மாவடி ஞானவைரவர்

மாவடி ஞானவைரவர்

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல வளங்களும் ஒருங்கே அமையப்பெற்ற வட்டுக்கோட்டைத் தொகுதியின் பட்டினமாக விளங்கும் சங்கானை எனும் பதியில் தென்கிழக்கில் அமைந்து அருள்பாலிக்கும் திவ்ய சேத்திரம் சங்கானை மாவடி ஞானவைரவ தேவஸ்தானம் ஆகும். இவ் ஆலயம் முந்நூறு வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக்கொண்டது.

பனை மரங்களும் தென்னை மரங்களும் மாஞ்சோலைகளும் நிறையப்பெற்ற காணி ஒன்றில் மாடுகட்டி வரும் அவ் ஊர்க்காரர் ஒருவர் ஒருநாள் மேகம் இருண்டு மழைபெய்யக்கூடிய அறிகுறிகள் தென்பட்டமையால் தனது மாடுகளை அவிழ்த்து வர ஓடியபோது அக்காணியில் உள்ள மாமரத்தடியில் கால் இடறுப்பட்டு விழுந்ததாகவும் தீடீரென்று அவர் எழுந்தபோது ஓர் உருவம் தோன்றுவதும் மறைவதுமாக காணப்பட்டது. மீண்டும் உற்றுப்பார்த்த பொழுது வைரவசூலம் ஒன்று பளிச்சிட்டதாகவும் இதை அவ்வுர் மக்களை அழைத்து வந்து காட்டியதாகவும் அவ்வுர் மக்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து அம்மாமரத்தின் கீழ் சூலத்தினால் வைரவர் பதிக்கப்பெற்று ஒரு ஓலைக் கொட்டகை அமைத்து வழிபட ஆரம்பித்தனர். என்று ஒரு ஐதீகக் கதை உள்ளது. மாமரத்தின் கீழ் இருந்தமையால் ”மாவடி ஞானவைரவர்” என்ற சிறப்புப்பெயர் வழங்கலாயிற்று. எமக்குக் கிடைக்கப்பெற்ற வரலாற்று ஆவணங்களின் பிரகாரமும், மூதாதையரின் வாய்மொழிக் கதைகளினாலும் 1924ம் ஆண்டு ஆனிமாதம் 2ம் திகதி திருவாளர் ஆறுமுகம் மார்க்கண்டு, இராமலிங்கம், கதிர்வேலு, கணபதிப்பிள்ளை, சரவணமுத்து ஆகியோரால் கோயிற்காணி தர்மசாதனம் எழுதி வைக்கப்பட்டது. என்றும் 1927ம் ஆண்டு திரு முத்தர் குமரேசு தலைமையில் குமரேசு பொன்னையா, நமசிவாயம் தம்பையா, தில்லையம்பலம் சின்னையா, குருநாதர் மாதவர், வேலுப்பிள்ளை தம்பிராசா, சின்னத்தம்பி1 வைத்திலிங்கம் ஆகியோர் உள்ளடக்கிய திருப்பணிச்சபை தெரிவுசெய்யப்பட்டது என்றும் குறைந்தளவு உயரத்தில் மூலத்தான மண்டபவேலைகள் கட்டிக்கொண்டிருக்கும்போது நிதிப்பற்றாக்குறை காரணமாகவும் வேலைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டது என்றும் அறியப்பட்டது. இப்படியாக பல ஆண்டுகள் கழிந்தன. மீண்டும் 1956ம் ஆண்டு புதிய திருப்பணிச்சபை உருவாக்கப்பட்டது.

திருவாளர் தா.ஆறுமுகம் தலைமையில் திருகு.மாதவர், க.நாகமுத்து, சி.இராமலிங்கம், சி.ஐயாத்துரை ஆகியோர் அடங்கிய திருப்பணிச்சபை நிறுவப்பட்டது. இத்திருப்பணிச்சபை விடாமுயற்சி காரணமாக மூலஸ்தானம், நிருத்தமண்டபம், மகாமண்டபம் என்பன ஒழுங்கானமுறையில் ஆகமவிதிப்படி கட்டிமுடிக்கப்பட்டு 1958ம் ஆண்டு ஆவணிமாதம் 27ம் திகதி திருகோணம் கூடிய சுபமூர்த்தவேளையில்

மாவடி ஞானவைரவர்

அச்சுவேலி பிரம்ம ஹீ குமாரசுவாமி குருக்கள் தலைமையில் மகா கும்பாவிசேக கிரியைகள் யாவும் நடாத்தி முடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோயிலை பராமரிப்பதற்கென்று மாவடி ஆலய மக்கள் மன்றம் ஸ்தாபிக்கப்பட்டது. தினமும் காலை, மாலை பூஜைகளுடன் நவராத்திரி பூசைகளும் சிறப்புற நடந்துவரலாயின.
மக்கள் மன்றத்தின் தலைவராக திரு.தா.ஆறுமுகம் அவர்களும், செயலாளராக திரு.தி.சின்னையா அவர்களும் பொருளாளராக நா.பரமசாமி அவர்களும் நியமிக்கபட்டு செயற்பட்டு வந்தது. இப்படியாக வளர்ச்சியுற்று சிறப்புடன் வரும்வேளை மக்கள் மன்றம் ஆலயத்திற்கு முன்னால் திரு.திருமதி இளையதம்பி அவர்களுக்கு சொந்தமான பனங்காணி ஒன்றை அவர்களிடம் இருந்து பெற்று மாற்றீடாக ஆலயத்திற்கு சொந்தமான காணி ஒன்றை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது சாத்தியப்படாமல் போக நீதிமன்ற ஆணையின் பிரகாரம் 1976ம் ஆண்டு ஆலயத்திற்கு உரித்தாக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் தலைவராக திரு.நா.காசிப்பிள்ளை அவர்களும் இச்சபையிலே செயலாளராக திரு.நா.கனகரத்தினம் அவர்களும் பொருளாளராக திரு.க.நல்லையா அவர்களும் இருந்தனர். அத்தோடு ஆலயத்திற்கு முன்பாகப் புதிய வீதி நிர்மாணிக்கபட்டு மாவடி ஆலயவீதி எனவும் பெயர் சூட்டப்பட்டது.

அடுத்து மாவடி ஆலய மக்கள் மன்றம் முதலாவது கும்பாபிஷேகம் நடைபெற்று இருபது வருடங்கள் புர்த்தியாவதை ஒட்டி மீண்டும் ஒரு கும்பாபிஷேகம் நடத்தத் தீர்மாணிக்கபட்டு ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் திருத்தவேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கர்ப்பக்கிரகம், நிருத்த மண்டபம், இரண்டும் திருத்தி அமைக்கபட்டும், ஸ்தம்ப மண்டபம் ஆகம முறைப்படி கட்டப்பட்டது. நிருத்தமண்டபத்தில் பிள்ளையார், முருகன் தூபிகளும், ஸ்தம்ப மண்டபத்தில் நந்தி பலிப்பீடமும் மேற்கு வாயிலையுடைய நாகதம்பிரானும் அமைக்கப்பட்டது. இவ்வேலைகளுக்கு உதவுவதற்கும் கோயிலில் தொண்டு புரியவும் என மாவடி மக்கள் மன்றப் பெரியோரால் மாவடி இளையர் மன்றம் என்ற மன்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன் தலைவராக திரு.அ.திருச்செல்வம், செயலாளராக திரு.க.சுப்பிரமணியம், பொருளாளராக திரு.க.இரவீந்திரன் என்போர் நியமிக்கப்பட்டனர். இப்படியாக இளைஞரது பூரண ஒத்துழைப்புடன் ஆலயப் புனருத்தாரண வேலைகள் புர்த்தியாக்பட்டு 30-03-1979 இல் காலை 9.30 மணியளவில் அச்சுவினி நட்சத்திரமும் கூடிய சுபவேளையில் நவாலியூர் பிரதிஷ்டா சிரோன்மணி பிரம்மஹீ விசுவநாதக்குருக்கள் தலைமையில் கும்பாவிஷேகக் கிரியைகள் சிறப்பாக நிறைவெய்தின.

13.05.1979ஆம் திகதி சங்காபிஷேகம் பூர்த்தி விழாவுடன் முதன்முறையாக சுவாமி வெளிவீதி வரும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. அன்று சைவமணி அருட்கவி திரு.சீ.விநாசித்தம்பிப் புலவர் அவர்களால் ஆக்கப்ட்ட மாவடி ஞானவைரவர் பெருமான் திருப்பொன்னூஞ்சல் பாட்டுக்கள் அரங்கேற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து இவ் ஆலயம் பூரணப் பொலிவுடன் திகழ ஆரம்பித்ததது. இக்கும்பாவிஷேகத்தைத் தொடர்ந்து ஊர் மக்களிடையே ஆலயத்தில் ஏற்பட்ட சிறுசிறு சச்சரவுகள் காரணமாக ஆலயச் செயற்பாடுகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் வெளியேறியிருந்தனர். இதனைத்தொடர்ந்து மக்கள் மன்றம் இயங்க முடியாமல் போனது. அவ்வேளையில் மாவடி இளைஞர் மன்ற போஷகர் திரு.த.கோவிந்தசாமி அவர்களின் உதவியுடன் ஆலயச் செயற்பாடுகளை பொறுப்பேற்றுக் கொண்டது. ஆலயச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களுடன் சேர்ந்து மக்கள் மன்றமும் இளைஞர் மன்றமும் இணைந்ததான பொதுக்கூட்டங்களை நடாத்தி ஆலய நித்திய நைமித்திய பூஜைகள் சிறப்புற நடைபெறவும் திருவிழாக்கள் என்பன சிறந்த முறையில் நடப்பதற்கும் வித்திட்டனர். இக்காலத்தில் நிர்வாகத்தில் இருந்தோரில் திரு.வ.தேவராஐன், சி.கஐமுகவரதன், அ.திருச்செல்வம், அ.அருட்செல்வம், பொ.பரராசசிங்கம், க.ஷ்கந்தராஜா, ந.தேவதாஷ், வ.கிருஷ்ணதாசன், ச.யோகேஸ்வரன் என்போர் குறிப்பிடத்தக்கவர்கள். இக்காலகட்டத்ததில் ஆலயத்தின் தெற்குப்புறத்தில் மடப்பள்ளி, களஞ்சிய அறை என்பன நிர்மாணிக்கப்பட்டதோடு ஆலய முன்வாயிலுக்கு கேற் செய்து போடப்பட்டதோடு ஊர்மக்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து ஆலயத்தில் பங்களிப்பை வழங்கவும் ஒத்துழைப்புக் கோரப்பட்டது.

இதன் பிரகாரம் திரு.த.சிவசுப்பிரமணியம் தலைமையில் நான்னு ஐந்து பேர் சேர்ந்து ஊரில் ஓர் ஒற்றுமையை நிலவச்செய்து ஆலயச் செயற்பாடுகளில் ஒத்துழைக்க முன்வந்ததை இட்டு 04.05.1990 இல் மாவடி இளைஞர் மன்றமும் இணைந்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட திருவாளர் த.சிவசுப்பிரமணியம் தலைவராகவும், இணைச் செயவாளராக திரு.அ.திருச்செல்வம், ந.தேவதாஷ் பொருளாளராக திரு.க.திரவியம் செ.கிருபாகரன் ஆகியோர் உள்ளடங்கலாக பதினொரு பேர் கொண்ட நிர்வாக சபை அமைக்கப்பட்டது. இதன்பின் ஆலயத்தில் நித்திய, நைமித்திய பூசைகளுடன் பரணிப்புசை மாதாந்தம் செய்வதற்கும், வெள்ளிக்கிழமை பூசை நாளாந்தம் செய்வதற்கும் நவராத்திரி, திருவெம்பாவை, கந்தசஷ்டி, தைப்பூசத்திருவிழா என்பனவும் செய்து வரலாயின. இக்காலகட்டத்தில் தலைவராக திரு.த.சிவசுப்பிரமணியம் அவர்களும் செயலாளராக திரு.க.திருவிளங்கம் அவர்களும் பொருளாளராக திரு.க.திரவியம் அவர்களும் செற்பட்டனர். இப்படியாக ஆலயச் செயற்பாடுகள் ஒழுங்குற நடைபெற்று வரும் காலத்தில் 1998ம் ஆண்டு 2வது கும்பாபிஷேகம் இடம்பெற்று 20வருடங்கள் பூர்த்தியாவதால் புதிதாக கும்பாபிஷேகம் செய்வதற்காக ஆயத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆலய புணருத்தாரண வேலைகளை பொறுத்தமட்டில் திரு.நா.காசிப்பிள்ளை குடும்பமே பெரும்பங்கு ஆற்றியது என்று கூறவேண்டும். ஆலயத்தின் வடக்கு, தெற்கு பிரகாரங்களில் பிள்ளையார், முருகன் கோயில் அமைத்ததோடு வெளிச்சுற்று மதிலும் கட்டப்பட்டது. இதில் ஓர் முக்கிய விடயம் என்னவெனில் ஆலய அமைவு சம்பந்தமாக இணுவில் காயத்திரி பீடத்தைச் சேர்ந்த மகாதேவக்குருக்கள் மூலமாக அராலியுர் திரு.க.கோபாலசிங்கம் தலைமையில் ஆலயம் வடிவமைக்கப்பட்டதோடு தெற்கு வாசல் திறந்து அடியார்கள் பூசைகளைக் கண்டு அனுபவிக்க வழி செய்யப்பட்டது. இப்படியாக ஊர்மக்கள் எல்லோரும் சேர்ந்து புணருத்தாரண வேலைகளில் ஈடுபட்டனர். வடபகுதியில் கட்டப்பட்ட ஆலயங்களுள் பெரிய அளவுள்ள ஆலயமாக மாவடி ஞானவைரவர் தேவஸ்தானம் புதுப்பொலிவு பெறலாயிற்று. இவ்வேளைகளில் வயது வேறுபாடின்றி எல்லோரும் ஒற்றுமையாக ஒத்துழைப்பு வழங்கியது ஒர் சிறப்பம்சம் ஆகும். இப்படியாக புணரமைக்கபட்ட தேவஷ்தானத்திற்கு கும்பாபிஷேக நாளாக 03.09.1998ம் ஆண்டு விருட்சிக நட்சத்திர சுபமூர்த்த வேளையில் கிருஷாசோதிவாகம கிருஷாதிலகம் சிவஹீ ச.மு.ரவிபாஷ்கரக்குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் சிற்பபாக நடத்தி முடிக்கப்பட்டது. இக்கும்பாபிஷேகத்தை நித்திய நைமித்திய கிரியைகள் சிறப்பாக நடைபெறுவதோடு பஐனைகள் தொண்டுபடும் சேவைப்போட்டிகள் சொற்பொழிவுகள் என்பன சிறப்புற நடைபெறுவதோடு ஆலயத்தில் கீழ் ஓர் அறநெறிப்பாடசாலை ஒன்றும் உருவாக்கப்பட்டது.

மேலும் இவ் ஆலயம் இந்து கலாசார திணைக்களத்தில் பதியப்பெற்று ஏச் எ/5/ஐ ஏ/ 674 எனும் கோவையிலக்கத்தை பெற்றுள்ளது.

கோயில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” எனும் முதுமொழிக்கிணங்க நாம் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக எம்மைக் காக்கும் காவல் தெய்வமாம் அருள்மிகு சங்கானை மாவடி ஞானவைரவப் பெருமான் பாதம் பணிந்து வணங்கிடுவோம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

நன்றி – தகவல் மூலம் – http://gnanaviravar.mavady.com இணையம்.

Sharing is caring!

Add your review

12345