நுணாவில்

விநாயகப் பெருமான் விரும்பி உறையும் திருவிடம் நுணாவில். பூதத்தம்பியின் அடிகொடி நுணாவில். சாவகச்சேரித் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராகப் பல ஆண்டுகள் இருந்த அமரர் திரு. வ.ந. நவரத்தினம் பிறந்த ஊர் நுணாவில். இலங்கையில் எவராலும் மாற்ற முடியாதிருந்த கண்வருத்தத்தை மாற்றிப் பரிசு பெற்ற பிரபல வைத்தியர் திரு க. கணபதிப்பிள்ளை அவர்களின் அரிய ஊர் நுணாவில், வடமாநிலத்து வீதிகளை ஒரு காலத்தில் நல்ல நிலையில் வைத்திருந்த பொது வேலைத் திணைக்கள மேற்பார்வையாளர் திரு எஸ். எஸ். முத்தையாவின் பக்தி ஊர் நுணாவில், பேராசிரியர் வித்தியானந்தனின் சக்தி ஊர் நுணாவில் பிரபல கவிக்கனி முருகையன் (கல்வயல்) நுணாவில்.

நுணாவில் ஒரு பெரிய ஊர், கொல்லாங்கிராய்(கொல்லா புரி) நுணாவிற் குளம், மணங்குளாய், ஆனைக்கோட்டை, தாளையடி, கல்வயல், மணற்பிட்டி எனப் பல குறிச்சிகளைக் கொண்டு விளங்குவது. முறவர் புலத்தையும் நுணாவிலின் ஒரு பகுதி என்பாரும் உண்டு. எனினும் நுணாவில் கிழக்கு, நுணாவில் மேற்கு என்ற திசைவாரிப் பிரிவுகளே பெயர் பெற்றவைகளாம்.