிராமம்.
எவ்வாறெனினும் மாதகல் என்ற கிராமம் ஒரு பழமை வாய்ந்த இடம் என்று எதுவித ஐயப்பாடும் இன்றிக் கூறலாம்.

மாதகலின் கலை கலாச்சாரம்

மருதமும், நெய்தலும் இணைந்த நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. மருதம், நெய்தல் ஆகிய நிலங்களில் வாழ்ந்த மக்கள் தத்தமக்குரிய நிலங்களின் தன்மைகளுக்கேற்ப இயற்கையோடு கூடிய சிறப்புடன் வாழ்ந்து வந்தனர். தத்தம் தொழிலுக்கும், நிலத்திற்கும் ஏற்புடையவனவாயிருந்த பழக்க வழக்கங்களை போற்றி ஒழுகி வந்தனர். நில வேறுபாடுகளுக்கு ஏற்ப மக்கள் குழுவினரிடையே வேறுபாடுகள் இருந்த போதிலும் அவர்களிடையே உயர்வு தாழ்வு பாராட்டப்படவில்லை.
இந்நிலங்களில் ஆவணி, புரட்டாதி, மாதங்களில் நெல் விதைத்து தை, மாசி மாதங்களில் அறுவடை செய்வர். சிறு போகத்தில் வெங்காயம், புகையிலை, கத்தரி, மிளகாய் ஆகிய பயிரினங்கள் நாட்டப்படுகின்றன.
இவர்கள் கூட்டு வாழ்க்கை அவர்களது முக்கிய பண்பாக இருந்து வருகின்றது. திருமணம் இனத்தவர்களிடையே நடைபெறும். வெளியூர்களில் திருமணம் செய்வது மிகவும் அரிது. “சோறு கொடுத்தல்” என்பது திருமணம் முற்றாகி விட்டது என்பதற்கு அர்த்தமாகும்.
இசைக் கலை, நாடகக் கலை, கட்டிடக் கலைகளில் மாதகல் மக்கள் சிறந்து விளங்குகின்றனர். சங்கீதத்தில் பாண்டித்தியம் பெற்ற குடும்பங்களும் சில உண்டு.
சைவமக்களும் கிறீஸ்தவ மக்களும் கலைகளை வளர்ப்பதில் அக்கறை கொண்டுள்ளனர்.

Sharing is caring!

1 review on “மாதகல்”

Add your review

12345