யா/புலோலி மெ.மி.த.க.பாடசாலை

வளம் கொழிக்கும் ஈழத் திருநாட்டின் தலையென விளங்குவது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் திலகம் போன்று விளங்குவது வடமராட்சிப் பிரதேசம். வடமராட்சியில் புலவர்கள் வாழ்ந்த பெருமையுடையது புலோலி எனும் கிராமம். இக்கிராமத்தின் தென்பகுதியில் புகழுடன் அமைந்து விளங்குவது யா/புலோலி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையாகும்.
இப்பாடசாலை 1833 ம் ஆண்டு மெதடிஸ்த மிஷனரியினரால் ஆரம்பிக்கப்பட்டது. கிறிஸ்த்தவ மிஷனரியினால்  ஆரம்பிக்கப்பட்டாலும் இந்து மதத்தவர்களும் அதிகமாகக் கல்வி பயில்கின்றனர்.
ஆரம்ப காலத்தில் 1-8 வரை வகுப்புக்கள் காணப்பட்ட போதிலும் காலப்போக்கில் 1-11 வரையான வகுப்புக்கள் விரிவுபடுத்தப்பட்டன. ஒரே ஒரு கட்டடத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று மாடிக்கட்டடங்கள் மூன்றினை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.
”கற்றாய்ந்தொழுகு” என்ற மகுட வாசகத்துடன் பொருந்திய இலச்சினை ஒன்றும் இப்பாடசாலைக்கு உண்டு. நெற்கதிர், எரியும் விளக்கு, புத்தகம் என்பன இலச்சினையில் பொறிக்கப்பட்ட சின்னங்களாகும்.  இப்பாடசாலைக்குப் பொருள் பொதிந்த கீதம் ஒன்று உள்ளது.
1987ம் 1996ம் ஆண்டுகளில் இலங்கை இராணுவத்தினரும் 1989 ம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினரும் இப்பாடசாலையில் நிலைகொண்டிருந்தனர். இதன் காரணமாகக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன. பாடசாலை வளங்களும் பாதிப்படைந்தன. 1987ம் ஆண்டு தொடக்கம் ஐந்து தடவைகள் குண்டு வீச்சுக்கு இலக்காகி கட்டடங்கள் சிதைவடைந்தன. பல போர் அனர்த்தங்களுக்குள் உள்ளாகி சிதைவடைந்த இப்பாடசாலையில் மாணவர்கள் கற்க முடியாது பல இடங்களுக்கு அலைந்து திரிந்த காலங்கள் இப்பாடசாலை வரலாற்றில் மிகத் துன்பமான காலங்களாகும்.
1999ம் ஆண்டு இப்பாடசாலையின் கட்டடத் தொகுதியின் ஒரு பகுதியில் வடமராட்சி வலயக் கல்வித் திணைக்களம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது பாடசாலையின் அமைவிடத்தையும் பாடசாலையின் பெயரையும் வடமராட்சி  தென்மராட்சி ஆசிரியர்களும் பொதுமக்களும் அறிவதற்குப் பெரும் வாய்ப்பாக அமைந்தததுடன் திணைக்களத்தின் நேரடிக் கண்காணிப்பும் பாடசாலையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவதாக அமைந்துள்ளது.
கற்றறிந்த பல கல்விமான்களை உருவாக்கி நாட்டுக்கு அளித்த பழம் பெருமை வாய்ந்த இப்பாடசாலையின் வரலாறானது பல திருப்பங்களை அடைந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு: Puloly A.M.T.M

நன்றி : புலோலி மெ.மி.த.க.பாடசாலை இணையம்

Sharing is caring!

Add your review

12345