வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற்கு முன்பும் அவர்களது ஆட்சியின் பின்பும் நீராவிக்கப்பல் வரும் வரைக்கும் தென் இந்தியாவுக்கும், வட இலங்கைக்கும் இடையேயான தொடர்பு குறிப்பாக வல்வெட்டித்துறையின் துறைமுக வழியாகவே இருந்தது. இந்தியாவின் கோடிக்கரைக்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையிலான சீரான கடற்பயணம் வல்வெட்டிதுறை மக்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தென் இந்தியாவுக்கான தபால் போக்குவரத்தும் கூட வல்வெட்டித் துறை ஊடாகவே நடைபெற்றது.
இவ்வாறு தபால் போக்குவரத்து நடைபெற்று வந்த காலத்தில் ஒரு நாள் கோடிக்கரையில் இருந்து தபால் கொண்டு செல்வதற்கான வள்ளம் புறப்படுவதற்கு ஆயத்தமான போது, ஒரு வயோதிபப்பெண் வள்ளக்காரரின் முன் தோன்றி தன்னையும் வள்ளத்தில் கொண்டு சென்று இலங்கைக்கரையில் விடும்படி கேட்க ஆச்சரியப்பட்ட வள்ளக்காரன் இலங்கைக்கு எங்கே போகப்போகின்றீர்கள்? என்று கேட்டதும் வல்வெட்டித்துறைக்கு போக வேண்டும் என்று அந்த வயதான மூதாட்டி கூறினார். அங்கே உங்களுக்கு யார் இருக்கின்றனர்? என்னவேலை என்ற அவர்களது வினாக்களுக்கு அந்த மூதாட்டியிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. எனினும் அதற்குப்பின்னர் எதுவுமே எவரும் பேசிக்கொள்ளவில்லை. அந்த மூதாட்டியுடன் வள்ள ஓட்டிகள் வல்வெட்டித்துறைக் கரையை அடைந்ததும் அந்த மூதாட்டி அவர்களுக்கு ஆசி கூறி அவர்களைப் பிரிந்து சிறிது தூரம் சென்று மறைந்து விட்டார்.
அந்த சம்பவம் நடந்த சில நாட்களின் பின் தற்போது வல்வை முத்துமாரியம்மன் கோயில் கற்பக் கிருகம் இருத்தும் இடத்தில் இரவு நேரங்களில் ஒரு ஒளிக்கீற்று காணப்பட்டதாக அந்தப்பகுதி மக்கள் கூறி அந்த திசையை நோக்கி வணங்கி வந்தனர். அந்த வெளிச்சத்தைப் பலமுறை கண்டு பரவசமடைந்த வல்வை வாசி ஒருவர் அவ்விடத்தில் ஒரு சிறிய கொட்டில் கட்டி பக்தியுடன் பூசை செய்து வழிபட்டு வந்தார்.
இதுவே வல்வை முத்துமாரியம்மன் ஆலய வரலாற்றின் மூலமாக கருதப்படுகின்றது.
அந்த வகையில் நல்லூர் இராஜதானி உச்சம் பெற்றிருந்த காலத்தில் கூளங்கை சிங்கையாரியன் வந்த காலம் தொடக்கம் அம்பாளின் வணக்கமுறைகள் இடம் பெற்று வருகின்றன.
அம்மன் கோயிலின் வரலாறு கோயில்களின் இடாப்பில் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோயில் 1795 இல் புண்ணியர் என்பவரால் கட்டப்பட்டது எனக் காட்டப்பட்டுள்ளது.
அன்று தொடக்கம் வல்வை மக்களால் காலத்திற்கு காலம் கோயில் கோபுரம் மற்றும் மண்டபங்கள் புனரமைக்கப்பட்டு, அழகூட்டப்பட்டு வச்து இன்று இராஜதானி போன்று அற்புதமான கட்டடத்தில் அம்பாள் குடியிருந்து அருளாட்சி புரிந்து வருகின்றார்.
சித்திராபௌர்ணமியில் தீர்த்தோற்சவம் வரும் வகையில் நிகழும் 15 நாள் உற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஈழத்திலும் தமிழகத்திலும் வல்வை முத்துமாரியம்மன் வழிபாட்டிற்கும் என ஒரு தனித்துவம் இருப்பதை இன்று காணலாம். இன்று மூன்று அழகிய சித்திரத்தேர்களில் அம்பாள் முருகன் பிள்ளையார் ஆகிய தெய்வங்களுடன் காத்தவராயரும் வீதி உலாவரும் காட்சி அற்புதமாக இருக்கும். அன்னையின் வீதி உலா வருகை உலகத்தமிழினத்திற்கு அருள்பாலிக்கும் வருகையாக இருக்கவேண்டும்.

By – Shutharsan.S

தொகுப்பு: ந.ஆனந்தராஜா
ஆதாரம்: வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சரித்திரம்

Sharing is caring!

Add your review

12345