கோப்பாய்

கோப்பாய் தொகுதியில் கோப்பாய் ஒரு சிறு கிராமமாகும். அக்கிராமம் வடக்கில் அச்செழு, நீர்வேலியையும் கிழக்கே கைதடி, செம்மணியையும் தெற்கே நல்லூர், மேற்கே இராச வீதிக்கு அப்பால் உரும்பிராய், அன்னங்கை, கோண்டாவிலையும் எல்லைகளாகக் கொண்டது. யாழ் நகரிலிருந்து பருத்தித்துறை வீதிக்குக் கிழக்கே சமாந்தரமாகத் தகதகவென்று அமைந்திருக்கும் கடல் நீரேரி கிராமத்திற்கு அழகினையும், நற்சுவாத்தியத்தையும் தந்து உதவுகின்றது. இவ் ஏரி மாரியில் நிறைந்தும், கோடையில் வரண்டும் காணப்படும். வீதிக்கும், கடல் நீரேரிக்கும் இடையில் பச்சைப் பசேலென நெல் வயல்கள் பிரயாணிகளின் கண்ணுக்கு விருந்தாகின்றன. தென்னையும், பனையும், வாழையும், கமுகும், மாவும், பலாவும் கிராமத்தைச் சோலையாக்குகின்றன. கோப்பாய் என்ற பெயர் தோன்றியமை பற்றிப் பரம்பரையாகச் சொல்லப்பட்ட விளக்கம் ஒன்று உண்டு. இந்தியாவிலுள்ள “கோவை” என்ற இடத்தின் பெயர் இக்கிராமத்திற்கு இடப்பட்டு அது காலப் போக்கில் “கோப்பாய்” என்று மாறியது எனலாம்.

கிராமத்தின் பிரதான உணவு சோறு, வயற்காணிகளும், தோட்டங்களும் நிறைய உண்டு. எங்கு திரும்பினாலும் மா, பலா, வாழை, தென்னை, தோடை என்பனவும் நிறைய உண்டு. இதனால் கிராம மக்களிடையே வறுமை என்றும் நெருங்கியது இல்லை.