மாமாங்கேஸ்வரர் ஆலயம்

மாமாங்கேஸ்வரர்

வங்காள விரிகடலின் வலக்கை போல வற்றாமல் பாய்கின்ற வாவியோரம் கோயில் கொண்ட மாமாங்கர பிள்ளையாராகவும் ஈஸ்வரராகவும் அமர்ந்து அருள்பாலிக்கும் அமிர்தகழிப்பதி, மூர்த்தி, தலம் தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றதே மாமாங்கேஸ்வரர் ஆலயம் ஆகும். சைவமும் தமிழும் தழைத்தோங்கும் மீன்பாடும் தேன்நாட்டில் ஆலயங்கள் நிறைந்து காணப்பட்டாலும், பிள்ளையார் முருகன் ஆலயங்களே நிறைந்து காணப்படுகின்றன. கொக்கொட்டிச்சோலை, தான்தோன்றீஸ்வரர் ஆலயமும் அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயமுமே சிவன் ஆலயங்களாக காணப்பட்டன.

எனினும் மாமாங்கேஸ்வரர் ஆலயம் பின்னர் பிள்ளையார் ஆலயமாக கொள்ளப்பட்டது. தந்தையின் தலம் தனயனின் தலமாக ஏன் எப்போது ஆனது அல்லது ஆக்கப்பட்டது என்பதற்கு நாமறிந்த வரையில் ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

ஆரம்ப காலத்தில் இக்கோயிலை ஆதரித்து வந்த மெய்யடியார் ஒருவருக்கு கனவில் மாமாங்கேஸ்வரப் பெருமான் தோன்றி, மாசிமகத்தன்று தன்னை மாமாங்கப்பிள்ளையாராக ஆதரிக்கும்படி கட்டனையிட்டருளினான் என கூறப்பட்டுள்ளது. இந்த இலிங்கமே ஆலய கர்ப்பக்கிரகத்தில் அமைந்துள்ளது.

மாமாங்கேஸ்வரர்

இதை இன்றும் ஆலயத்தில் நேரில் காணலாம் இவ்வாறு இவ்வாலயத்தின் வண்ணக்கராக இருந்த த. நாகையா என்பவரால் வெளியிடப்பட்ட மட்டுநகர் ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வரலாறு என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாமகம் என்பதே மாமாங்கம் என்று திரிபுபட்டதாகவும் அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாலயத்தில் தற்போது ஆடி அமாவாசை தினத்தன்று தீர்த்தோற்சவமும் அதற்கு முந்திய எட்டு நாட்கள் திருவிழாவும் நடைபெற்று வருகின்றது. நாவற்குடாவைச் சேர்ந்தவரும் தற்போது கனடாவில் வசிப்பவருமான,  தங்கராசா என்பவரின் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரப் பிள்ளையார் மான்மியம் என்னும் நூலில் இராமர் அனுமான் காசி முனிவர் ஆடகசவுந்தரி ஆகியோருடன் இந்த ஆலயத்துக்கு வரலாற்று தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆறு வரலாறுகள் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கேஸ்வரனை வெற்றிவாகை சூடி இராமன் அயோத்தி திரும்பும் வழியில் தற்போது இத்தலம் அமைந்துள்ள இடத்தில் தரித்து மண்ணால் சிவலிங்கம் செய்து கதாயுதத்தை நிலத்தில் ஊன்றி தீர்த்தம் பெற்று அதனை அபிசேகம் செய்து வழிபட்டதாகவும் அந்த லிங்கமே ஆலயத்தில் வழிபடப்படுவதாகவும் தீர்த்தம் பெற்ற இடமே தீர்த்த குளம் எனவும் ஒரு வரலாறு.

மாமாங்கேஸ்வரர்

சிவபூசை செய்வதற்கு இவ்விடத்தில் தரித்த இராமர் சிவலிங்கம் ஒன்றை எடுத்துவரும்படி அனுமானை இந்தியாவுக்கு அனுப்பியதாகவும் அவன் தாமதிக்கவே மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டதாகவும் பின்னர் அனுமான் கொண்டு வந்த லிங்கத்தை கதாயுதத்தை ஊன்றிய இடத்தில் பதித்ததாகவும் மாமாங்க தீர்த்தத்தின் மகிமைக்கு அதுவே காரணம் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு இராமர் வழிபட்ட லிங்கம் காடு வளர்ந்து மறையுண்டிருந்த நிலையில் அவ்விடத்துக்கு களைப்பு நீங்க வந்த வேடன் ஒருவன் கண்ணயர்ந்தபோது லிங்கம் பற்றி தரிசனம் கிடைக்கவே அவன் லிங்கத்தை கண்டுபிடித்து கொத்துப்பந்தல் அமைத்து வழிபட்டு கோயிலானது என்றும் கூறுப்படுகிறது. இதையே கவிஞர் செ. குணரத்தினம் கொடிய வனவிலங்குகளின் கூட்டத்தோடு குடிவாழ்ந்த வேடுவரின் தெய்வமானாய் என்று பாடியுள்ளார்.

சூரனை வதைத்த முருகனின் வேலானது பல கிளைகளாக பல இடங்களிலும் பாய்ந்தது என்றும் அதை வேடுவர் கண்டு கொத்துப் பந்தல் அமைத்து வழிபட்டு கோயில் ஆனது என்றும் மண்டூர் முருகன் ஆலய வரலாறு பற்றி கூறப்படுகிறது.

மண்டூர் கவிஞர் மு. சோமசுந்தரம்பிள்ளை அவரின் திருமண்டூர் முருக மாலையில் ‘வல்லபெரு வேடரதைக் கண்டாரென்றும் வடிவாகத் தேனமுது செய்தாரென்றும்….’ என்று பாடியுள்ளார்.

கிழக்கிலங்கையில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்கள் யாவும் இவ்வாறு சில சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதை அறியக்கூடியதாகவுள்ளது. கொக்கொட்டிச்சோலையில் காடுவெட்டும்போது கொக்கட்டி மரத்தில் இருந்து இரத்தம் பீறிட்டதாகவும் பின்னர் அந்த இடத்தில் ஒரு லிங்கம் இருக்க காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

கொக்கட்டி மரநிழலில் கோவில் கொண்டாய்.. திக்கெட்டும் மணம்கமழும் சேறுகொண்ட தீர்த்தத்தில் நீராட பேறும் தந்தாய்…. என்று கவிஞர் செ. குணரத்தினம் பாடியுள்ளார். எனவே கொக்கொட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் போன்று மாமாங்கேஸ்வரமும் கொக்கட்டி மரத்துடன் தொடர்புபட்டுள்ளது. வித்துவான் வீ. சீ. கந்தையா அவரின் மட்டக்களப்பு சைவக் கோயில்கள் என்ற நூலில் கொக்குநெட்டி மரம் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே கொக்குநெட்டி, கொக்கொட்டி, கொக்கட்டி ஆகிய மூன்று மரங்களும் ஒன்றா அல்லது வெவ்வேறானவையா என்பது தெரியவில்லை.

இவற்றை நாம் நோக்கும்போது மண்டூர் கொக்கொட்டிச்சோலை மாமாங்கம் ஆகிய மூன்று திருத்தலங்களும் மரங்களோடும் வேடருடனும் தொடர்புபட்டுள்ளதை அறியலாம். பண்டைய மக்கள் இயற்கையை இரசித்து இயற்கையுடன் வாழ்ந்து அந்த இயற்கையையே வழிபட்டவர்கள். இடியையும் மின்னலையும் கூட வழிபட்டனர்.

அருவிகள், ஆறுகள், ஓடைகளும் காடுகளும் களனிகளும் நிழல் தந்து குளுகுளு என குளுமை தரும் விருட்சங்களும் நிறைந்திருந்ததால் அங்கு எழில் கொஞ்சும் அருவிகள் சலசலத்து ஓட அதிலே மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடும். குளத்திலே பூத்துக் குலுங்கியுள்ள பூக்களில் தேனுண்ண வரும் வண்டுகள் கானரீங்கார மிடும் குருவிகளும் கொக்குகளும் பறப்பதும் போவதும் வருவதுமாய் இருக்கும்.

மந்திகள் மரங்களில் தாவிக் குதிக்கும். இவ்வாறு ஓர் இரம்மியமான சூழலை மாமாங்கம் கொண்டிருந்தது. அத்துடன் வங்காள விரிகுடாவில் முத்தமிட்டு வரும் காற்று இங்குள்ள மாமங்கை நதியை கட்டித்தழுவி நிலத்திலே கட்டிப்புரண்டது. எனவே ஆன்மாவானது ஆண்டவனுடன் லயப்பட அமைதி எனும் தகுதியை இத்தலம் கொண்டிருந்தது. அன்று ஆலய வழிபாட்டுக்கு மக்கள் அமைதியை நாடினார்கள். ஆனால் இன்று சினிமா பாடலும் படமும் இல்லையென்றால் கோயில்களில் கூட்டமே இல்லை என்றாகியுள்ளமை வேதனைக்குரியதாகும்.

தாழையும் நாணலும் தென்னையும் புன்னையும் நிறைந்து கமுரும் கரும்பும் வாழையும் செறிந்து காட்டிலும் வந்த ஏழு தீர்த்தங்கள் மாமாங்க குளத்தில் சங்கமித்ததாக கூறப்படுகிறது. அனுமார் தீர்த்தம், காக்கை தீர்த்தம், நற்றண்ணீர்மடு, இவ்வாறாக பல தீர்த்தங்களின் சங்கமத்துடன் சந்தனச் சேறு நிறைந்த அமிர்தகழி- மாமாங்கத் தீர்த்தம் தீராத நோய்களை தீர்க்கும் அருள் மிக்கது. ஆடகசவுந்தரி என்னும் அரசி இக்குளத்தில் நீராடி மார்பகம் போன்றிருந்த மச்சம் நீங்கப் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. கீரிமலையில் நீராடிய மாருதப்புர விகவல்லியின் குதிரை முகம் மாறியதை இது நினைவு படுத்துகின்றது.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று சில சம்பவங்கள் மாற்றங்களுடனும் மாற்ற மின்றியும் பல ஆலயங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளமை ஆராய்ச்சிக்குரியதாகும்.

மற்குணத் தோல்புளையு மர்த்த நா ரீசனருள் மாசிலா மாமுகவனே மண்மகடன் வதன நிகர் மட்டுமா நகரமிர்த நதி’ என்று வித்துவான் அ. சரவணமுத்தனால் புகழப்பட்ட மாமங்கை தீர்த்தம் பிதிர் கடனுக்கும் பிரசித்தி பெற்றதாகும்.
மாமாங்கப் பிள்ளையாரின் உற்சவத்தில் கலந்து அவரின் அருளைப்பெற பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு கூடுவர். மட்டக்களப்பு மாவட்டத்தின் நாலாபுறம் இருந்தும் மக்கள் இங்கு குழுமுவர். பெற்றோரின் ஆத்ம சாந்திக்காக ஆடி அமாவாசை விரதம் இருந்து தீர்த்தமாடி அமுது படைத்து அன்னதானம் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். தீர்த்த குளத்தின் நாலாபுறமும் தீர்த்தமாட வசதியில்லை. அன்றியும் சேறு நிறைந்த சிறிய குளம் ஆதலால் எப்படியாவது தீர்த்தம் ஆடி அமாவாசை பலன் பெற திரளும் மக்களின் அரோகரா கோஷம் மெய்சிலிர்க்க வைக்கும்.

பிரமகத்தி தோஷமது நீங்கும் வண்ணம் பாரதமே சென்று பல தீர்த்தங்கொண்டு பாங்கான அமிர்தநதிக் குணமும் தொட்டதெங்கு செறி அமிர்தகழிப்பதியின் தீராத நோய் தீர்க்கும் தீர்த்தம் என்று பெருமை பெற்றது மாமாங்க தீர்த்தம் தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசையில் நடைபெறுகிறது. சூரியனும் சந்திரனும் கூடும் காலம் அமாவாசை எனப்படுகின்றது. பிதிர்காரகன் சூரியன், மாதிரு காரகன் சந்திரன். (பிதிர்+மாதிரி-தாய்- தந்தை) சிறந்த தாய் தந்தையரை நினைத்து பூசித்து வழிபடுவதற்கு ஆடி அமாவாசை உகந்த காலமாக கொள்ளப்படுகிறது. எனவே மட்டுநகரில் மாமாங்க தீர்த்தம் பிரசித்தி பெற்றுள்ளது.

எது எப்படி இருக்கும் போதிலும் ஆர்ப்பரிப்புகளும் ஆடம்பரங்களும் ஆடை அணிகளையும், ஆண்டவன் விரும்புவதில்லை. ஆலய வழிபாட்டுக்கும் அதனூடான ஆன்ம ஈடேற்றத்துக்கும் அமைதியே தேவை. உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம். நமது உள்ளமே புனிதமான தலம். எனவே இறைவனை நம் உள்ளத்திலே உணர்ந்து அவனை பேசவைத்து பேரின்பமடைவோம். அப்போது அமிர்தம் சொரியும். அருந்தி ஆனந்திப்போம்.

By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம் – http://kizkkuman.blogspot.com இணையம்.

Sharing is caring!

Add your review

12345