ஈழநாடு பத்திரிகை

ஈழநாடு பத்திரிகை1958இல் ஆரம்பிக்கப்பட்டது ஈழநாடு பத்திரிகை. ஆரம்ப காலத்தில் அனைத்துப் பத்திரிகைகளையும் வாசித்த வாசகர்கள் மேலதிக வாசிப்பிற்காகவே இப்பத்திரிகையை  வாசித்தனர். காலம் செல்லச் செல்லச் ஈழநாடு பத்திரிகை வாசகர்களின் மேலதிக வாசிப்பிற்குரியதானது இப்பத்திரிகையின் சாதனை என்றே கூறவேண்டும். இது சாதனையை மட்டும் புலப்படுத்தாமல் தமிழர்களின் நிலைமை மாற்றம் சிந்தனை மாற்றம் போன்றவற்றையும் புலப்படுத்துகின்றது. இப்பத்திரிகையின் மற்றுமொரு சாதனையாக தலைநகரத்திற்கு வெளியில் ஒரு மாகாண நகரிலிருந்து வெளியிடப்படும் முதல் இலங்கைத் தினசரியாக அமைந்ததே ஆகும். 1960களின் நடுப்பின்கூற்றில் ஈழநாட்டைக் கொழும்பிலிருந்து வெளியிடத் திட்டமிடப்பட்டது. இருப்பினும் இது யாழ்ப்பாணத்திற்குரிய ஒரு முதலீடாகவே கருதப்பட்டு நடாத்தப்பட்டு வந்தது. இதனால் பாரிய வளப்பற்றாக்குறைக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
ஈழநாடு பொதுவாக தேசிய செய்திகளிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிரதேச வட்டாரச் செய்திகளிற்கு முன்னுரிமை கொடுத்தது. இதனால் அதிகளவான பிரதேச வாசக வட்டத்தினைக் கொண்டிருந்தது. இவற்றின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசக் கோயிற் தீர்த்தம் தேர் போன்றவற்றின் விரிவாக்கத்தை வழங்க வேண்டிய தேவை கொழும்புத் தேசிய பத்திரிகைகளுக்கு உருவானது.
பரபரப்பான முறையில் செய்தி எழுதுவதென்பது ஈழநாட்டிற்கு அந்நியமான ஒன்று. இதற்கான ஒரு காரணமாக இப்பத்திரிகையின் ஆசிரிய ஆலோசகர்கள் பெரும்பாலும் இளைப்பாறிய பாடசாலை ஆசிரியர்களாக இருந்தமையும் குறிப்பிடப்படுகின்றது. இப்பத்திரிகையில் அரசியற் செய்திகள் குறைவாகவே காணப்பட்டன. இதனால் அரசியல் வாசகர்கள் குறைவாகவே காணப்பட்டனர். இவை இவ்வாறெல்லாம் இருந்தும் இது ஒரு மாகாணப் பத்திரிகையாக இயங்கவில்லை. இதற்கான காரணமாக அனைத்து இடங்களையும் உள்ளடக்காமையே கொள்ளப்படுகின்றது.
1970இற்குப் பின்னர் இளைஞர் இயக்கம் இராணுவம் பொலிஸ் நடவடிக்கைகள் யாழில் அதிகரித்தன. இதனால் செய்திகளை உடனுக்குடன் அறிய வேண்டிய தேவை ஏற்பட்டது. ஏனெனில் அதற்கேற்ப முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வதற்காகவே ஆகும். இத்தகைய செய்திகளை வானொலிகள் மற்றும் கொழும்புப் பத்திரிகைகள் தெரிவிக்கத் தாமதமாகின. இதனால் உள் ஊர்ப்பத்திரிகைகளிற்கான கேள்வி அதிகரித்தது. அத்துடன் யாழில் 1970-1977இல் இல்லாத அரசியற் பரபரப்பு நிலவியது. இவற்றையெல்லாம் அறிவிக்கும் பணியை ஈழநாடு சிறப்பாகச் செய்தது. இதனால் உள் ஊர் வாசிகள் மட்டுமல்லாது பிற மாவட்டத்தினரும் யாழ் செய்திகளை அறியும் படியாக ஈழநாடு அமைந்தது.
இத்தகைய காலகட்டத்தில் 1981 மே 31 அன்று பொலிஸ் தாக்குதல் இடம் பெற்றது. இதில் ஈழநாடு அச்சகமும் உபகரணங்களும் சேதமாக்கப்பட்டன. இத்தாக்குதல் ஈழநாட்டின் வளர்ச்சியைப் புலப்படுத்தின. இத்தாக்குதலுடன் இப்பத்திரிகை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகையானது.
அதன் பின் மீண்டும் இயங்கி மறுபடியும் 1987ல் தாக்குதலுக்குள்ளானது. பின்னர் 1994ல் உரிமையாளரின் விருப்பின் பெயரில் நிறுத்தப்பட்டது. இருந்தும் தற்காலத்தில் இப்பத்திரிகை இல்லாதது இதழியற்றுறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

By – Shutharsan.S

2 reviews on “ஈழநாடு பத்திரிகை”

  1. கு.மாரிமுத்து சொல்கின்றார்:

    தெரிந்து கொள்ள, தொடர்பு கொள்ள விருப்பம்.

  2. சுதர்சன் சொல்கின்றார்:

    எனது மின்னஞ்சல் shuthan@gmail.com,