செழிப்பான சேரன் தீவு

செழிப்பான சேரன் தீவு ஆனது ஈழத்தின் பழைய பெருமைமிக்க பெயர்களுள் சேரன் தீவும் ஒன்றாகும். அரேபியர்கள் ஈழத்தினைச் செரன் டீப் ‘சேரன் தீவு” என அழைத்தனர். ஈழத்தின் திராவிடக் கலாச்சாரம் என்று குறிப்பிடும் பொழுது இது சிறப்பாகச் சேரர், சோழர், பாண்டியரையும் பிற்காலத்தில் பல்லவரையும் உள்ளடக்கியதொன்றாகும். ஆரம்ப காலம் முதலாகத் தென்பாண்டிய நாட்டுமக்கள் மட்டுமின்றித் , தென் சேர நாட்டுமக்களும் ஈழத்தில் திராவிடக் கலாச்சாரத்தைப் பேணியவர்களாவர் என்பதனைத் தொல்லியல் , வரலாற்றியல் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஈழத்தில் மலபார் “சேரர்” மக்கள் சிறப்பாக வர்த்தகங்கள் செழிப்புற்றிருந்த நகரங்களையும் துறைமுகங்களையும் அண்டிக் குடியேறியிருந்தனர். பெரிபுளுஸ் “கி.பி 80” பிளினி ‘கி.பி 100″ ஆகிய பிறநாட்டு ஆசிரியாகள் மலபார் ‘சேரர்” வணிகர்கள் தமிழகம், ஈழம், பர்மா முதலிய நாடுகளிலிருந்து பொருட்களைப் பிறநாடுகளுக்குச் சந்தைப் படுத்தவதற்காகச் சேரநாட்டுத் துறைமுகங்களில் குவிப்பதை அவதானித்துள்ளனர். இவர்கள் குறிப்புகளிலிருந்து மலபார் வாணிகக் குழுக்கள் ஈழத்தின் கரையோரத் துறைகளில் வாணிக முயற்சியில், ஈடுபட்டிருந்தார்கள் என்பது தெளிவாகிறது. இப்பொழுது இவர்கள் பேசிய மொழி தமிழாகும். கி.பி 12ம் நூற்றாண்டு முதலாகவே மலையாள மொழி என ஓர் கிளை மொழி தமிழிலிருந்து உருவாயிற்று என மொழி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே சேரர், பாண்டியர் என்ற வர்த்தகக் குழுக்கள் யாவும் ஒரே கலாச்சார மக்கள் ஆகையால், இவர்களைப் பிரித்தறிவது என்பது கடினமாக காரியமாகும். ஆயினும் சேர வர்த்தகக் குழுக்களுடன் நேரடியாக வாணிபத்தை நடத்திய அரேபியர்கள் ஈழத்தைச் சேரர் பெயராலே சேரன்டீப் என அழைக்கலாயினர். அரேபியர்களால் அறிமுகமான இப்பெயரை உரோமர்களும் அறிந்திருந்தனர். உரோம அரசன் {லியன் காலத்திற் கி.பி 361ல் செரன்டீப்பிலிருந்து ஒரு தூதுக்குழுவை வரவேற்றான் என்ற குறிப்பிலிருந்து இதனை உணரலாம். ஈழத்தில் வாழ்ந்திருந்த சேரர்களைப் பற்றி கி.பி 9ம் நூண்றாண்டைச் சோந்த சிந்துபாத் ‘அரேபிய இரவுக்கதைகள்” எனும் மாலுமியின் குறிப்புகளிலிருந்தும் அறியக்கூடியதாய் இருக்கின்றது. “சிந்துபாத் மாலுமியின் கப்பல் ஈழத்தின் வடகரையில் மோதியதாகவும், அப்பொழுது மலபார் மக்களே அவரை உபசரித்ததாகவும் அவர்களுள் ஒருவர் அரேபிய மொழித் தேர்ச்சியுடையவராக இருந்தார் என்றும் மலபார் மக்கள் நீர்த்தேக்க மொன்றின் உதவியுடன் விவசாயம் செய்திருந்தார்கள்” என்றும் குறிப்பிடுகின்ற சிந்துபாத் மாலுமியின் குறிப்புகளிலிருந்து அரேபியர்கள் ஈழத்தில் மலபார் மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பது புலனாகிறது. மேலும் மிகிந்தலை மலைக் கல்வெட்டிலும் மலபார்மக்களின் வரலாறு இடம்பெற்றுள்ளன. இக்கல்வெட்டு ‘தமிழர்கள்” ‘மலபார் மக்கள்” முன்பு செய்த பாசன முறைப்படி விகாரையின் காணிகளுக்கு நீர் வழங்கப்படட்டும் எனக் குறிப்பிடுகிறது. இங்கு குறிப்பிடப்பட்ட தமிழர்கள் மலபார் மக்கள் ‘சேரர்’ என்று குறிப்பிடுவதால் சேரநாட்டு மக்களின் செல்வாக்கு ஈழத்தில் எத்தகையது எனக் கணீப்பீடு செய்துகொள்ள முடிகிறது. யாழ்குடா மக்களின் கலாச்சார இயல்புகள் பல இன்றும் சேரநாட்டியல்புடையன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்புத் தமிழகத்தில் கி.பி 12ம் நூற்றாண்டளவில் தமிழையும் சைவத்தையும் பாதுகாக்க எனக் கலிங்கத்து மாகன் வந்த பொழுது அவன் படையில் இருபது ஆயிரம் கேரள வீரர்கள் இருந்தார்கள். அவா்கள் அத்தனை பேரும் தமிழையும், தமிழையும் தழுவிய பணியுடன் குடியமர்ந்தும் விட்டார்கள். அதனாலேயே போத்துக்கேயர், ஓல்லாந்தர் ஆகியோர் யாழ் குடாவையும் மட்டக்களப்புத் தமிழகத்தையும் ‘மலபார் மாவட்டம்“என ஓர் தனியாட்சிப் பிரிவுக்குள் ஆண்டிருந்தனர் என்று அவர்களது ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் கரையோரச் சிங்களவர் மத்தியிலும் மலையாள மக்களின் செல்வாக்கிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மொழி, மத திணிப்புகளால் மக்கள் மொழி, இன அடையாளங்கள் இழந்து நிற்பதற்கு இவர்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

By -‘[googleplusauthor]’

 

 

நன்றி- ஆக்கம்- தனா குணபாலசிங்கம்

மூலம்- மனஓசை இணையம்