ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை

யார் இந்த கல்லடி வேலுப்பிள்ளை? இந்தக்கால சந்ததிகள் பலருக்கு இன்னும் தெரியாத ஒரு அறிஞர் அவரின் நினைவு நாளில் அவரைப்பற்றி சில குறிப்புகள்
இவர் ஈழமணித் திருநாட்டில் யாழ்ப்பாணத்தில் வயாவிளான் என்ற ஊரில் பிறந்து வாழ்ந்த
ஓர் ஆசுகவிப்புலவர் அவரின் வீட்டின் முன்னாள் பெரிய கல்லொன்று இருந்த காரணத்தினால் கல்லடி வேலன் என்ற அடைமொழியுடன் எல்லோராலும் அழைக்கப்பட்டார்.
தமிழை மொழியாக மட்டுமல்ல உயிராக நேசித்தார். அதனாலேயே இலங்கையில் தமிழில் பத்திரிகை வரவேண்டும் என்ற கொள்கையில் ஓர் அச்சகத்தை நிறுவி சுதேசமித்திரன் என்ற தமிழ் பத்திரிகையை வெளியிட்டு இலங்கையின் முதல் தமிழ் பத்திரிகை ஆசிரியர் என்ற பெருமையை பெற்றவர்.
அந்த தமிழ் மொழியின் சிறப்பை அதன் பொருளை தவறாக பயன்படுத்தியதற்காக நகைச்சுவையான பாணியில் உணர வைத்தவர். திருத்தி எழுத வைத்தவர் அதற்காக பலமுறை நீதிமன்றம் கூட சென்ற சுவாரசியமான சம்பவங்கள் உண்டு.
1. முன்னைய காலத்தில் சினிமா திரையரங்குகளில் நுழைவுக்கட்டணச் சீட்டில் கதிரை ஒன்றுக்கு 50 சதம் என்று போடுவார்கள் இவர் ஒரு முறை படம் பார்த்து முடிய கதிரையைத்தூக்கி தலையில் வைத்துக் கொண்டு வெளியே வந்தார் தியேட்டர் நிர்வாகிகள் தடுத்து வினவியபோது கதிரைக்கு காசு கட்டி ரிக்கட் எடுத்து விட்டேன் எனக்குத்தான் சொந்தம் என்று அடம்பிடிக்க இப்பிரச்சினை நீதிமன்றம் வரை போனது நீதிபதி இவரை ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டபோது சினிமா ரிக்கட்டில் காட்சிக்கு கட்டணம் போடவில்லையே ஒரு கதிரைக்கு இவ்வளவு என்று தானே போட்டுள்ளார்கள் ஆகவே காசு கட்டி அதற்கு பற்றுச்சீட்டும் பெற்றுள்ளேன் என்றாராம். அன்றிலிருந்து தான் ரிக்கட்டில் ஒரு காட்சிக்கு இவ்வளவு கட்டணம் என்று மாற்றமடைந்தது.
2. முன்னைய காலங்களில் புகையிரதக் கடவைகளில் சிறுதூரங்களுக்கு முன்பாக கோச்சி வரும் கவனம் என்று அறிவிப்பு போட்டிருப்பார்கள். இதுவும் தமிழில்லைத்தானே இவர் ஒரு கரிக்கட்டி கொண்டு போய் அதன் பக்கத்தில் “கொப்பரும் வருவார் கவனம்” என்று எழுதினார் இப்பிரச்சினையும் நீதிமன்றம் சென்றது நீதவான் கேட்டபோது ஆம் நான் தான் எழுதினேன் கோச்சி என்று தமிழில் அம்மாவை குறிப்பிடுகிறோம் அதுதான் அப்பாவும் வருவார் என்பதை கொப்பரும் வருவார் என்று எழுதினேன் என்றார். அவரின் வாதத்தின் நியாயத்தை உணர்ந்து விடுதலை செய்தார் அன்றிலிருந்து “புகையிரதம் வரும் கவனம்” என்று மாற்றமடைந்தது.
இது அவர் தமிழ் மொழியின் மேல் கொண்ட பற்றைக் காட்டுகிறதல்லவா? அதற்காக அவர் தமிழ் தமிழ் என்று வீர வசனங்கள் பேசவில்லை நகைச்சுவையாக பேசி தமிழ்ச்சுவையை பருகவைத்தார். அறியாவர்க்கு புரிய வைத்தார்.
இப்படி பல முறை நீதிமன்றங்களுக்கு சென்ற போது நீதிபதி இனி உமது கலைக்கறுப்பு இங்கே தெரியக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினாராம் .அதன் பின்னர் ஒருமுறை நீதிமன்றம் சென்ற போது தலையில் சிவப்பு சட்டியை மாட்டிக்கொண்டு சென்றாராம் நீதிபதி கோபமாக உம்மையெல்லவா இனிமேல் காணக்கூடாது என்று சொன்னேன் என்றபோது ஐயா என் தலைக்கறுப்புத் தெரியக்கூடாது என்றீர்கள் அதனால் தலையை சட்டியால்
மறைத்து வந்தேன் என்று கூறி நீதிபதி உட்பட அனைவரையும் சிரிக்க வைத்து விட்டார் இது அவரின் நகைச்சுவையுடன் சமயோசித புத்திக்கூர்மையையும் காட்டுகிறதல்லவா?
இவர் மட்டக்களப்பில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றபோது அவருக்கு ஒடியற்கூழ் விருந்தளித்தார்களாம் அதை பருகிவிட்டு உடனே ஒரு கவிதையை இயற்றி பாடினாராம் அதுவே எமது அரச பாடப்புத்தகத்திலும் “கொண்டாடினான் ஒரு ஒடியற்கூழ்” என்னும் தலைப்பாக வந்தது நான் படிக்கும் போது வந்தது ஞாபகம் இது அவரின் தமிழ் அறிவிற்கு அரசாங்கம் அளித்த அங்கீகாரம் ஆகும்.
இப்படி பல கவிதைகள் ,கட்டுரைகள், கதைகள் அறிவு சார்ந்த பல படைப்புகளை எமக்களித்த எமது ஈழத்து கவிஞர் ஆசுகவிப் புலவர் கல்லடியானின் சொல்லடியை இந்நாளில் நினைவு கூர்வதில் பெருமையும்
ஏன் கர்வமும் கூட(தமிழனாக) அடைகின்றேன்
#மனிதர்கள்_மூன்று_வகையினர்
. வாழும்போதே மறக்கப்படுபவர்கள்
. மறைந்தபின் மறக்கப்படுபவர்கள்
. மறைந்தும் நினைக்கப்படுபவர்கள்
நன்றி – தகவல் அல்வாய் நேசன்
Leave a Reply