வட பத்திரகாளி – தாவடி

ஆலயம் தொழுவது சாலவும் நன்று” இது ஒளவைப்பிராட்டியின் அமுதவாக்கு. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவன் இறைவன். ஆன்மாக்களுக்கு அருள்புரிய வேண்டி திருமேனிகளை இடமாகக் கொண்டு திருக்கோவில்களில் எழுந்தருளி காட்சி தருகிறான். இறைவனை எங்கும் காணலாம் என்பது உண்மை. அப்படிக்காண்பதற்கு உயர்ந்த பக்குவம் வேண்டும். காணுகின்ற பொருட்கள் அனைத்திலும் கடவுளைக் காண்பவராக இருப்பவர்கள் இத்தகைய பக்குவமுடையவர்கள். ஆனால் எல்லோராலும் இதை சாதித்துவிட முடியாது. இதன் பொருட்டு பக்திநெறி வாயில்களாக அமைந்தவை திருக்கோவில்கள். நமது சுட்டுணர்வினால் அறியமுடியாத இறைவன் திருக்கோவில்கள் வழியாக உயிர்களுக்கு திருவருளை வழங்குகிறான். பசுவின் உடலில் பால் நிறைந்திருப்பது போல உலகெங்கும் நிறைந்திருப்பது இறைசக்தி. பாலைப் பெறுமிடம் பசுவின் மடிபோல இறைவன் அருள் பெற அமைந்த இடம் திருக்கோவில்கள்.

வானுலகத்தில் உள்ளோரும் மண்ணுலகில் வந்து திருக்கோவில் வழிபாடு செய்து அளவற்ற பேறுகள் பெறுகின்றனர் என்பது நம்பிக்கை. விண்ணுலகில் இறைவனை அபிஷேகித்து ஆராதனை செய்யும் கிரியைகள் இல்லை. எனவே திருமால், பிரமன் போன்ற தேவர்கள் பூவுலகத்திற்கு எழுந்தருளி தரிசித்து செல்வதுடன் இவ்வுலக மக்களையும் வாழ்த்தி ஆசி கூறி செல்வதாக புராணங்கள், திருமுறைகள் தெரிவிக்கின்றன. இந்தவகையில் பூவுலகில் அமைந்துள்ள திருக்கோயில்கள் வழியாக உயிர்கள் அனைத்திற்கும் திருவருளை வழங்க அமைந்த இடங்களில் ஒன்று அன்னை ஸ்ரீ வடபத்ரகாளி அம்பாள் திருக்கோவில்.

இலங்கையின் வட மாகாணத்தின் தலைநகரம் யாழ்ப்பாணம். யாழ்நகரின் வடதிசையில் 4.5கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் தாவடி. இயற்கை அன்னையின் எழில் வனப்பையும் வளங்களையும் கொண்டு விளங்கும் ஒரு புண்ணிய பூமி தாவடிக்கிராமம். கொக்குவில், இணுவில், சுதுமலை போன்ற இறைநாமம் எந்நேரமும் ஒலிக்கும் பசுமை மிகு கிராமங்கள் சூழ நடுநாயகமாய் முல்லையும் மருதமும் பின்னிப்பிணைய அழகு மலர்ச்சோலையும் அரிவையர் கூடிக்குலாவும் அழகு நிறை பொழிலும் அமைதியும் அன்பும் அணி செய்ய அமைந்த ஒரு சிற்றுர். பெரும்பயன் கொடுக்கும் விவசாய நிலங்களையும் மெய்வருத்தம் பாராது உழைக்கும் விவசாயப் பெருமக்களையும் சிவாச்சாரியர்கள், வைத்தியர்கள;, பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசதுறை அதிகாரிகளையும், கல்விமான்களையும், வர்த்தகர்கள் தொழிலாளர்கள் போன்ற பல்தொழில் புரியும் உத்தமர்கள் கொண்ட கிராமம்.

நானாவித இந்து ஆலயங்கள், இராமகிருஸ்ணமிஷன் சமிதி, சத்ய சாயி பாபா சேவா நிலையம் போன்ற ஆன்மீக நிலையங்கள், வைத்திய நிலையங்கள், தபாலகங்கள், கலாசார மண்டபங்கள், வர்த்தக நிலையங்கள் இக்கிராமத்தை சூழ நிறைந்து கிராமத்தை மெருகூட்டுகின்றன. நிறைந்தளவு இந்துக்களும் சிறியளவு கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக வாழும் கிராமம். யாழ்.வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச செயலகப்பிரிவில் இத்தகைய சிறப்புகள் பொருந்திய இக்கிராமத்தின் பத்தானை எனும் பகுதியில் வேம்படி முருகன், அம்பலவாண கந்தசாமி, அம்பலவாண வேதவிநாயகர் போன்ற அருள்நிறை ஆலயங்களையும் நடுவில் கொண்டு யாழ்ப்பாணத்தின் கற்பகதருவாம் பனைமரக் கூடலுக்கருகாமையில் அமர்ந்து அருளாட்சி புரிகின்றவள் தான் எமது அன்னைஸ்ரீ வடபத்ரகாளி அம்பாள். யாழ் நகரிலிருந்து காங்கேசன்துறை பிரதான வீதியிலிருந்து பிரிந்து சுதுமலை மானிப்பாயை நோக்கிச் செல்லும் வீதியின் அருகாமையில் வட பத்ரகாளி அமர்ந்து அருள்புரிகின்றாள்.

ஆலய வரலாறு

இக்கிராமத்தின் சூழவுள்ள எல்லைப்பகுதியில் இணுவில் பரராச சேகரப்பிள்ளையார், இணுவில் கந்தசாமி கோவில் மற்றும் மஞ்சத்தடி அருணகிரிநாதசுவாமி கோவில், கோண்டாவில் கந்தர்வளவு மகா கணபதிப்பிள்ளையார், உப்புமடம் சந்திரசேகரப்பிள்ளையார் மற்றும் முனியப்பர் கோவில், கொக்குவில் நந்தாவில் மனோன்மணி அம்பாள், மாத்தனை முருகன் மற்றும் மஞ்சவனப்பதி முருகன், சுதுமலை புவனேஸ்வரி அம்மன் மற்றும் முருகன், ஆனைக்கோட்டை உயரப்புலம் பிள்ளையார் போன்ற புகழ் பெற்ற திருத்தலங்களையும் இன்னும் வைரவர், காளி அம்பாள் போன்ற நிறைவான சிறிய தலங்களையும் சூழ நடுநாயகியாய் ஸ்ரீ வடபத்ரகாளி அமர்ந்திருக்கின்றாள். அடியார்களினால் எங்கடை ஆச்ச, பத்ரகாளி ஆச்சி என அன்பு ததும்ப செல்லமாக அழைக்கப்படுபவள். கிராம மக்கள் தாம் எண்ணும் கருமங்களில் ஆச்சிக்கே முதலிடம் கொடுப்பவர்கள் இன்றும் அவளின் அற்புத அன்பிற்குப் பாத்திரராகி பக்தியுடனும் பயத்துடனும் வழிபடுபவர்கள். இத்தகைய சிறப்புப் பெற்ற எங்கள் பத்ரகாளியின் தலவரலாறு மகத்ததுவமானது. தாவடி பத்தானை பகுதியில் 39பரப்பு நிலத்தை தன்னகத்தே கொண்டு அம்பாளின் அமைவிடம் அமைந்துள்ளது. ஸ்ரீ வடபத்ரகாளியின் ஆலயத்தோற்றம் பற்றி பின்வரும் கர்ண பரம்பரைக்கதை கூறப்படுகின்றது.

பத்தானைப் பகுதியில் காளி உபாசகர் ஒருவர் சக்தியந்திரத்தை வைத்து பூஜித்த வேளையில் அவர் மந்திரத்தை உச்சாடனம் செய்யும் வேளையில் அவ் யந்திரம் தானாக அசைந்து அருள் கொடுக்கும். இந்த அருட்பெரும் சக்தியை அவ்வூர் மக்கள் கண்ணாரக் கண்டு வழிபட்டதாக கூறப்படுகின்றது. அன்னையின் அருளாட்சியுள்ள இந்த இடத்தில் சிவாச்சாரியார்கள் பத்ரகாளி அம்பாள் ஆலயம் அமைத்ததாக அறியப்படுகின்றது. இந்தவகையில் ஏறக்குறைய 200 வருட சரித்திரம் தெரிந்த வகையில் இவ்வாலயம் அமைந்ததாக கூறப்படுகின்றது. அம்பாளின் உண்மையான காலவரையறை அறியப்படவில்லை ஆயினும் பிரம்மஸ்ரீ வியாகேச ஐயர் இதன் ஸ்தாபகர் என்பது அறியக்கிடக்கின்றது. இவர் வடதிசை நோக்கியதாக மண் கோவிலாக மடம் கட்டி அதில் அம்பாளை வைத்து பூஜை செய்து வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. தொடர்ந்து இவரது மகன் பிரம்மஸ்ரீ இரத்தினேஸ்வர ஐயர் அருகிலுள்ள தனது காணியிலுள்ள சில பனை மரங்களைத் தறித்து பெரிய ஓலைக் கொட்டில் அமைத்து அவ்விடத்தில் அம்பாளுக்கு பூஜை செய்ததாகவும் தெரியவந்தது.

தலவிருட்சமாக வேம்பும் அரசும் காணப்படும் ஆலய வளர்ச்சிப்படிமுறையில் இரத்தினேஸ்வர ஐயாவின் மகன் பிரம்மஸ்ரீ ஐயாக்குட்டி ஐயாவினால் சுண்ணாம்புக் கற்களால் ஆலயம் உருவானது. இக்காலத்தில் அம்பாளுக்கு இருவேளைகள் பூஜைகள் நடைபெற்றதாக தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது. தொடர்ந்து ஆலய பூசகராக இருந்து வந்த பிரம்மஸ்ரீ சண்முகரத்ன ஐயர் ஆலயத்தை வெள்ளைக்கற்களால் கட்டி பரிபாலித்து நிறைவான இடமாக உருவாக்கினார்.

ஆலயத்தின் அம்பாளின் அருள்பிரவாகம் பெருக்கெடுத்தது. சுற்றாடலில் அன்னையின் நடமாட்டம் அதிகரித்தது. அன்னையின் அன்புடன் கூடிய நடமாட்டத்தை கண்ட அடியார்கள் வியந்தனர். சிலர் அஞ்சினார்கள். இன்னும் பல அடியார்கள் இதை நினைவுபடுத்தும் பொழுது மெய்சிலிர்க்கும். கருவறையில் வீற்றிருந்து அருளாட்சி செய்து வந்த வட பத்ரகாளி அம்பாளின் அடியார்கள் அவளின் அற்புதங்கள் கண்டு வியந்தனர். பிரம்மஸ்ரீ சண்முகரத்ன ஐயாவின் காலத்தில் பல உண்மை அற்புதங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது.

அற்புதங்கள்

ஒரு சந்தர்ப்பத்தில் அர்ச்சகர் மாலை பூஜைக்காக தனது சிறிய பெண்குழந்தையுடன் ஆலயம் சென்றார். பூஜைவழிபாடுகள் முடிந்து ஆலயத்திருக்கதவுகளை மூடிவிட்டு திரும்பும் வேளை தனது குழந்தையினை ஆலயத்துள் விட்டு மூடி நினைவு வரவே மீண்டும் ஆலயத்துக்கு விரைந்து திருக்கதவைத் திறக்க முயன்ற வேளை “மூடிய கதவைத் திறக்க வேண்டாம். குழந்தையை யானே கவனித்துக் கொள்வேன். கவலை வேண்டாம்” என அசரீரி ஒன்று கேட்டது. பிள்ளையின் பாசப்பிணைப்பிலும் மனையாளுக்கு மறுமொழி சொல்லவேண்டிய நிலைகருதியும் பூசகர் அசரீரியைப் பொருட்படுத்தாது திருக்கதவுகளைத் திறந்தார். கோபம் கொண்ட அன்னை பத்ரகாளி குழந்தையை நெடுக்குமுகமாக வெட்டி அர்ச்சகரின் காலடியில் போட்டாள். திடுக்குற்ற அர்ச்சகர் தன் தவறை உணர்ந்து அழுது மண்டியிட்டு அம்பாளை வேண்டினார். குழந்தை அம்பாளுடன் ஐக்கியமாகியது.

இதே போன்று இன்னொரு நிகழ்வு ஆலய வீதியில் அமைந்திருந்த அம்பாளின் வாழைத்தோப்பில் ஒரு வாழை மிகப் பெரிய குழையுடன் தலைநிமிர்ந்து நின்றது. இதனைக் கண்வைத்த ஒருவன் இரவுவேளை வாளுடன் தோப்பில் நுழைந்து வாழைக்குலையை வெட்ட கையை உயர்த்திய போது உயர்ந்த கை அப்படியே மீண்டும் வாளுடன் அசைக்க முடியாமல் நின்றது. கைகள் இரண்டும் இயங்கவில்லை. கண்கள் இருண்டது. வேதனையில் துடித்தவாறு தன் தவறை உணர்ந்து அம்பாளை நினைத்து ஓலமிட்டான். அதிகாலை பூஜைக்காக நேரத்துடன் அர்ச்சகரை ஆலயத்திற்கு அழைத்த அன்னை திருநீற்றுடன் வாழைத்தோப்பிற்கு அவரை அனுப்பினாள். அவனது நிலை கண்ட அர்ச்சகர் அம்பாளை நினைத்து ஜெபித்து திருநீற்றைப் பூசினார். பழைய நிலைக்கு மீண்டும் வந்த திருடன் தனது இழிநிலை எண்ணி வீழ்ந்து புரண்டு வணங்கினான்.

இவ்வாறு இன்னொரு சந்தர்ப்பத்தில்,ஆலயத்தின் அம்பாளின் காணிக்கை பெட்டியை இரவு எடுத்துச் செல்ல முற்பட்ட வேளை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அர்ச்சகரிடம் வந்து “நீ இன்னும் தூங்குகிறாயா? காணிக்கைப் பெட்டி களவுபோகிறதே” எனத் தெரிவித்தாள். திடுக்குற்று எழுந்த அர்ச்சகர் அயலவர்களின் உதவியுடன் திருடனைப் பிடித்ததுடன் காணிக்கைப் பெட்டியையும் மீட்டுக் கொண்டார். இவ்வாறு பல அற்புதங்கள் நிகழ்ந்த அம்பாள் ஆலயம் பிரம்மஸ்ரீ நாகேந்திர ஐயரின் காலப்பகுதியில் பாரிய வளர்ச்சி கண்டது. மூன்று வேளை பூஜைகள், உள்வீதிக் கொட்டகைகள் அமைந்தன. உற்சவ மூர்த்தி பரிவார மூர்த்திகளான விநாயகர், சந்தான கோபாலர், ராகு, கேது, நவக்ரகம், வைரவர், சண்டேஸ்வரி என்பன அமைக்கப்பட்டன. தொடர்ந்து பாகசாலை, யாகசாலை அமைந்தன. காலக்கிரமத்தில் அம்பாளின் திருவுருவில் ஏற்பட்ட சிறு பின்னல் காரணமாக 1965ம் ஆண்டில் புதிய அம்பாள் பிரதிஸ்டை செய்யப்பட்டது. ஆயினும் ஆதிகாளி அம்பாள் இன்றும் கருவறையின் பின்புற நேரில் அமர்ந்து அருள்புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

1965ம் ஆண்டு நயினை பிரம்மஸ்ரீ ஐ.கைலாசநாத குரு தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அலங்கார உற்சவமாக நடைபெற்ற வருடாந்த விழா கொடியேற்றி மகோற்சவமாக சித்திரா பௌர்ணமி தினத்தை தீர்த்தோற்சவமாகக் கொண்டு 15 தினங்கள் இடம்பெறத்தொடங்கியது. 1977ம் ஆண்டு மணிக்கோபுரமும் 1978ம் ஆண்டு வெளிக் கொட்டகையும் அமைக்கப்பெற்றன. 1995ம் ஆண்டு பிரம்மஸ்ரீ நாகேந்திர ஐயரின் மறைவைத் தொடர்ந்து அவரது கனிஸ்ட புதல்வன் பிரம்மஸ்ரீ சசிதரசர்மா(ரவி ஐயா) ஆலய நிர்வாகத்தைப் பொறுப்பேற்றார். இவரது காலத்தில் ஆலயம் பூரண வளர்ச்சி கண்டது. 1995 ஆனி மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

1999ம் ஆண்டு பஞ்ச தள இராஜகோபுரம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய ரவி ஐயா 2005ம் ஆண்டு இராஜகோபுர கும்பாபிஷேகத்தையும் நிறைவு செய்தார். ரவி ஐயாவின் அயராத முயற்சியால் அடியார்களின் உதவியுடன் புதிதாக கைலாச வாகனமும் சிற்ப வேலைப்பாடுடைய சப்பரமும் உருவாக்கப்பட்டு அதற்கான அமைவிடங்களும் ஏற்படுத்தப்பட்டது. 2007ம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மிகக்குறுகிய காலத்தில் ஆலயப் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு பொலிவுடன் 2008ம் ஆண்டு இணுவில் பிரம்மஸ்ரீ குமாரசரவணபவகுருவின் தலைமைத்துவத்தில் நவ குண்ட பஷ மகா கும்பாபிஷேகத்தையும் ரவி ஐயா நடாத்தி வைத்தார். ஆலயத்தின் பரிபாலனத்தை சிறந்த முறையில் மேற்கொண்டு நித்திய நைமித்திய பூஜைகளை சிறப்பாக சிரமேற்கொண்டு செய்து வருவதுடன் தற்போதும் ஆலய வளர்ச்சிகளில் அதீத அக்கறையுடன் ஈடுபட்டு புதிய சித்திரத்தேர், அதற்கான தரிப்பிடம், முன்புற மணிமண்டபம், தீர்த்தோற்சவ நிலையம், அன்னதான மண்டபம் போன்ற திருப்பணிகளை முன்னெடுத்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

ஆலய வருடாந்த விழாக்கள்

தைமாதம் – தைப்பொங்கல், தைப்பூசம்
மாசி – மாசி மகம், மகா சிவராத்திரி
பங்குனி – பங்குனி உத்தரம், பங்குனி திங்கள், வருடாந்த பொங்கல், குளிர்த்தி
சித்திரை – சித்திரை வருடப்பிறப்பு, சித்திரா பௌர்ணமி தீர்த்தோற்சவத்தை அடிப்படையாகக் கொண்ட வருடாந்த மகோற்சவம்
வைகாசி – வைகாசி விசாகம்
ஆனி – ஆனி உத்தரம், கும்பாபிஷேக தின மகா சங்காபிஷேகம்
ஆடி – ஆடிச் செவ்வாய்
ஆவணி – ஆவணிச்சதுர்த்தி
புரட்டாதி – புரட்டாதிச்சனி, கேதார கௌரி விரதம், நவராத்திரி
ஐப்பசி – ஐப்பசி வெள்ளி, தீபாவளி
கார்த்திகை – சோமவாரம், திருக்கார்த்திகை
மார்கழி – திருவெம்பாவை

இத்துடன் மாதந்தோறும் வரும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் விசேட அபிஷேக ஆராதனைகள் தாவடி செல்வி.உஸ்.சுகந்தியின் தனிப்பட்ட உபயமாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. அம்பாளின் வருடாந்த பொங்கல் குளிர்த்தி அபிஷேகம் சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மாசிமாத கடைசி வெள்ளிக்கிழமை மாலை விளக்கேற்றும் வைபவம் நடைபெறும். தொடர்ந்து பங்குனி மாத முதல் வெள்ளி வரை மாலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வெள்ளிக்கிழமை இரவு அம்பாள் கிராம ஊர்வலம் வரும் அருட்காட்சி இடம்பெறும். அம்பாள் வரும் வழியெங்கும் பக்திப்பிரவாகம் பொங்கி பிரவாகிக்கும். தமது இல்லங்களின் முன்புற வீதியை அலங்கரித்து பூரண கும்பம், மாலை, மடை மரியாதைகளுடன் அம்பாளை வரவேற்கும் காட்சி கண்கொள்ளாக்காட்சி. தமது குறைகளை அம்பாளிடம் நேரில் கூறி அருள் பெறுவர். கிராம ஊர்வலத்தின் போது அடியார்களினது வெப்பநோய்களை தன்னகத்தே எடுத்து அருள் வழங்கும் அற்புதம் தனித்துவமானது.

சித்திரை மாத மகோற்சவ நாட்கள் நிகழ்வுகள் மிகவும் சிறப்பானவை. அம்பாளின் அலங்காரங்கள் அடியார்களை மயக்கும். ஆலயமும் சுற்றாடலும் கிராமமும் கோலாகலமாகக் காணப்படும். விசேட சங்காபிஷேகங்கள், ஆராதனைகள், அலங்காரங்கள், வகையான வாகனங்களில் திருவீதியுலாக்காட்சிகள் வர்ணிக்கமுடியாதவை. திருவிழா நாட்களில் தானத்தில் சிறந்த அன்னதான நிகழ்வும் நடைபெறும். அடியார்கள் வழிபாடு முடித்து நிறைவாக திருப்தியுடன் தமது இல்லங்கள் திரும்புவார்கள்.அடியார்களின் விரதகால கற்பூர ஆரத்தி எடுத்தல், அடிஅடித்தல் போன்ற நேர்த்திகள் மெய்சிலிக்க வைக்கும்.

மேலும் அம்பாளின் வருடாந்த விழா நோன்புகளின் கௌரி நோன்பும் நவராத்திரி நோன்பும் சிறப்பான இடத்தை வகிக்கின்றன. கௌரி நோன்பு நாட்களில் விசேட அபிஷேக ஆராதனைகளுடன் வசந்த மண்டபத்தில் கேதார நாதருடன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அன்னைக்கு நடைபெறும் நோன்புப் பூஜை மிகச் சிறப்பானது. நிறைவுநாளில் ஆயிரக்கணக்கான அடியார்கள் நோன்பு நூலைப் பெற்று தமது நேர்த்தியை நிறைவேற்றுவர்.நவராத்திரிகாலத்தில் அம்பாள் வசந்த மண்டபத்தில் கொலு இருக்கும் அருட்காட்சி நிறைவானது. கௌரி நோன்பு, நவராத்திரி நாட்களில் ஆதினகர்த்தா ரவிஐயா பாடசாலை மாணவர்களிடையே ஆன்மிக வளர்ச்சியை உருவாக்கும் நன்நோக்கத்தில் சைவசமயப் பரீட்சைகளை நடாத்தி அதில் சித்தி பெறும் மாணவர்களுக்கு ஊக்குவிப்புகள், பரிசில்கள், பாராட்டுப்பத்திரங்கள் வழங்கி கௌரவிப்பது சிறப்பான நிகழ்வாகும்.

மேலதிக விபரங்களுக்கு : Vadapathirakaali – Thavady

நன்றி – வடபத்திரகாளி அம்பாள் இணையம்

Sharing is caring!

Add your review

12345