யாழ்ப்பாண வரலாறு

யாழ்ப்பாணம் என்ற இடப்பெயர் வழக்கின் பரிணாமத்தினை எடுத்தாராய்வதற்குப் போதிய சான்றுகள் கிடைத்திருக்காத போதும் வரலாற்று ஆசிரியர்கள் தத்தமது வரலாற்று கற்பனா வாதத்திற்கேற்ப விளக்கம் கொடுத்து வருகின்றனர். கி.பி 17 ஆம் நூற்றாண்டிற்குரிய திருமாணிக்குழிக் கல்வெட்டொன்றிலே தென்னிந்தியாவில் யாழ்ப்பாணம் என்ற இடப்பெயர் பொறிக்கப்பட்டுக் காணப்படுகின்றது. இலங்கையில் எவ்விடத்திலேனும் யாழ்ப்பாணம் என்ற சொல்லாட்சி கல்வெட்டுக்களில் பொறித்திருக்கக் காணப்படவில்லை. அருணகிரிநாதரின் திருப்புகழில் “யாழ்ப்பாணாயன் பட்டிணமேவிய பெருமாளே” எனக் குறிப்பிட்டுள்ளமையை காணக் கூடியதாக உள்ளது. ஒல்லாந்தர் காலத்துத் தோம்புப் பதிவிலேயே “யாழ்ப்பாணாயன் பட்டிணம்” குறிப்பிடத்தக்கமையை நோக்கத்தக்கது. அருணகிரிநாதர் வாழ்ந்த காலம் கி.பி 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டாரம்பம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண வைபவமாலையில் மயில்வாகனப்புலவர் “யாழ்பாடி” உடன் இணைத்துக் காட்டப்பட்டுள்ள கதை மரபின் அடியாக யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்த வரலாறென எடுத்துக் காட்டியுள்ளார். “அந்தகக்கவி” என்று அழைக்கப்பட்ட வீரராகவன் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து தனது யாழ் வாசிக்கும் திறமையால் மன்னரிடமிருந்து வடபகுதியிலுள்ள மணற்றிடறை பரிசாகப்பெற்று யாழ்ப்பாணம் என்ற பெயரையும் இட்டு தன்குடிகளை வருவித்து ஆட்சி நடத்தினான் என மயில்வாகனப்புலவர் குறிப்பிடும் ஐதீகம் நீண்டுசெல்கின்றது. இன்றைய யாழ் நகரத்தின் மையத்தில் “ஐநூற்றுவன் வளவு” என்ற ஒரு குறிச்சி காணப்படுகின்றது. தோம்பில் குறிப்பிடப்பட்ட ஐநூற்றுவன் வளவு இன்றைய யாழ் வைத்தியசாலைக்குத் தெற்குப்பக்கமாக உள்ள வர்த்தக நிலையங்கள், மணிக்கூட்டுக் கோபுரம், நூலகப்பரப்பு மற்றும் யாழ்.கோட்டை வரைக்கும் பரந்து காணப்படுகின்றது. ஜாவகன் பட்டினம் சாவகச்சேரி என மாற்றமடைந்தது போன்றே ஐநூற்றுவன் வளவு ஐநூற்றுவன் பட்டினமாகி, ஜாழ்ப்பாண பட்டினம் என மருவி இன்று யாழ்ப்ப(h)ணம் என வழங்குகின்றது எனலாம். கி.பி 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழமண்டலத்திலிருந்து படையெடுத்து வந்த முதலாம் பரா-அந்தகச் சோழன் (பராந்தகன்) யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதனையும் தனது அரசியல் கட்டுப் பாட்டிற்குள் வைத்திருந்த செய்தியை “மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரியான” என்ற அம்மன்னனது விருது உறுதிப்படுத்துகின்றது. பார் ஆளும் அந்தகச்சோழனையே “யாழ்ப்பாண வைபவமாலையார்அந்தகக் கவி வீரராகவன்” என்ற புனைப்பெயரில் வழங்கிய கதை மரபில் இணைத்துக் கூறியிருக் வேண்டும் எனத் தோன்றுகின்றது. அந்தகன் என்ற ஒரு பெயர் வழியுடனோ அல்லது அரசியல் தலைமைத்துவத்திற்குரிய தலைவனுடனோ தான் யாழ்ப்பாணம் என்ற பெயர் வழக்கு உருவாகியிருக்க வேண்டும். அவ்வாறாயின் முதலாம் பராந்தகச்சோழனது பணி யாழ்ப்பாணப் பண்பாட்டுத் தோற்றத்துடன் மிகவும் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறாயின் யாழ்ப்பாண வைபவமாலையார் குறிப்பிட்டுள்ள “அந்தகன்” யார்? முதலாம் பராந்தகனா? யாழ்ப்பாணத்திற்கும் பராந்தகனுக்கும் இடையிலான தொடர்புகள் யாவை? இவ்வினாக்கள் வரலாற்றாசிரியர்களுக்கே சமர்ப்பணம்.

Sharing is caring!

33 reviews on “யாழ்ப்பாண வரலாறு”

Add your review

12345