சங்கத்தானை

யாழ்குடாநாட்டின் தென்மராட்சிப் பகுதி தொன்று தொட்டுச் சைவத்தையும், தமிழையும் வளர்த்துக் கொண்டே வருகிறது. இத்தென்மராட்சியின் திலகம் போல் திகழ்வது சங்கத்தானை என்னும் கிராமமாகும். சாவகச்சேரி நகருக்கும் மீசாலைக் கிராமத்திற்கும் இடையில் விளங்கும் “சங்கத்தானை” ஒரு பெரும் நிலப்பரப்பைத் தன்னுள் அடக்கியுள்ளது. அதன் புகழும், பெருமையும் அதன் பரப்பிற்கு ஏற்பப் பிரகாசம் கொண்டதுதான், ஒரு காலத்தில் இப்பகுதி ஒரு பெரும் வியாபார தாபனமாகப் பல பொருட்களும் வியாபாரம் செய்யும் ஒரு மையமாகக் காணப்பட்டது. வரலாற்றுப் புகழ்பெற்ற “யாவகர்கள்” தூர கிழக்கு நாடுகளில் இருந்து இங்கே வந்து சங்கு முதலிய நூதனமான தமது பொருட்களைக் கொண்டு வந்து பண்டமாற்று செய்தமையால் “யாவகர்சேரி” பின்னர் “சாவகச்சேரி” என்று பெயர் பெற்றது என்றும், சங்கு வியாபாரத்தில் புகழ் ஈட்டிய இடமாகச் சங்கத்தானை பெயர் கொண்டிருக்கலாம் என்றும் சரித்திர ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். இச்சங்கத்தானைக் கிராமம் தென்மராட்சியில் உள்ள சாவகச்சேரி தொகுதியின் ஒரு பகுதியாக விளங்குகிறது.