பருத்தித்துறை

வட இலங்கையின் திலகம் போன்ற யாழ் குடாநாட்டின் வட கிழக்கே அமைந்த பகுதி வடமராட்சி என வழங்கப்படுகின்றது. வடமராட்சியின் பிரதான கேந்திர நிலையமாக விளங்குவது பருத்தித்துறை நகரமாகும். வடமராட்சிப் பிரதேசமானது அதன் மூன்று பக்கமும் நீரினால் சூழப்பட்டு தென்புறத்தே நீண்டு பரந்திருக்கும் வல்லைவெளி, முள்ளிவெளி போன்ற தொடரான வெளிகளை எல்லைகளாகக் கொண்டு விளங்குகின்றது. இதனால் குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து புவியியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வித புவியியல் ஒதுக்கப்பாடே வடமராட்சிப் பிரதேசம் என்றும் சில தனித்துவப் பண்புகளைக் கொண்டு விளங்குவதற்குக் காரணமாக உள்ளதெனக் கூறமுடிகின்றது.

பருத்தித்துறை நகரமானது பீதுருமுனை, பனைமுனை எனப் பெயர் கொண்ட பகுதியில் அமைந்ததால் ஐரோப்பியரால் பீதுருமுனை என வழங்கப்பட்டது. பருத்தித்துறை நகரமானது வடக்கே பாக்கு நீரிணையும், கிழக்கே வங்காள விரிகுடாவுடன் இணைந்த கடற்பரப்பும், தெற்கே புலோலி என்னும் கிராமத்தையும், மேற்கே வண்ணாந்துறை என்னும் சிறு கிராமத்தையும் எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ளது.