சண்டிலிப்பாய்

வெப்பம் நிறைந்த காலநிலை உலர்ந்த மணல் சேர்ந்த மண்வளம் போன்ற சிறப்புக்களை கொண்டு விளங்குகின்றது யாழ்ப்பாணம். இலங்கையின் சிகரம்போல் விளங்கும் யாழ்நகரிலே சண்டிலிப்பாய் பிரதேசத்தில் பல கிராமங்கள் அமைந்துள்ளன. இவை யாழ் நகரின் மத்தியிலே அமைந்துள்ளன. இப்பிரிவில் பச்சைப்பசேலென வயல் நிலங்கள் பரந்து கிடக்கின்றன. இங்கு சிறுபோகம் பெரும்போகம் போன்ற காலநிலைக்கு ஏற்ப பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இங்கு நெல் பெரும்போகமாகவும் எள்ளு பயறு போன்ற சிறுதானியங்கள் சிறுபோகமாகவும் பயிரிடப்படுகின்றன. காய்கறி கீரை வகைகளும் பயிரிடப்படுகின்றன. வயல் நிலங்களுக்கு மத்தியிலே குளங்கள் காணப்படுகின்றன. குளத்துநீரை வயல் நிலங்களுக்கு பயன்படுத்தவும் விவசாயிகளுக்கு துணைபுரிகின்றன. அத்துடன் கிராமங்களிலே வாய்க்கால் வழியே மழை காலத்தில் நீர் வழிந்தோடி குளத்தினுள் கலக்கின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரே ஒரு ஆறாகிய ‘வழுக்கைஆறு” இப்பிரதேசப்பிரிவிலேயே காணப்படுகின்றது. அதிகளவு பனை மரங்களையும் கொண்டுள்ளது. பயிரிடப்பட்ட பொருட்;களை சந்தைப்படுத்துவதற்கு பெரிய சந்தை மானிப்பாயில் உள்ளது. மாணவர்களின் கல்வித்தேவையை பூர்த்தி செய்வதற்காக பல பாடசாலைகள் அமைந்துள்ளன. கல்விகற்ற பல ஆசான்மார்கள், வைத்தியர்கள் காணப்படுகிறார்கள். நூலகங்கள் தபால்நிலையங்கள் வங்கிகள் வியாபார நிலயங்கள் ஆலயங்கள் தனியார்கல்வி நிலையங்கள் போன்ற பலவகையான வளங்களையும் கொண்டு சண்டிலிப்பாய் பிரதேசம் சிறப்புற்று வளங்குகின்றது.