இராமநாதபுரம்

இராமநாதபுரம்கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசத்தில் கிளிநொச்சி நகரில் இருந்து 8 மைல்கள் கிழக்குப்புறமாக அமைந்திருக்கிறது. இந்த இராமநாதபுரம் கிராமம் 1952 இற்கு முன்பு சேர் பொன் இராமநாதன் என்பவரால் 1000 ஏக்கர் வயல் நிலத்தை வாங்கி அந்த வயல் நிலத்தை பண்படுத்துவதற்கும், வயலில் வேலை செய்வதற்கும் யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களில் இருந்து சிறிய அளவு மக்களை அழைத்துச் சென்று குடியேற்றினர். பின்னர் படிப்படியாக குடியேற்றங்களை அதிகமாக்கியதோடு பின்னர் அரச உதவியோடு மான்யங்களை பெற்றுக்கொடுத்து அந்த மக்களை ஊக்குவித்ததோடு இந்த கிராமம் இராமநாதபுரம் என்ற பெயரையும் பெற்றுக்கொண்டது.

அதன் பின்னர் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்காக 1952 ஆம் ஆண்டு அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அமைச்சரவையில் பிரதி அமைச்சராகவும் சாவகச்சேரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த திரு வீ. குமாராசாமி என்பவரால் மீண்டும் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக யாழ் மாவட்டத்திலுள்ள வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் கிழக்கு, வலிகாமம் மேற்கு ஆகியவற்றோடு தீவகப்பகுதிகளான நெடுந்தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு போன்ற பெரும்பாலான தீவுகளில் இருந்தும் அழைத்துவரப்பட்ட மக்கள் இங்கு குடியேற்றப்பட்டனர். இங்கு குடியேற்றப்பட்டவர்களுக்காக அரச மானியங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

மேலும் இங்கு குடியமர்த்தப்பட்டவர்களுக்காக ஒரு மகாவித்தியாலயமும், இரண்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளும், இரண்டு கூட்டுறவு சங்கங்களும், இரண்டு உப தபாற்கந்தோர்களும் பின்னாளில் வட்டக்கச்சி இராமநாதபுரத்திற்கென்று தனியான கமநலசேவை நிலையமும் அமைத்து கொடுக்கப்பட்டது. இந்த கிராமத்தின் எல்லையோரங்களாக வடக்கு திசையாக பெரியகுளம் கிராமமும், கிழக்கு திசையாக கல்மடு நகரும், தெற்கு திசையாக கொக்காவில் காடும், மேற்கு திசையாக வட்டக்கச்சி பிரதேசமும் காணப்படுகின்றது. இந்த கிராமத்தில் குடியேற்றப்பட்டவர்களுக்கென்று இரண்டு ஏக்கர் வாழ்விட நிலம் 3 ஏக்கர் வயல் நிலங்களும் வழங்கப்பட்டன. இதைவிட இந்த பரந்த பிரதேசத்தில் 2 /3 பகுதி காலபோகம் சிறுபோகம் என்ற இரண்டு போகங்களை கொண்ட நீர்ப்பாசன நிலங்களாக இருப்பது இந்த கிராமத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. இந்த கிராமத்தின் முக்கிய விளைபொருளாக நெல் உற்பத்தி விளங்குவதுடன் மிளகாய், வெங்காயம் போன்றவற்றுடன் தென்னை மரச்செய்கையும் பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.

1983 இற்கு முன்பு கிளிநொச்சி என்ற பிரதேசம் யாழ்ப்பாண கச்சேரி நிர்வாகத்துடனும் சாவகச்சேரி தொகுதியுடனும் சேர்க்கப்பட்டிருந்தது. பின்னர் கிளிநொச்சி தனி தொகுதியாக்கப்பட்டு தனி மாவட்டமாக்கப்பட்டு தனியான நிர்வாகக் கட்டமைப்புக்களும் உருவாக்கப்பட்டு தற்பொழுது கிளிநொச்சி என்ற பிரதேசம் சர்வதேசரீதியில் தனது பெயரை பதிவாக்கியதுடன் அதனையொட்டி இராமநாதபுரம் கிராமமும் பெருமை கொள்கின்றது.

பல பக்கபரிநாமங்களால் வடிவுபெற்றிருக்கிறது. இந்த வாழ்வியல் நிலம் வயல் நிலங்களின் விரசிப்பு ஆண்மீக உணர்வின் அட்டகாசிப்பு, கல்வி சமூகத்தின் தனித்துவம், நிர்வாக அலகுகள், கைத்தொழில் அழகுகள் வாழ்வியல் பெருமைகள் போன்றவற்றை பதிவாக்கி வைத்திருக்கின்றது இந்த கிராமம். ஒரு உயர்வு நோக்கிய பயணம் இந்த கிராமத்தின் வாழ்வியல் இளையோடி இருப்பதோடு சூழல்கள் வளப்பாங்கோடும் வாழ்வுக்கு தேவையான பல அடிப்படை வளங்களும் இங்கு பலம் பெற்றிருக்கிறது. சிறிதளவு குறைகளும் பெரிதளவு நிறைவுகளும் இந்த கிராமத்தின் நாளாந்தங்களோடு பிணைந்திருக்கின்றன. வாழ்வியலை, வரலாற்றை இன்னும் இன்னும் பலவற்றை இந்த கிராமம் அவசியப்படுத்தியும், அழகுபடுத்தியும் வைத்திருப்பதுதான் இந்த கிராமத்தின் சிறப்பம்சம்.

 

“பெற்ற தாயும் பிறந்ந பொன்னாடும்
நற்றவ வானில் நனி சிறந்நவை.”

By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம் – http://ramanathapuram.ca/whoweare.php இணையம்.