மண்டைதீவு

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு மிக அண்மையிலுள்ள தீவு மண்டைதீவாகும். இது சப்ததீவுகளுக்கு எல்லாம் தலையான தீவாக அமைந்திருப்பதனால் இதற்கு மண்டைதீவு என்ற பெயர் வந்ததெனக் கூறுகிறார்கள். இங்குள்ள மக்கள் சிறந்த விவசாயிகளாகவும், வர்த்தகர்களாகவும் விளங்குகிறார்கள். 1960 ஆம் ஆண்டு பண்ணைப்பாலம் திறக்கப்படும் வரை பிரயாண வசதிகள் குறைந்த ஒரு தீவாகவேயிருந்தது. பண்ணைப்பாலம் திறந்த பின்னர் இத்தீவு மக்கள் யாழ்ப்பாணத்துடனும் ஏனைய லைடன் தீவு, புங்குடு தீவு ஆகியவற்றுடன் தரைவழியாகப் பேரூந்துகள் மூலம் போக்குவரத்து செய்ய வசதிகள் ஏற்பட்டன. இதனால் தீவின் கல்வி, தொழில் என்பவற்றில் அதிக வளர்ச்சி ஏற்பட்டன. இங்கு ஒரு கத்தோலிக்க தேவாலயமும், ஒரு புரட்டஸ்தாந்து தேவாலயமும், நான்கு பிரதான இந்து ஆலயங்களுமுள்ளன. இத்தீவின் கரையோரங்களிலுள்ள மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். இங்கு மிசனறியினரால் ஆரம்பிக்கப்பட்ட கிறீஸ்தவ பாடசாலையொன்றும், கத்தோலிக்க பாடசாலை ஒன்றும் இருப்பதோடு, சைவ வித்தியாலயமொன்றும் 1912 ஆம் ஆண்டளவில் ஒரு சைவப் பெரியாரால் ஸ்தாபிக்கப்பட்டது.