சாவகச்சேரி

கிழக்கே எழுதுமட்டுவாள் கிளாலி வீதியும் மேற்கே நாவற்குழி கடலேரியும் தெற்கே சரசாலை வயல்வெளி அந்தணர்திடல் ஈறாகவும், வடக்கே பூநகரிக் கடலேரி வரையும் இன்றைய சாவகச்சேரித் தொகுதி என வரையறுக்கலாம்.

சோழர் காலத்தில் முன்னேஸ்வரம், கோணேசுவரம், திருக்கேதிஸ்வரம் போல் சாவகச்சேரியும் வாரி வனநாத ஈசுவரம் என அழைக்கப்பட்டது. ஆக்காலத்து இராசதானிகளில் ஒன்றாக இது விளங்கியுள்ளது. பின்பு சங்கிலியன் ஆண்ட காலத்தில் நாணயம், நம்பிக்கை, வீரம் எனப்பல சிறப்புக்கள் பெற்றுத் தென்பகுதியில் வாழ்ந்த மக்களினால் தென் – மறவர் – ஆட்சி என்பது காலத்தின் ஓட்டத்தில் தென்மராட்சி என மருவி வந்துள்ளது. இதுபோலவே யாவகர்கள் என்ற வணிகர் வந்து சேர்ந்தமையால் யாவகர் – சேரி என்பது பிற்காலத்தில் சாவகச்சேரியாக மாறியது. இதே போல் சாகச்சேரியின் சிறு கிராமங்களிற்கும் இப்படி வரலாறு இருக்கின்றன.
கச்சாய் கடலில் இருந்து மீன் கொண்டு வந்து விற்பார்கள். அது மீன் – சாலை என்பது மீசாலை என்றும், மாமரங்கள் கூடுதலாக நிற்பதால் மா – சாலை என்பது மருவி மீசாலை ஆக வந்தது என்றும் கூறுவர். பலர் கமம் செய்து கொண்டு இருந்த இடத்தை கோடி – கமம் என்று ஈற்றில் கொடிகாமம் ஆகவும் மாறியது என்பார்கள். மறவர்கள் வாழ்ந்த புலம் ஆகிவிட்டது சோழர் கால வாரி வனநாத ஈசுவரன் கோயிலைப் பரிபாலனம் செய்தவர்கள் இருந்த இடம் இன்னும் கோயிற் குடியிருப்பு என்று அழைக்கப்படுகின்றது. முன்பு ஒரு இராசாவிடம் குடங்களைக் கேட்ட போது குடத்தனை குடாரப்பு எழுதும் மட்டுவாள் என்று சொல்லப்பட்டதாகவும் ஒரு பரம்பரைக் கருத்து இருக்கிறது. குடத்தனை எனும் வல்லிபுரக் கோவிலுக்கண்மை எழுதுமட்டுவாள் சாவகச்சேரித் தொகுதியிலும் இருக்கிறது. இவ்வாறு கல்வயல், சரசாலை, வேம்பிராய் என்று பல சிராமங்கள் சாவகச்சேரித் தொகுதியில் அமைந்துள்ளது.

பூநகரி இலங்கை சுதந்திரமடைந்த 1948 காலப்பகுதியில் சாவகச்சேரித் தொகுதியில் அடைக்கப்பட்டிருந்தது. ஐரோப்பியர் வருகைக்கு முன்பாகவே கச்சாயில் பெரிய துறைமுகம் இருந்து வாணிகம் நடைபெற்று வந்துள்ளது. கொழும்பிற்கு நேரடி புகையிரத, பேரூந்து பாதைகள் தொடங்கிய பின் இதனைப் பயன்படுத்துவபர்கள் குறைவு. சாவகச்சேரிச் சந்தைக்கு முன்பாகத் தொடங்கும் வீதி வளைந்து வளைந்து மீசாலையூடாகச் செல்கின்றது. இது டச்சுக்காரர்களால் அமைக்கப்பட்டமையால் டச்சு றோட் என்று பெயர் பெற்றுள்ளது. இதன் வளைவுகள் மறைந்து நின்று தாக்குவதற்கு வசதியாக ஏற்படுத்தப்பட்டன என்று கூறுவார்கள்.

முக்கனிகள் என்று சொல்லப்படும் மா, பலா, வாழைக்குச் சாவகச்சேரி மண் பெயர் போனது. இதனாலோ என்னவோ சாவகச்சேரியை குழைக்காடு என்று சொல்வார்கள். இன்று விஞ்ஞானத்தால் கத்தரிக்காய் சிறிதாகவும் பெரிதாகவும் வந்துவிட்டது. ஆனால் முன்பு மட்டுவில் கத்தரிக்காயின் முழிப்பை தெரியாதவரில்லை. கச்சாய்க் கடலில் இருந்து கடலுணவுகள் பெறப்படுகின்றன. அத்தோடு பன்னாங்கு பின்னுதல், பனம் பொருள் உற்பத்தி, தும்புக் கைத்தொழில், நாவற்குழியில் இறால் பதனிடும் நிலையம் என்று ஆங்காங்கே பல கைத்தொழில் ஆலைகள் இயங்கி வந்துள்ளன. கச்சாயில் உல்லாசப் பயணத்துறை என்று பெரிதாக எதுவும் இல்லை. ஆனால் கடலில் உல்லாசமாக குளிப்பவர்கள் இருக்கிறார்கள். பனையடிக்குள் வயல், தனங்கிளப்பு வயல், மீசாலை வயல் என்று பச்சைப் பசேல் என்று காட்சி தரும் நிலங்களிற்குக் குறைவில்லை.