மார்க்கண்டு சுவாமிகள்

மார்க்கண்டு சுவாமிகள் பற்றிய ஒரு வரலாறு. “பூவில் வண்டு தேனைக் குடிக்கும் போது ஒரு சத்தமும் போடமாட்டாது. சில முத்தர்கள் புத்திமதிகளைக் சொல்லுவார்கள், வேறு சிலர் மௌனமாக இருந்து விடுவார்கள்.” மார்க்கண்டு சுவாமிகள் “வண்டுகள் பூவைக்கிண்டித் தேனை உண்டு ஒன்றுமறியாது கிடப்பதுபோல் சித்தமாகிய பூவைச் சிவத்தியானத்தினால் கிண்டி அங்கு வரும் ஆனந்தத் தேனையுண்டு ஒன்று இரண்டு நன்று தீதென்றறியாமல் (மௌனத்தில்) தேக்கிக் கிடந்த” சீவன் முத்தராவார்.

மார்க்கண்டு சுவாமிகள்

சிவயோக சுவாமிகள் இம்மோன முனிவரைத் தேடியாண்டனர் என்பதே பொருத்தமானது. பிரமச்சரியவிரதம், திருமுறைப்பற்று, ஆசையாம் பேயால் அலைக்கழிக்கப்படாமை, சிவனடியாரைச் சிவனென வணங்கும் சீலம் ஆகியவற்றால் அவரடைந்திருந்த தீவிர பக்குவம் சுவாமிகள் அவரைத் தேடி ஆள்வதற்குக் காரணமாயிற்று.

அவர் சுவாமிகளது ஆளுகைக்கு உட்பட்ட வேளையில் தியத்தலாவையிலுள்ள நில அளவைத் திணைக்களத்தில் உத்தியோகம் புரிந்தார். அவருக்குச் சுவாமிகள் அருளிய முதல் அருள்மொழி “வடதிசைகாட்டும் கருவியைப்போல் இருக்கவேண்டும்” என்பது. இவ்வருள் மொழியினாலே பரப்பிரமத்தையே எப்போதும் நோக்கி அசைவற்றிருப்பதைக் குறியாகக் கொள்ளுமாறு சுவாமிகள் அவருக்கு உபதேசித்தார். இக்குறியினை அடைதற் பொருட்டு உத்தியோக உயர்வு முதலாய தன்னல நாட்டங்களைத் துறந்து விடச் செய்ததுடன், திருத்தல யாத்திரை, சமய சாத்திரப் பயிற்சி, யோக சாதனை ஆதிய சமய சாதனைகளையும் நீத்துவிடச் செய்தார். அவருக்குக் காட்டிய குறியும் மோனம், அக்குறியை அடையக் காட்டிய நெறியும் மோனம். தியானம் செய்தால் அதுவும் ஒருவேலை, சும்மா பத்து நிமிடத்துக்கு இருக்கப்பழகு, என்ற வண்ணம் சும்மா இருக்கும் சாதனையையே சுவாமிகள் அவருக்குக் காட்டினார். ஆரம்பப் படியில் மனத்தை அடக்குதற்கும், ஒரு முகப்படுத்துவதற்கும், ஆன்மாவில் இலயிக்கச் செய்வதற்குமான சில பயிற்சிகளை வழங்கிய போதும் பின்னர் மன அசைவுகளையும் பார்த்துக்கொண்டு இருந்தபடியே இருக்கும் இருப்பிலேயே நிலைத்திருக்கும் வண்ணம் நெறிப்படுத்தினார்.

கருணைக்கடலான சுவாமிகளது அகத்திலிருந்து பெருகிய அருள் மொழிகள் மந்திரசத்தியுடன் மார்க்கண்டு முனிவருக்கு நேரிய- கிட்டிய வழியைக் காட்டின. பக்தி (நித்திய வஸ்துவில் நிலைக்கும் தீவிரதாகம்) நிர்வாணம் (ஆசை அனைத்தையும் அடியோடு அகற்றிய வைராக்கியம்) இரண்டும் போதும் எனச் சுவாமிகள் அவருக்குச் சொன்னார். இந்தப் பக்தி, நிர்வாணம் இரண்டினாலும் பரிசுத்தமான மனம் ஒன்றே திருவடி சேர்வதற்குப் போதுமானதென இன்னொருபோது சொன்னார்.

மார்க்கண்டு சுவாமிகளது குருபக்தி அசலானது. அவர் ‘எண்ணேன் பிறதெய்வம்’என்று சுவாமிகள் ஒருவரையே தெய்வமாகக் கொண்டார். “தன்னையறிந்தவரும், தன்னையறிய வழிகாட்டுபவருமான தலைவரிலும் மேலான கடவுளுண்டோ” எனக்கருதிய சுவாமிப்பித்தர் அவர். அவர் குருகூறிய மொழிகளையெல்லாம் அன்றன்றே குறித்துவைத்து ஆண்டுக்கணக்காக அவற்றைச் சிந்தித்துச் சிந்தித்து சீவலாபம் பெற முயன்றார். தம்மைச் சுவாமிகளிடம் பூரணமாக ஒப்படைத்தார். சுவாமிகளும் அவரைத் தாய்போல் தலையளி சொரிந்து ஈடேற்றினார்.

அவர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றதும் அவருக்கென ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்த கைதடிக் கொட்டிலில் குடியமர்த்தினார். சுவாமிகள் அங்கும் சென்று அவர் நிட்டையிலே நிலைத்திருப்பதற்கு உரமூட்டி வந்தார். ஒரு சிவராத்திரி நாள் மாலைப்பொழுதில் கைதடி ஆச்சிரமத்துக்குச் சென்று “எட்டாத கொப்புக்கு ஏணிவைத்து……” எனத் தொடங்கும் நல்லமுதப் பாடலைப் பாடிக் கொடுத்து இன்று நீர் மட்டும் நித்திரை விழித்தாற் போதும் எனக் கூறித் தான் பரமானந்தத் துயில் புரிந்தார். மார்க்கண்டு சுவாமிகளும் அன்றிரவு முழுதும் எட்டாத கொப்பில் இருக்கும் தேனமுதைத் தட்டாமற் சாப்பிட்டு நீங்காத நின்மல நிட்டையிற் பொருந்தியிருந்தார்.

சுவாமிகள் தமது குருவின் அக்கினிப்பிரவேச வேளையில் நடந்து கொண்டது போலவே மார்க்கண்டு சுவாமிகளும் சுவாமிகளது திருவடிக்கலப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத வண்ணம் இரண்டு மூன்று நாட்கள் எங்கோ மாயமாய் மறைந்திருந்தார்.

மார்க்கண்டு சுவாமிகள்

சுவாமிகளது திருவடிக்கலப்பின் பின்னர் சுவாமிகளது அன்பர் பலர் மார்க்கண்டு சுவாமிகளது திருவடிகளில் வீழ்ந்து கும்பிடலாயினர். அவர்களுக்குத் தமது நெஞ்சப் புத்தகத்தில் இருந்த நற்சிந்தனைப் பாக்களைக் கூறியதன்றித் தம் வாக்காக அவர் ஏதும் கூறியதில்லை. அவர் சுவாமிகள் என்னும் பேராது நிற்கும் பெருங்கருணைப் பேராற்றில் மூழ்கித் தனது சுயத்தை முற்றாக இழந்திருந்தார். அவர் சிவயோக சோதியொன்றையே தரிசித்திருந்ததுபோல் சுவாமிகளின் அடியவர்கள் அச்சோதியைத் தரிசிப்பதற்கான திசைகாட்டியாகவும் அமைந்தார். செங்கலடி சிவதொண்டன் நிலையத்தில் சுறுசுறுப்பாய்ச் சிவதொண்டு புரிந்த சந்தசுவாமிகள் நன்மோன நிறைவை நாடியபோது கைதடி ஆச்சிரமத்துக்கு வந்து அவரோடு கூடி உறைந்தது இதற்குத் தக்க சான்றாயமைந்தது.

மார்க்கண்டு சுவாமிகள் இரத்தாட்சி வருடம் வைகாசித்திங்கள் கார்த்திகை நாள் (29-05-1984) சமாதியுற்றனர். கைதடி ஆச்சிரமத்தில் அவர் புரிந்த திருவடி வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

By – Shutharsan.S
நன்றி – தகவல் மூலம் – http://www.sivathondan.org

தொடர்புடைய பதிவுகள்

Sharing is caring!

Add your review

12345