வாணர் தாம்போதி

வாணர் தாம்போதி பற்றி ஆராயும் போது புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி வாணர் சகோதரர்களின் அரிய முயற்சியின் பலனாக இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது. ஒரு நாட்டின் கிராமங்கள் முன்னேற்றம் அடைவதற்கு அங்குள்ள போக்குவரத்து பாதைகள் வசதியாக அமைந்திருக்க வேண்டும். தீவுப்பகுதிக் கிராமங்களுக்கு தரைப்பாதைகள் மட்டுமின்றி கடற்பாதைகளும் முக்கிய தேவைகளாக அமைகின்றன. யாழ்ப்பாண நகரத்திலிருந்து 20 கிலோ மீற்றர் தூரத்தில் நடுக்கடலில் ப வடிவில் அமைந்திருக்கும் நிலப்பரப்புத்தான் புங்குடுதீவு கிராமம். யாழ்ப்பாண நகரையும் வேலணைத்தீவையும் இணைக்கும் கடல்மீதான தரைப்பாதை பண்ணை தாம்போதி என்று அழைக்கப்படுகிறது. புங்குடுதீவுக்கும் வேலணை தீவுக்கும் இடையில் பரந்து கிடக்கும் கடலுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள தரைப்பாதை அம்பலவாணர் தாம்போதி என்று அழைக்கப்படுகிறது.

புங்குடுதீவில் பிறந்த அம்பலவாணர் என்ற பெரியார் இத்தாம்போதியை அமைத்தமையால் இதற்கு அந்தப்பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது. 4.8 கிலோமீற்றர் தூரமுள்ள இத்தாம்போதி இலங்கையிலேயே மிகநீண்ட தாம்போதியாகும்.
புங்குடுதீவு மக்களின் நீண்டகால முயற்சியின் பின்பே இது அமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு பஸ்கள் எதிரெதிரே கடக்கக்கூடிய அகலமான வீதி. ஐம்பதுக்கு மேற்பட்ட மதகுகளும் ஒரு பெரிய பாலமும் இந்த நீண்ட பாதையில் அமைந்திருக்கின்றன.
கடலின் நடுவே பெரிய பாறாங்கற்கள் நட்டு அதன்மீது மணலும் சீமெந்தும் பூசி தார் இட்டு நீண்டவீதியாக இந்த தாம்போதி அமைக்கப்பட்டிருக்கிறது. புங்குடுதீவின் போக்குவரத்தை தரைப்பாதையினூடாக அமைத்துக்கொடுத்த பெருமை இந்த அம்பலவாணர் தாம்போதிக்கே உரியது. மேற்படி பாதையை அமைப்பதில் முன்னின்று உழைத்த அம்பலவாணர் சகோதரர்களை, புங்குடுதீவு மக்கள் என்று நன்றியுடன் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
புங்குடுதீவில் பிறந்த சமூக சேவகர்கள்தான் பெரிய வாணரும் சின்னவாணரும். இவர்கள் இருவரும் இளமைக்காலத்திலேயே புங்குடுதீவு மக்கள் போக்குவரத்தில் அனுபவிக்கும் கஷ்டங்களை அனுபவரீதியாக உணர்ந்திருந்தனர். பெரிய வாணர் படிப்பு முடிந்ததும் தொழில்தேடி மலேசியா சென்றார்.
மலேசியாவில் தீவுகளுக்கிடையே அமைந்துள்ள தாம்போதிகள் போன்று புங்குடுதீவுக்கும் வேலணைக்கும் இடையில் ஒரு பெரிய தாம்போதியை அமைக்க வேண்டுமென்று அவர் கனவு கண்டார். தமது கனவை நனவாக்க பெரிய சாதனைகளை அவர் செய்யவேண்டியிருந்தது. மலேசியாவில் வாழ்ந்த புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி மலாயா – புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, புங்குடுதீவு மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கான வழிவகைகளை ஆராய்ந்தார்.

1918 ஆம் ஆண்டு நாடு திரும்பிய பெரியவாணர் முறைப்படி தாம்போதியை அமைக்க வேண்டுமென புங்குடுதீவிலுள்ள வீடுகள் தோறும் கையொப்பம் வாங்கி அரசுக்கு அனுப்பினார்.
தாம்போதி அமைப்பது சம்பந்தமாக கொழும்பில் அரச பிரநிதிகளைச் சந்திப்பது, பத்திரிகைகளுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது, போக்குவரத்து அவலங்களைப் புகைப்படங்கள் மூலம் நாடு முழுவதும் அறியச்செய்வது போன்ற பணிகளில் பெரியவாணர் முழு முயற்சியுடன் ஈடுபட்டார்.
புங்குடுதீவிலுள்ள வீடுகள் தோறும் சென்று கையொப்பங்களை வாங்குவதில் சின்ன வாணரும் அவடன் ஈடுபட்டார். 1922 ஆம் ஆண்டு புங்குடுதீவு மகாஜன சேவாசங்கம் என்ற சங்கத்தை ஆரம்பித்த அம்பலவாணர் சகோதரர்கள், பல அங்கத்தவர்களை சேர்த்துக்கெண்டனர். இதற்காக அதனை 1926 ஆம் ஆண்டு அகில இலங்கை மகாஜன சேவா சங்கம் என்று பெயர்மாற்றினார்கள். இந்த அமைப்பினூடாக அரச பிரதிநிதிகள், தேசாதிபதி போன்றோரை அழைத்து வந்து பிரச்சினைகளை எடுத்துக்கூறினர்.
அதன் பலனாக 1935 இல் சட்டநிரூபண சபையில் தாம்போதி அமைக்கும் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்ட நிரூபண சபையில் அங்கத்தவர்களாக இருந்த கண்டி அங்கத்தவர் பண்டிட் பட்டு வந்து டாவ, தொழிற்சங்கவாதி ஏ.ஈ.குணசிங்க, ஆங்கிலேயப் பிரதிநிதி சேர் வில்லியம் ஆகியோர், தாம்போதி அமைக்க வேண்டும் என்று பல ஆதாரங்களுடன் வாதாடி அனுமதியையும் நிதியையும் பெற்றுக்கொண்டனர்.

வாணர் சகோதரர்கள் கண்ட கனவு நனவாகியது. 1935 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதி வேலை ஆரம்பமாகியது. பல்வேறு வழிகளில் சமூகப்பணியாற்றிய பெரியவாணர் தீவக மக்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். அப்பொழுது அவரால் 3701 வாக்குகளையே பெறமுடிந்தது.
பெரும்பாலும் புங்குடுதீவு மக்களே அவருக்கு வாக்களித்தனர். பொதுத்தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற அல்பிரட் தம்பி ஐயாவை அழைத்து தாம்போதி வேலையைப் பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.
காலூர் எம்.பி.அல்பிரட் தம்பிஐயா 1953 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதியை மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து வைத்தார். அதற்கு முன்பே, அதாவது 1948இலேயே பெரியவாணர் மரணமானார். பெரியவாணர் அமைத்த பிரமாண்டமான தாம்போதி அன்றுமுதல் இன்றுவரை இளமையாகவே காட்சியளிக்கிறது.
எந்தப்போருக்கும் செல்லடிக்கும் குண்டுமழைக்கும் அது அசைந்து கொடுக்கவில்லை. அது அம்பலவாணரின் பெயரைச் சொல்லிக்கொண்டு இன்றும் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது.

தொடர்புடைய ஆக்கம் – புங்குடுதீவு

By -‘[googleplusauthor]’