நகரம்- கவிதை

ஈழத்து எழுத்தாளர்கள் வரிசையில் தொடர்ச்சியாக பர ஆக்கங்களை வெளியிடுபவர்களில் துவாரகனும் ஒருவர். இவர் சம்பந்தமா பல தகவல்களை ஏற்கனவே தந்துள்ளோம். அவரின் நகரம்- கவிதை ஆனது இங்கு பிரசுரமாகிறது.

நகரம்- கவிதை

வண்ணமாய் மின்னும் நகரம்
அதிகமும் பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது.

ஏவிவிடப்படும் இயந்திரமனிதர்கள்போல்
யார் யாரோவெல்லாம்
இந்த மனிதர்களை இயக்குகிறார்கள்.

கடமைக்கு விரைந்தவன்
கூவிக்கூவி விற்ற கடதாசிப் பூக்களை
விலைபேசிக் கொண்டிருக்கிறான்.

கழுத்துப்பட்டி சப்பாத்து
அட்டைகள் பத்திரங்களுடன்
பூவரசவேலிக்குள் ஓடாகிப் போன மனிதர்களை
ஏமாற்றப் புறப்படுகிறார்கள்
இன்னுஞ்சிலர்.

மூச்செடுக்க முட்டுப்படுபவனிடம்
வைத்தியசாலை வாசலில் நின்று
பிச்சை கேட்கிறான் ஒருத்தன்.

பெற்றவரும் மற்றவரும் நோயில் செத்துக்கொண்டிருக்க
கண்ணை மின்ன மின்ன
அதிசயப் பிராணிகளென
படம் பிடிக்கிறார்கள்
வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள்.

தனியே சிரிப்பவர்களும்
வீதியில் கனாக்காண்பவர்களும்
கண்ணாமூச்சி விளையாடுபவர்களும்
கண்டுபிடிக்கப்படுபவர்களும்
இன்னும் நவீன பைத்தியக்காரராய்
உருமாறிக்கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகளும் செல்லப்பிராணிகளும்
கூடவேஉள்ள
சொற்ப மனிதர்கள் தப்பித்துக் கொள்ள;
மின்னும் நகரம்
பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது!

தொடர்புடைய ஆக்கங்களுக்கு துவாரகன் 1, துவாரகன் 2

 By – Shutharsan.S

நன்றி – ஆக்கம் – துவாரகன்

1 review on “நகரம்- கவிதை”

  1. thuvarakan சொல்கின்றார்:

    ‘நகரம்’ கவிதையைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.