சுன்னாகம்

பனை, தென்னை, கமுகு போன்ற வான் பயிர்களும், பலா, மா, வாழை, தோடை, எலுமிச்சை, மாதுளை போன்ற கனி மரங்களும் செழித்து வளர்ந்த சோலையாகத் திகழ்வது சுன்னாகம். இது வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு எனப் பிரிக்கப்பட்ட பெரிய கிராமமாகும். வடக்கே ஊரெழுவையையும், மேற்கே கந்தரோடையையும் எல்லைகளாகக் கொண்டது. இக்கிராமத்தைப் பற்றிச் சிந்திக்கும் போது சுன்னாகச் சந்தையே கண்முன் காட்சியளிக்கிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுன்னாகச் சந்தையே மிகப் பெரியதும், பழமையானதும். இங்கு வடமாகாணத்தின் எல்லா மக்களும் தம்மிடம் உள்ள பொருட்களை விற்கவும், தமக்குத் தேவையான பொருட்களை வாங்கவும் பெருந்தொகையாக வருவதுண்டு. ஒவ்வொரு பொருளும் வௌ;வேறாக விற்பதற்கு உதவியாக இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதும், தனி அழகைக் கொடுப்பதோடு வாங்குவோர் விற்போருக்கு வசதியாகவும் அமைந்துள்ளது. இவற்றிலும் மேலாக நான்கு வீதிகளிலும் அமைந்துள்ள பல் வகைப்பட்ட வியாபார நிலையங்களும், கடைகளும் நோக்கும் போது பெரும்பாலானவை அயற் கிராமங்களுக்குச் சொந்தமானவை என்றே கூறமுடியும்.