நெடுந்தீவு

வடபகுதியிலுள்ள தீவுகளுக்குள் மிகவும் தனித்துவம் வாய்ந்ததும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமாக விளங்குகின்றது. வெடியரசன் கோட்டை என அழைக்கப்படும் வட்டவடிவமான அரண் ஒன்று நெடுந்தீவில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றது. பேராசிரியர் பொ. இரகுபதியின் ஆய்வுமுடிவுகள் அந்த வட்டவடிவிலான அரண் அமைப்பு பெருங்கற்கால அடித் தளத்தினைக் கொண்டு காணப்படுகின்றது என்பதனைத் தெளிவுபடுத்தியுள்ளது. தென்னிலங்கைத் தொல்லியலாளர் சிலர் அதனை பௌத்த கட்டடவகையைச் சார்ந்தது எனவும் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும் நெடுந்தீவுப் பரப்பானது தொல்லியல், வரலாற்று, பண்பாடு முக்கியத்துவத்தினைக் கொண்டு விளங்குகின்றது என்பது தெளிவாகின்றது.

மு. சிவப்பிரகாசம் என்பவர் ‘வெடியரசன் வரலாறு’ என்ற நூலில் நெடுந்தீவின் வரலாற்று பண்பாட்டு முக்கியத்துவத்தினை விபரித்துள்ளார். இங்குள்ள பெருக்கமரம், குதிரைகள், குதிரைலாயங்கள் என்பன போத்துக்கேயர், ஒல்லாந்தர் கால வாணிப நடவடிக்கைகளை ஞாபகமூட்டுவனவாகவுள்ளன.