மானிப்பாய்

இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் இலங்கையும் இந்தியாவும் இணைந்த நிலப்பரப்பாய் இருந்த வேளையிலே வனவாசம் செய்து கொண்டிருந்த இராமர் சீதையின் அருகில் அழகிய மான் ஒன்று உலாவக்கண்டு மையல் கொண்ட சீதை அதைப்பிடித்துத் தன்னிடம் தரும்படி நாயகனை வேண்டிநிற்க தன் மனைவியில் கொண்ட காதலினால்; இராமர் மானைத்துரத்திச் சென்றார். அந்த மாயமானும் இராமருக்கு போக்குக்காட்டி ஏமாற்றிக்கொண்டே பாய்ந்து ஓடுகிறது. களைப்படைந்த இராமபிரான் கெஞ்சும் குரலில் மானிடம் வேண்டுகோள் விடுக்கின்றார்.

மானே நிற்பாய்” என்பதுதான் அந்த வேண்டுகோள். மானே நிற்பாய் என்ற இடம்தான் மானிப்பாய் என்ற ஊராகும். அந்தவேண்டுகோளை விடுத்த இராமன் மானை நோக்கி அம்பினை எய்தார். அம்புபட்ட மான் அம்பெய்த இடத்திலுருந்து ஜந்து கிலோ மீற்றர் தொலைவில் இருக்கின்ற இளவாலையில் விழுந்தது. மானாக வடிவமெடுத்து வந்தவர் இராவணனின் மாமனாரான மாரீசன். எனவே மான் விழுந்த இடத்தினை மாரீசன்கூடல் என இன்றும் அழைக்கப்படுகிறது.

இராமன் அம்பெய்துவிட்டு சீதையை நோக்கித் திரும்புகையில் இலக்குமணனை சந்தித்து இலக்கமணனோடு சீதையை விட்டுச்சென்ற இடத்திற்கு வந்து கொண்டிருக்கும் பொழுது சீதையை இராவணன் தனது புஸ்பக விமானத்தில் ஏற்றிக்கொண்டு இலங்காபுரிக்கு திரும்பினான். இராமனும் இலக்குமணனும் இந்தியாவிற்குள் நுளைந்த பின் இராவணன் தான் சிவனிடம் பெற்ற வரங்களின் சக்தியால் பூகம்பத்தை உருவாக்கி இலங்கையையும் இந்தியாவையும் பிரித்தான்.

இராமனும் இலக்குமணனும் சீதையை காணாது சடாயு மூலம் இடையில் நடந்த சூழ்ச்சியை அறிந்து பின்னர் சீதையை மீட்கவே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் அணையிட்டு இராவணனைக் கொன்று சீதையை மீட்டான்.
இராவணனை கொன்றபின் அந்த தோசம் நீங்குவதற்கு திருக்கேதீச்சரம் காரைநகர்ச்சிவன்கோவில் யாழ்நகர்வில்லூன்றிப்பிள்ளையார் ஆலயம் போன்ற இடங்களில் பூசை செய்தார். இவ்விடங்கள் எல்லாம் ஆலயங்கள் உருவாக்கப்பட்டு இன்றும் வழிபடப்படுகின்றன. ஆனால் மானிப்பாயில் ஆலயம் அமைத்து பூசை நடைபெறாவிடினும் முதன் முதல் இலங்கையில் இராமபிரானின் பாதம் பட்ட புண்ணிய பூமிதான் மானிப்பாய் ஆகும். மானிப்பாய் என்ற ஊருக்கு பெயர் வந்த வரலாறும் இதுவாகும்.