அரிக்கன் சட்டி – மறந்து போன சொத்து

Sharing is caring!

ஆதியிலிருந்து வந்த மட்பாண்டப் பொருட்கள் சட்டி, பானை, முட்டி என்பன பெரும்பாலும் பாவனையில் இல்லை என்றே சொல்லலாம். கிராமங்களில் கூட உபயோகம் குறைந்துவிட்டது. மிக அருமையாக ஒரு சிலர் சட்டியில் சுவைக்காக சமையல் செய்வதுண்டு.

எமது கிராமத்தில் உள்ள வீடுகளில் சிலவற்றின் பரணிலிருந்து தேடி எடுத்த பொருட்களை எனது கமராவில் அடக்கிக் கொண்டேன்.

எங்கள் பாட்டிமார் சட்டியில் பால் காய்ச்சி அதைச் சுண்ட வைக்க அடுப்பில் உமியிட்டு தணலில் வைத்து விடுவார்கள். பால் நன்றாகச் சுண்டி சூடேறி உமி வாசம் கமழத் தொடங்கவும் இரண்டு கால் பூனைகளும் அடுப்புப் பிட்டியில் குந்திக் காத்திருக்கும். பால் ஆடை திரள்வதை ஆசையுடன் பார்த்திருக்க நாவில் சுவை ஏறும்.

வயல்நெல் அரிசிச்சாதத்தை மண்பானையில் சமைத்தெடுப்பர். இறக்கி வைத்து வெளியே சாம்பல் போகக் கழுவிய பின்னர் பானையைச் சுற்றி மூன்று குறியாக திருநீறு பூசி விடுவர். அன்னம் இடும்பாத்திரம் லஷ்மி என்பர்.

புட்டு, இடியப்பம் செய்வதற்கு வாய் ஒடுங்கிய பானைகள் இருந்தன. களி கிண்ட மாவறுக்க பெரிய மண் சட்டியும், பொரியல் செய்ய தட்டையான சட்டியும், கறிச்சட்டியும், உலைமூடியும் வைத்திருந்தனர்.

மண்சட்டித் தயிரின் சுவை நாக்கில் ஊறுகிறதா? மண்பானையில் தண்ணீர் வைத்திருப்பர் வெய்யிலுக்கு குடிக்க குளிர்மையாக இருக்கும்.

அரிசி கிளைய மண் அரிக்கன் சட்டியை பாவித்தனர். உட்புறம் வளையங்களாக வரி வடிவங்கள் வரையப்பட்டிருக்கும். தற்போது வெண்கலம், ஈயச் சட்டிகள் பாவனையில் உள்ளன. அரிசியில் கல் கலப்பிருக்கும் இதை நீக்குவதற்கு அரிக்கன் சட்டியில் இட்டு அளவாக தண்ணியை விட்டு மெதுவாக அசைத்து எடுக்கும் போது கல் பாரம் காரணமாக அரிக்கன் சட்டி உட்புறமுள்ள வரிகளில் நிற்க அரிசி மட்டும் தண்ணியுடன் வடிக்கப்பட்டு விடும். இது அரிசியை அரிக்க மட்டுமில்லை உழுந்து போன்ற ஏனைய தானியங்களில் உள்ள கல்லை நீக்குவதற்கும் பயன்பட்டது. இன்று கல் கலந்த அரிசியை சரியாக அரிக்காமல் பாவித்து கல்லடைசல் போன்ற உபாதைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எம் முன்னோர்களின் பாரம்பரியத்தில் நிறைய ஆரோக்கியமான விடயங்கள் காணப்பட்டது. நாம் அவற்றையெல்லாம் நாகரிகத்தின் பெயரால் மறந்து விட்டு தீராத நோய்களுக்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கின்றோம். மீண்டும் எம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை சிறிதளவேனும் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோமாக.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com