வல்வையின் வரலாற்று சுவடுகளும் பண்பாட்டுகோலங்கள்

சங்குகளில் ஆபூர்வமானது வலம்புரி. அது போல விரவிக்கிடக்கின்ற நெய்தல் நிலத்தினிடையே வல்வெட்டித்துறை வித்தியாசமான பிரதேசமாகவே காணப்படுகின்றது. வல்வெட்டித்துறை எனும் போது அதன் அமைவிடத்தை நோக்க வேண்டியது அவசியமாகும். வல்வெட்டிதுறை இலங்கையின் வடபாலில் உள்ள ஒரு கடற்கரைப்பட்டினம் இதுகிழக்கே தீர்த்த மண்டபத்திலிருந்து மேற்கே சிதம்பராக் கல்லூரி வரை உள்ளதும் வடக்கே கடலாலும் தெற்கே வல்வெட்டி கம்பர்மலை குறிச்சிகளாலும் அடக்கபெற்ற ஏறத்தாழ இருநூற்றுஐம்பது ஏக்கர் விஸ்தீரணமுள்ளதுமான ஒருசிறியபட்டினம் இது ஆதி வல்வெட்டிதுறையின் அமைவாகும்.

ஆனால் இன்றோ கந்தவனக் கடவை தொடக்கம் செல்வச்சந்நிதி ஈறாக உள்ள ஏறத்தாழ மூன்றரைமைல் நீளமும் அரைமைல் அகலமுமான நகரசபை பட்டினமாக பரந்திருக்கின்றது. மயிலியதனை ஊரிக்காடு, கம்பர்மலை, வல்வெட்டி, உடுப்பிட்டி, தொண்டமானாறு, கெருடாவில் போன்ற பல குறிச்சிகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. ஒவ்வொரு குறிச்சியிலும் ஒவ்வொரு சமூகப்பிரிவினர் வாழ்ந்து வருகின்றது.

வல்வெட்டிதத்துறையின் தோற்றம்

ஆதி வல்லையின் தோற்றம் எந்தக்காலம் என்று நிர்ணயிக்க முடியவில்லை. ஆனாலும் சோழ, பாண்டிய படையெடுப்புக்களுடன் வந்த சேனாவீரர்கள் சிலர் சற்று முந்தி பிந்தி குடியேறியிருக்கலாம். இவர்கள் கடற்தொழிலை மேற்கொண்டு நெடுங்காலம் சீவித்திருக்கலாம். இதற்கு தகுந்த சான்று ஆதாரங்கள் இல்லை. எனினும் சில கர்ண பரம்பரை கதைகள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது. ஒரு சேர நாட்டு முதலாளிக்குச் சொந்தமான கப்பலொன்று சிதைந்து இவ்வூர் கடற்கரையில் கரையொற்றியது என்றும் அதில் உயிர் தப்பிய வணிகர்கள் அதன் பின் வல்வெட்டித்துறையில் தங்கிவிட்டனர் என்றும் கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.
இத்தகைய கர்ணபரம்பரைக் கதைகளை விட வேறு சில ஆதாரங்களும் காணப்படுகின்றன. “பழங்கால யாழ்ப்பாணம்” என்ற ஒரு பெரும் ஆராய்ச்சி நூல் திரு.கே.இராசநாயகம் என்ற பெரியாரால் எழுதப்பெற்றுள்ளது. அவர்கள் சங்க இலக்கியங்களாக எட்டுத்தொகை பத்துப்பாட்டு, இறையனார் அகப்பொருள், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் முதலியவற்றிலிருந்தும் இராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம் முதலியவற்றிலிருந்தும் பல ஆதாரங்கள் காட்டி முற்கால யாழ்ப்பாணத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். இந்நூலில் வல்வெட்டித்துறையில் கப்பல் கட்டும் தொழில் நடைபெற்றிருப்பதாக குறித்திருக்கிறார்கள். மேலும் “யாழ்ப்பாண வைபவமாலை”, “யாழ்ப்பாண வைபவ கௌமுதி” ஆகிய நூல்களிலும் வல்வெட்டித்துறையைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.
இவ்வூர் வல்வெட்டித்துறை என்கின்ற பெயர் வழங்கி வருவதற்குச் சில காரணங்கள் உண்டு. “வெல்வெட்” என்ற துணிவகை, வேறு நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு இவ்வூரில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டனவாம். பின்னர் இவ் வெல்வெட் துணிகள் உரோம், எகிப்து, கிரேக்கம் முதலிய நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனவாம். இவ்வூரவர்கள் தரமான “வெல்வெட்டை” கொண்டு வருவதில் கைவந்தவர்களாக விளங்கினார்களாம். இவ்வாறு வெல்வெட்டிற்குப் பெயர்போன இடமாக விளங்கியதால் வெல்வெட்டித்துறை என அழைக்கப்பட்டு நாளடைவில் வல்வெட்டித்துறை எனப் பெயர் பெற்றதாக கூறப்படுகின்றது. மேலும் வல்லமையின் உச்சியை எட்டியதானாலும் வல்லாளதேவன் என்பவன் இங்கு ஒரு வீரப் பரம்பரையை உருவாக்கியதானாலும் இப்பெயர் வந்தது எனவும் கருதப்படுகின்றது.
இவை அனைத்தும் செவி வழியாக வல்வெட்டித்துறையில் வாழுகின்ற முதியவர்களினால் கூறப்பட்டவையே தவிர ஆதார பூர்வமானவை அன்று எனினும் வல்வெட்டித்துறையில் கப்பல் கட்டும் தொழில் காணப்பட்டமை, இவ்வூரவர்கள் திரைகடலோடி திரவியம் தேடியவர்கள் என்பதற்கும் ஆதாரங்கள் காணப்படுகினறமையினால் இவற்றை உண்மை என்றே கருத வேண்டியுள்ளது. பிற்காலத்தில் இவ்வூரானது “வல்லையம்பதி”, “வல்லை” என்று சுருங்கிய பெயர்களால் கூறப்படுகின்றது.

வல்லையின் கலையும் கலாச்சாரமும்

விழாக்கள் மனித வாழ்வை வளம்படுத்துபவை. அத்துடன் உயர்ந்த தத்துவங்களையும் உள்ளடக்கியவையாகும். தமிழ் மக்கள் இன்றைய யுத்த நிலையிலும் தமது பாரம்பரிய விழாக்களை கைவிடாது செய்து வருகின்றனர். தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி என்பன பெரும் விழாக்களாக காணப்படுகின்றன. இவற்றை விட சமயத்துடன் தொடர்புபட்ட விழாக்களும் விரதங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. நவராத்திரி, கந்தசஷ்டி, கார்த்திகை விளக்கீடு, திருவெம்பாவை, சிவராத்திரி, ஆடிப்பிறப்பு, மார்கழிப் பிள்ளையார் முதலிய விழாக்களும் விரதங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்தவை.
உண்மையில் மனித வாழ்வின் இயந்திரமயமான வாழ்வினை மாற்றவும் இன்பமான வாழ்விற்கு வழிகோலி சமய ரீதியில் மன அமைதியைத் தேடித் தரவுமே விழாக்கள் கொண்டாடப்படுகின்றன எனலாம்.
மேற்கண்டவாறான விழாக்கள் யாழ்ப்பாண மக்களால் காலங்காலமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால் வல்வெட்டித்துறை மக்கள் இவ்விழாக்களை கொண்டாடுகின்ற முறை ஏனைய இடங்களிலிருந்து வேறுபடுகின்றது. அது எந்த வகையில் என்பதும் தமிழர் பண்பாட்டின் விழுதுகள் எவ்வகையில் இங்கு வேரூன்றியுள்ளன என்பதும் நோக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.
வல்வெட்டித்துறை மக்களின் நாகரிகம், ஒழுக்கம், பழக்கவழக்கங்கள் யாவும் கோயில்களைச் சார்ந்தே காணப்படுகின்றன. இதனால் தான் சுத்தானந்த பாரதியார் இங்கு வருகை தந்திருந்தபோது இவ்வூருக்கு “சிவபுரம்” எனும் பெயரைச் சூட்டினார். பின்னாளில் “சிவபுரம்” என்பது ஒரு வீதிக்கு பெயராயிற்று.
இப் பிரதேசத்தில் முக்கியமாக கரகாட்டமும் பாற்செம்பு, உரு ஆடுதல், தீ மிதிப்பு, வேள்வி என்பன மிகமுக்கிய நிகழ்வுகளாகும்.
இவற்றைவிட சித்திரை வருடப்பிறப்பும் போர்த்தேங்காய் அடிக்கின்ற மரபும், பட்டம் விடும் நிகழ்வும், கார்த்திகை விளக்கீடும் புகழ்பெற்றன.
திருமண சடங்குகள் என்றாலே சீதனம், மாப்பிள்ளை பார்த்தல், பெண்பார்த்தல், பொன்னுருக்கு, கன்னிகாதானம், கால் மாறுதல் என்பனவும் இடம்பெறும்.

வல்லைபற்றி கூறும் நூல்கள்

பழங்கால யாழ்ப்பாணம் – கே. இராசநாயகம்.
ஊரின்னிசை – பூ.க. முத்துக்குமாரசாமி
செ. வைத்தியலிங்கம்.

Sharing is caring!

Add your review

12345