வேரக்கேணி வரலாறு

வேரக்கேணி என்ற சொல் ஒரு காரணம் பற்றி வந்த பெயர் என்று பலரும் கூறுவர். அவர்களின் கூற்றுப்படி ‘வேரல்‘ என்பது மூங்கில் மரத்தைக் குறிக்கும் ஒரு பெயர். மூங்கில் மரங்கள் நெருங்கி அடர்ந்து காணப்பட்டதாகவும், அதன் அருகே ஒரு நீர் நிறைந்த தடாகம் அமைந்திருந்ததாகவும், வேரலும் கேணியும் சேர்ந்து இருந்த படியால் வேரக்கேணி என்ற பெயர் அந்த இடத்திற்கு வழங்கப்பட்டதாகவும், ஒரு சிலர் கூறுவர். வேறுசிலர் ஆதியில் இப்பகுதிக்கு ‘வேதக்கேணி‘ என்ற பெயர் இருந்ததாகவும் கூறுவர். இதுவும் ஒரு காரணப்பெயர் என்றும் கூறுவர். இவர்களின் கூற்றையும் ஒப்புக்கொள்ளக்கூடிய அளவில் ஒரு சில நிரூபணங்கள் இன்றும் இவ்விடத்தில் காணலாம். இப்பகுதியில் கோயில் கொண்டு பக்தகோடிகளுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் கந்தப்பெருமானுக்கு வேரக்கேணிக்கந்தன் என்ற திருநாமம் இன்றும் வழங்கி வருகின்றது. இந்தக் கந்தன் ஆலயத்திற்கு மிக அண்மையில் ‘வேதாந்த மடம்‘ ஒன்று இருந்ததாகவும், அங்கு வேதம் ஓதும் வேதியர் பலர் வாழ்ந்ததாகவும் கூறுவர். அந்த வேதாந்த மடத்திலிருந்து அந்தணர் கூட்டத்தினர் அக்காலத்தில் வேதம் ஓதிக்கொண்டு நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்கு பாதயாத்திரை செய்ததாகவும் வரலாறு உண்டு. தற்பொழுது இவ்வாலயத்திற்கு அருகாமையில் உள்ள சில காணிகள் வேதாந்த மடத்திற்கு உரியனவாகக் காணப்படுகின்றன. வேதம் நிலவிய காரணத்தால் ‘வேதக்கேணி’ என்று இப்பகுதிக்கு அப் பெயர் வழங்கப்பட்டது என்றும், இந்த வேதக்கேணி என்ற பெயர் பிற்காலத்தில் மருவி ‘வேரக்கேணி’ என்ற பெயரால் அழைக்கப்படுவதாகவும் கூறுவர்.

இவ்வருள் பதியில் கோயில் கொண்டிருக்கும் கந்தப்பெருமானது திருக்கோயிலின் வரலாற்றுச் சிறப்பை யாவரும் அறியத் தருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். இக்கோயிலின் ஆரம்ப காலத்தை காலவரையறை செய்து கண்டு கொள்ள முடியவில்லை. ‘யாழ்ப்பாண வைபவ மாலை‘ என்னும் நூலில் இவ்வாலயம் பற்றிக் குறிப்பிடப் பட்டிருந்தாலும், மூன்று அல்லது நான்கு பரம்பரை காலத்து நிகழ்வுகளைக் கர்ணபரம்பரையாகக் கேட்டறிந்து கொண்டபடியாலும், இவ்வூர் மூதாதையர் பலரின் கூற்றின் படியும், இவ்வாலயத்திற்கு தர்மசாதனம் செய்யப்பட்டுள்ள உறுதிகளின் படியும் இவ்வாலயம் இற்றைக்கு நானூறு(400) ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு பழைய ஆலயம் என்று கூற முடியும்.

Sharing is caring!

Add your review

12345