தம்பலகாமம்

தம்பலகாமம்இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகச் சிவவழிபாடு நடைபெற்று வரும் தெய்வீகச் சிறப்பு உள்ளதால், ஊர் பெயருக்கு முன்னால் திரு என்ற சிறப்பும் சேர்ந்து திருத்தம்பலகாமம் என்று அழைக்கப்பட்டு வருகின்றது.

மிகுந்த அருள் சிறப்புடைய மகாதலங்களுக்கே ஸ்தல புராணம் இருக்கின்றது. திருத்தம்பலகாமம் கோணேஸ்வரர் ஆலயத்துக்கு ஸ்தலபுராணம் இருப்பதுடன் தம்பலகாமம் ஊருக்கும் புராணம் இருக்கிறது.
திருக்கோணமலைக் கோணேஸ்வரத்தின் ஸ்தல புராணமான திருக்கோணேசலப்புராணமே தம்பலகாமம் கோணேஸ்வரத்தின் புராணமாகவும் இருக்கிறது. இப்புராணம் திருக்கோணமலை நகரச் சிறப்பு, கோணேஸ்வரம் திருக்கோணமலைக்கு வந்த விபரங்கள், கோணேஸ்வரத்தின் தெய்வீக அருள் சிறப்பு போன்றவைகளைக் கூறுகிறது. அத்துடன் திருக்கோணாசலப் புராணம் தம்பை நகர்ப்படலம் என்ற அதிகாரத்தில் தம்பை நகரின் வளச்சிறப்பு, தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரத்தின் அருள் சிறப்பு, வழிபாட்டுமுறை போன்றவைகளை விபரமாகக் கூறுகிறது.
ஆகவே திருக்கோணமலை, தம்பலகாமம் கோணேஸ்வரங்கள் இரண்டுக்கும் பொதுவான ஸ்தல புராணம் திருக்கோணேசலப் புராணம் என்பது தெரிய வருகிறது. கோணேஸ்வரம் பற்றிய நூல்கள் தம்பலகாமத்தை தம்பை நகர் என்றே கூறுகின்றது. திருக்கோணேசலப்புராணம் தம்பை நகர்ப்படலத்திலுள்ள ஒரு பாடல் பின்வருமாறு:-
கரிய குவளைத் தளிர் மேய்ந்து
கடைவாய் குதட்டித் தேன் ஒழுக
எருமை கிடந்து மூச்செறியும்
எழிலார் தம்பை வளநாட்டில்
இப்பாடல் தம்பை நகர்ப் பிரதேசத்திலுள்ள நீர்வள, நிலவளச் சிறப்பைப் பற்றிக் கூறுகின்றது. இப்பாடல் குறிப்பிடும், நில, நீர்வளம் தற்போதைய தம்பலகாமத்தை ஒத்ததாக உள்ளதால் பழைய தம்பை நகரின் தெற்குப் பகுதி என்று தம்பலகாமத்தைக் கூறலாம்.
தம்பை நகரின் நகரப் பகுதி எங்கே? என்றுதான் தேடவேண்டி உள்ளது. இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் கப்பல் துறைக்கடலைக் கடல் துறையாகக் கொண்டு இலங்கையின் சரித்திர தொடக்க காலத்துக்கு முன், தம்பை நகர் பெரிய வணிக நகராக இருந்தது.
மனித வாழ்க்கையில் பொருள் வகிக்கும் முக்கியம் கருதிப் பெரியோர்கள் அறிவுரைக்கேற்ப தம்பை நகர்த் தமிழ் வாலிபர்கள் தங்கள் கடல் துறையான கப்பல் துறைக்கடலில் இருந்து மரக்கலங்களின் வழியாக தாம் வங்கப் பெருங்கடலைக் கடந்து வேறு நாடுகளுக்குச் சென்று பொருளீட்டி வந்தனர்.
தம்பலகாமம்தென்பாரதத்தில் நடந்த புறநானூறு சம்பவங்கள் இங்கும் இடம்பெற்றன என அறியக் கிடக்கின்றது. இப்படித் தமிழ்ச் சைவர்களின் வாழ்விடமான தம்பை நகரில் கலகங்கள் ஏற்பட்டு உயிர் இழப்புக்கள் அதிகரித்து வந்ததால் பலர் அங்கு வாழ முடியாத சூழ்நிலை ஏற்படவே வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் எனினும் ஒரு பிரிவு மக்கள் தங்கள் பிரதேசத்தை விட்டுப்போக மனமில்லாமல் தெற்குப் பகுதிக்கு வந்து வடக்கே பால்துறைக் கடல்வரை உள்ள தாழ்ந்த பிரதேசத்திலுள்ள திடல்களில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
இதுவே இன்றைய தம்பலகாமம் என்று கூறப்படுகின்றது. ஊர்ப்பேர்கள் திடல்கள் என்று இருப்பதும் இதற்குச் சான்றுபகர்கிறது. நெல்வயல்களுக்குள் கால்மைலுக்குக் குறைந்த இடைவெளியில் சங்கிலித் தொடர்போல் இருபத்திநான்கு சிறு ஊர்கள் வலமாக, வளையமாகக் காணப்படுகின்றன.
இந்த ஊர்களில் தமிழ் உழவர்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடம் சுதேசவைத்தியக்கலையும், நாடகம், நாட்டியம், வாய்ப்பாடு போன்ற சங்கீதக் கலைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்தோங்கி வந்தன.
மாரி காலங்களில் பெரும் சத்தமாகக் கத்தும் தவளைகளின் ஒலியுடன், சுற்றி இருக்கும் ஊர்களில் கூத்துப் பழக்கும் கொட்டகைகளில் இருந்து எழும் மிருதங்கங்களின் ஒலியும் சேர்ந்து ஒலிக்கும்.
வேர் பிடுங்கி குளிசை தயாரிக்கும் பரியாரிமாரும், வயல்களில் நெல் விளைவிக்கும் உழவர்களும் கால்களில் சலங்கையணிந்து அரங்கேற்றும் மேடைகளில் ஜல் ஜல் என்று தாளந்தீர்ந்து நடித்துப் பார்வையாளர்களை மகிழ்விப்பார்கள்.
மருந்தீந்து பிணியகற்றும் பரியாரிமார்கள் சிறந்த புகழ்பெற்ற
பெற்றோர்கள் இட்ட இயற்பெயர் மறைந்து பாத்திரப் பெயருடன்
வாழ்ந்தனர், இன்னும் வாழ்பவர் பலருளர்.
சினிமா வந்தது. அரச உதவியுடன் ஆங்கில வைத்தியம் வந்தது. செழித்து வளர்ந்தோங்கி வந்த இரு கலைகளும் அருகி மறைந்தன. பிரிட்டிஷ் ஆட்சி இருக்கும் வரையும் கிண்ணியாவில் வசித்த மகாத்தாஜியார் என்ற கனவான் தம்பலகாமம் அருகிலுள்ள கடலை அரசிடம் இருந்து குத்தகையாகப் பெற்று கடலுக்குக் காவல் போட்டு பலமுறை முத்துக் குளிப்பை நடத்தினார்.
இந்தக் கடலின் மேற்புறம் முத்துக் குளிப்பையொட்டி முத்து நகர் என்ற பெயருடன் ஒரு நகர் தோன்றி வளர்ந்து வந்தது. தம்பலகாமம் வடக்கில் கடலருகே உள்ள நெல்வயலுள் முத்துச் சிப்பிகளைக் கொண்டு குவித்து அறுத்து முத்தெடுத்து விட்டுச் சிப்பிகள் உயர்ந்த ஊரான இடம் கடலருகே சிப்பித்திடல் என்ற காரணப் பெயருடன் இன்றும் உள்ளது. தம்பலகாமத்திலுள்ள வயல்வெளிகளில் செந்நெல் அமோகமாக விளைந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வந்தர்கள் ரூபா நோட்டுத்தாளை எடுத்து வந்து தம்பலகமத்தில் மாதக்கணக்கில் தங்கி தரகர்களை வைத்து நெல் வாங்கி மூட்டைகளாகச் சேர்த்துக் கடல் வழியாகவும் ரயில் மூலமாகவும் யாழ்ப்பாணம் கொண்டு போவார்கள். முத்துக் குளிக்கும் காலங்களிலும், நெல்வயல்களில் அறுவடை நடைபெறும் காலங்களிலும் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரம் தொழிலாளர்களும் வந்து கூடுவார்கள்.
தம்பலகமப் பற்றிலுள்ள கிண்ணியா, ஆலங்கேணி, உப்பாறு, முனையிற்சேனை, நெடுந்தீவு, குறிஞ்சாக்கேணி, காக்காமுனை, சூரன்கல், கந்தளாய் போன்ற ஊர்களுக்குத் தம்பலகமம் தலைமை தாங்கித் தொழில் ஈந்து வருவதால் தம்பலகமத்தை தாய் ஊரென்றும் அருகிலுள்ள ஏனைய ஊர்களைச் சேயூர்கள் என்றும் அழைப்பது வழக்கமாகும்.
மேற்படி சேயூர்களில் ஒரு பத்திரம் எழுதுவதானால் திருத்தம்பலகாமப் பற்றைச்சேர்ந்த கிண்ணியா, ஆலங்கேணி, கந்தளாய் என்று எழுதுவதே வழக்கமாகும்.

கண்தழையே கந்தளாய் ஆனது

தம்பலகாமம்பண்டையில் திருமலை இராஜ்யத்தை ஆட்சி செய்த வன்னி அரசர்கள் ஆளும் வசதி கருதித் திருக்கோணமலைப் பிரதேசத்தை மூன்று பற்றுக்களாகப் பிரித்தனர்.

மாவட்டத்தின் மத்திய பற்றின் தலைமை இடமான தம்பலகமத்துக்குத் தெற்கே பதினான்கு மைல் தூரத்தில் கந்தளாய் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு பண்டைக்காலத்தில் சதுர்வேத மங்கலம்என்ற பெயர் இருந்தது. நான்மறை ஓதும் வேதியர்கள் வாழ்ந்து வந்ததால் இந்தப் பெயர் காரணப்பெயராக வந்ததாக அறிய முடிகிறது. இந்த ஊரில் பெரிய குளம் ஒன்றை அமைப்பதாக அநுராதபுர அரசி ஆடக சௌந்தரியுடன் விவாக ஒப்பந்தம் செய்து கொண்ட குளக்கோட்டு மன்னர், அரசியின் துணையுடன் இங்கு கட்டிய பெரிய குளத்துக்குத் திருக்குளம் என்ற பெயரே வழக்கில் இருந்து வந்தது.

பிற்காலம் அநுராதபுரத்தில் இருந்து அரசோச்சிய புவனேயகயவாகு என்னும் மன்னன் சமணனாக மதம்மாறி திரிசங்கபோதி என்ற மற்றுமோர் நாமத்தை பெற்றான் என்று திருக்கோணாசலப் புராணம் கூறுகின்றது.
இவ்வேந்தன் சைவ ஆலயங்களை இடித்தழிக்கும் நோக்கில் படைகளுடன் காட்டு வழியே சதுர்வேதமங்கலத்தை நோக்கி வந்தபோது, அவனது தீய எண்ணத்துக்கு தெய்வ தண்டனையாக திடீரென அவன் கண்கள் பார்வை குன்றி குருடாகியது.
மன்னனும் படைகளும் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்து அவ்விடத்திலேயே கூடாரமிட்டுத் தங்கினர். கவலையில் மூழ்கிக்கிடந்த அரசனின் கனவில் ஒரு முதியவர் தோன்றி உன் தீய எண்ணத்துக்குத் தகுந்த தண்டனை பெற்றாய் ஆயினும் இறைவனைத் துதித்து தர்மசீலனான குளக்கோட்டன் அமைத்த நன்னீர்க் குளத்தில் தீர்த்தமாடினால் உன் துயர் அகலும் என்று கூறி மறைந்தார்.
அப்பெரியாரின் கூற்றுக்கமைய பக்திப்பரவசம் அடைந்த அரசன் திருக்குளத்தில் தீர்த்தமாடிய போது அதிசயிக்கத்தக்க விதமாகக் கெட்டுப்போன கண்பார்வை மீண்டும் ஒளிவீசி பிரகாசித்தது.
கெட்டுப்போன கண் தழைத்த காரணத்தால் திருக்குளம் என்று வழக்கில் இருந்த பெயர் மறைந்துகண்தழை என்ற காரணப்பெயரே வழங்கலாயிற்று.
அடுத்துள்ள சதுர்வேத மங்கலம் என்ற பெயரும் மறைந்து, கண் தழை என்ற பெயரே ஊருக்கும், குளத்துக்கும் வழங்கப்பட லாயிற்று. இப்பெயரே காலப்போக்கில் திரிந்து கந்தளாய் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
நோக்கு கண் விளங்கக் கண்ட
நுவலரும் கயத்துக்கன்பால்
தேக்கு கண்டழையாமென்னச்
சிறந்ததோர் நாமம் நாட்டிக்
கோக்குல திலகனாய குளக்
கோட்டு மன்னன் செய்த
பாக்கியம் விழுமிதென்னா
வியந்தனன் பரிந்து மன்னோ.
(திருக்கோணேஸ்வர புராணம்)
பிரமாண்டமான நீர்த்தேக்க அணைக்கட்டின் இருபுறங்களிலும் பாலை, வீரை, தேக்கு, முதிரை போன்ற மரங்கள் வானுயர வளர்ந்து அணைக்கட்டை அழகு செய்தன. அணைக்கட்டின் உச்சியில் நின்று பள்ளத்தாக்கைப் போல் தெரியும் கந்தளாய் என்ற ஊரைப் பார்த்தால் ஊரில் நெடிந்துயர்ந்து நிற்கும் தென்னைமர உச்சியில் காலைவைத்து விடலாம் போல் தோன்றும்.
இன்று இது போன்ற அரிய பல சரித்திரங்கள் மாற்றப்பட்டுவிட்டன. அணைக்கட்டோரங்களில் நின்று அழகு செய்த வான் தருக்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.
பழைமையில் இந்தப்பகுதியில் இன்னொரு தெய்வீகச்சிறப்பும் காணப்பட்டது. அணைக்கட்டுக்கு பாதுகாப்பாக குளக்கோட்டனின் வேண்டுதலுக்கமையவே, நாராயண மூர்த்தியால் அணைக்கட்டோரம் விநாயகர் ஆலயம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இக்குளத்திலிருந்து குதித்தோடி வரும் பேராறு படிப்படியாக உள்ள கற்பாறைகளில் விழுந்து சலசலத்த ஓசையுடன் ஆலயத்தை வலமாக வளைந்து அஞ்சலி செய்து செல்வது பார்க்கப் பரவசமூட்டுவதாக இருக்கும்.

ஆற்றோரம் எங்கும் பலா மரங்கள் காய்களைச் சுமந்து கொண்டு நிற்கும் காட்சி மனதிற்கு உவகை ஊட்டுவதாக இருக்கும்.

இத்தகைய அழகுமிகு இயற்கைக்காட்சிகள் இன்றில்லை. ஆலயத்தை சுற்றிவளைத்து ஓடிய ஆற்றின் கிழக்குப் பகுதியைத் தூர்த்து குடியிருப்புக்களை உண்டாக்கிவிட்டார்கள். ஒரு காலத்தில் இந்த பழம் ஊரில் வேதம் ஓதும் மறையோர்கள் வாழ்ந்ததும் அதன் காரணமாக சதுர்வேத மங்கலம் என்ற காரணப்பெயர் இருந்ததும் அடியோடு மாறிவிட்டது. நாடு சுதந்திரமடைந்த பின் துரித வளர்ச்சி அடைந்து கந்தளாய்ப் பட்டினம் என்ற பெயரே நிலை கொண்டுள்ளது.

1986 இல் கந்தளாய் நீர்த்தேக்கம் உடைத்துக்கொண்ட போது நாராயணமூர்த்தியால் ஸ்தாபிக்கப்பட்ட அணைக்கட்டு விநாயகர் ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டாலும் சைவப்பெருமக்கள் ஆலயத்தைத் திரும்பக்கட்டி இருப்பது பாராட்டுக்குரியதாகும்.
கந்தளாய் நீர்தேக்கத்தை அமைத்தவன் இரண்டாம் அக்கிரபோதி என்று இலங்கைச் சரித்திரம் கூறுகிறது. ஆனால் இம்மன்னனுக்கு முன்முப்பத்திமூன்று வருடம் ஆட்சிசெய்த முதலாம் அக்கிரபோதி மின்னேரியாக் குளத்தைக் கந்தளாயுடன் இணைக்க ஒரு கால்வாயையும் வெட்டினான் எனச் சரித்திரம் முன்னுக்குப்பின் முரணாகக் குறிப்பிடுகிறது.
கந்தளாய்க் குளம் இருந்தபடியால் தானே முதலாம் அக்கிரபோதி கால்வாய் வெட்டி வந்தான் என்றும் ஆகிறது. முதலாம் அக்கிரபோதி கந்தளாய்க்கு கால்வாய் வெட்டி வந்தான் என்ற சரித்திரத்தின் கூற்று முதலாம் அக்கிரபோதியின் ஆட்சிக்கு முன்பும் கந்தளாயில் குளம் இருக்கிறது என்பதை ருசுப்படுத்துவதாக உள்ளது.
திருமலை இராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த சதுர்வேத மங்கலத்தை இன்றைய கந்தளாயை தென்னிலங்கை வேந்தன் ஒருவன் வென்றான். அவன் வென்றரசன் என்றே அழைக்கப்பட்டான்.

ஏற்கனவே இருந்த கந்தளாய் குளத்தின் கிழக்குப்புற அணைக்கட்டுடன் தானும் ஒரு குளத்தை அமைத்தான் இவன். அந்தக்குளம் வென்றரசன் குளம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

தம்பலகாமம்அணைக்கட்டின் உச்சியில் நின்று குளத்தின் நீர்ப்பரப்பைப் பார்த்தால் கடல்போலவும், கட்டின் அடிவாரத்தில் நின்று அணையின் உச்சியை நோக்கினால் கட்டு பெரிய மலை போலவும் தெரியக்கூடியதாகக் குளம் பிரமாண்டமானதாக அமைக்கப்பட்டதெனக் காவியம் கூறுகிறது.

 

இந்தக்குளத்தின் அணைக்கட்டை முதல்முதலாக பார்ப்பவர்கள் வியப்பிலாழாமல் இருக்கமுடியாது. இயந்திர சாதனங்கள் அற்ற அந்தக்காலத்தில் இப்படி ஒரு பிரமாண்டமான அணையை அமைக்க இலட்சக்கணக்கான சனங்கள் தினந்தோறும் வேலை செய்தாலும் பல்லாயிரம் வருஷங்களாவது செல்லுமே என்ற எண்ணம் எவருக்கும் வரவே செய்யும் .
இந்த அணைக்கட்டில் தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரத்தின் சுற்று ஆராதனைகளாக வேள்வி, பொங்கல், மடை போன்ற வழிபாடுகள் பல இலட்சம் ரூபா செலவில் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம்.
இந்தக்குளத்து வேள்வி ஆராதனைகளிலும், தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திலும் ஊழியம் புரிந்து கோயிலால் மாதச்சம்பளம், வயல்மானியம் பெறும் நாற்பத்தைந்துக்கும் மேற்பட்ட தொழும்பாளர் குடும்பங்கள் திருக்கோணமலை மாவட்டம் முழுவதும் பரந்து வாழ்ந்துவருகின்றனர்.

By – Shutharsan.S

நன்றி – ஆக்கம் – தம்பலகாமம்.க.வேலாயுதம்

தகவல் மூலம் – http://kizkkuman.blogspot.com