ஆட்டுக்கல் – வழக்கற்றுப்போன பாரம்பரியம்

Sharing is caring!

தமிழர் பாரம்பரியத்துடன் ஒன்றிப்பிணைந்திருந்த ஆட்டுக்கல் பாவனை தற்போது வழக்கொழிந்து போய்விட்டது.

வடை, இட்டலி, தோசை போன்ற உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கு வேண்டிய அரிசி, மற்றும் தானியங்களை குழைபதமாக அரைப்பதற்கு தமிழர் பயன்படுத்தி கருங்கல்லினாலான இன்னோர் சாதனம். இதில் வட்டவடிவமும் உண்டு சதுர வடிவமும் உண்டு. இதனுள் தானியங்களை நீர் சேர்த்தே அரைக்க முடியும். ஆட்டுக்கல் மற்றும் குழவி என இரு பாகங்கள் இதற்கு உண்டு. ஆட்டுக்கல்லானது நடுவில் தானியங்களை போடுவதற்கு ஏற்றவகையில் வட்ட வடிவக் குழி அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் குழியைவிட சற்று சிறிய அளவில் வடிவமைக்கப்பட்ட குழவியானது கீழே அகன்றும் மேலே ஒடுங்கியும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

தற்போது கிறைண்டர் ஆதிக்கத்தால் ஆட்டுக்கல் பாவனை இல்லாமல் போனாலும் அதன் மாற்று வடிவமான மின்சாதனத்தில் இயங்கக் கூடியவாறு கருங்கல் கொண்டமைக்கப்பட்ட ஆட்டுக்கல் உணவகங்களில் இன்று பாவிக்கப்படுகிறது. என்னதான் கிறைண்டர் பாவித்து அரைத்தாலும் தோசை வடை செய்வதற்கு ஆட்டுக்கல் மூலம் அரைத்து செய்யப்படும் பொருட்களின் சுவையே தனிதான். அதனை அனுபவித்தவர்களுக்குதான் புரியும். அதனால்தானோ இன்றளவும் கருங்கல்லால் ஆக்கப்பட்ட இயந்திர ஆட்டுக்கல் பிரபல சைவ உணவகங்களில் பாவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியான பாவனையில் பொளிவுகள் தேய்மானமடைவதால் திரும்ப உழியால் பொளியப்படும். ஒரு கையால் குழவியை அசைத்து சுற்றும் போது மறுகையால் உழுந்துஇ அரிசி என்பவற்றை சிறிதளவு நீர் விட்டு விட்டு குழியை நோக்கி தள்ளுவதன் மூலம் சீராக அரைக்க முடியும்.

ஆட்டுக்கல் தொடர்பான ஒரு அனுபவப்பகிர்வு …

ஆட்டுக்கல் மூலம் மாவாட்டுவது பெரிய கலை….முதலில் உரலை நன்றாக கழுவி அதில் மண் மற்றும் தூசுக்களை அப்புறப்படுத்தி விட்டுஇ அம்மா முட்டிக்கு மேல் புடவையை இழுத்து சொத சொத என மடியில் புடவையை சேகரித்து வழித்துக்கொண்டு ஆட்டுக்கல் எதிரில் உட்காருவாள்…  பொதுவாக திருணம் ஆன பெண்கள் ஆட்டக்கல்லில் மாவாட்டும் போது வயதுக்கு வந்த பக்கத்து வீட்டு பெண்கள் உதவிக்கு வருவார்கள்…

முக்கியமாக மாவு ஆட்டும் போது மாவோடு சேர்த்து ஊர் கிசு கிசுப்புகதைகளும் உளுந்து மற்றும் அரிசி மாவோடு சேர்த்து அதவும் அரையும்….அதுவும் திருமணம் ஆகாத பக்கத்து வீட்டு வயதுப் பெண்களுக்கு டிவி இல்லாத அந்தகாலகாட்டங்களில் அந்த கிசு கிசு கதைகள் நல்ல பொழுதுபோக்கு….

முதலில் அம்மா உளுந்தை அரைக்க முனைவாள்…யாரும் இல்லாத நேரத்தில் அம்மா மாவு அரைக்க…. நான் மாவு அரைபட தள்ளிவிட்டுக்கொண்டு உதவி செய்வேன்… மாவை தள்ளி விடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல… கை விரல்கள் சிக்கிக்கொள்ளாமல் தள்ளி விட வேண்டும்.. பொதுவாக அம்மா எனக்கு சினிமா கதைகள் சுவாரஸ்யம் பொங்க சொல்லிக்கொண்டு இருப்பாள்…
கதை சுவாரஸ்யத்தில் அம்மா வாயை பார்த்துக்கொண்டே நிறைய முறை கை விரல்களை அரைபடும் இடத்தில் விட்டு அம்மாவிடம் வாங்கி கட்டிக்கொண்டு இருக்கின்றேன்… மாவு அரைக்கும் நேரங்கள் பொதுவாக மாலை நேரங்களாகத்தான் இருக்கும்….
ஆட்டுக்கல்லில் கடுமையாக வேலை வாங்கும் ஒரே விஷயம் அரிசி மாவு அரைப்பதுதான்.. காரணம் அரிசி எளிதில் அரையாது… வேலை வாங்கிக்கொண்டே போகும். ஆறு மணிக்கு மேல் வேலை இழுத்துக்கொண்டு போனால்… நுளம்பு பின்னி எடுக்க ஆரம்பித்து விடும்.. அதனால் வேலையை சூரியன் மறைவதற்குள் முடித்தாக வேண்டும் என்று அம்மா வேர்வை சிந்த மாவு அரைப்பதில் வேகம் கூட்டுவாள்..
ஒரு கையால் மாவை லாவகமாக தள்ளிக்கொண்டு போய் மாவு அரைக்கும் அம்மாவுக்கு முன் பக்கம் முகத்தில் விழுந்து இம்சை கொடுக்கும் முடிகளை இழுத்து அவள் கேட்காமலே காது பக்கம் அனுப்பி வைப்பேன்…மாவு கையோடு எதையும் சரி படுத்த முடியாது…

மாவு அரைக்கும் போது யாராவது வீட்டுக்கு ஆண்கள் வந்தால் மார்பு தெரிய சேலை தழைந்து இருக்கும் போது அதை சரிப்படுத்துவதில் இருந்துஇ கைக்கு எட்டாமல் முதுகில் ஊரும் மற்றும் நமைச்சல் ஏற்படுத்தும் இடங்களை அம்மா சொல்ல சொல்ல….சீப்பு வைத்து அந்த இடத்தை சொறிந்து விடுவேன்…

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com