மாட்டு வண்டி சவாரி

Sharing is caring!

மாட்டு வண்டியின் பாவனையும் அது தந்த சேவையும் சொல்லி மாளாது, 1980 களின் நடுப்பகுதி வரை எங்களூரில் கிட்டத்தட்ட எல்லா விவசாயிகளின் வீடுகளிலும் மாட்டுவண்டி தான். மாட்டு வண்டி சவாரி ஒரு தனி அனுபவமானது.

பங்குனித்திங்கள் காலத்திலும் மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் ஆலத்திற்கு மாட்டுவண்டிகள் புடை சூழ யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசத்திலிருந்தும் மக்கள் வண்டி கட்டி வந்துபோன காலமும் என் நினைவில் இருந்து நீங்காதவை.

“கனதூரம் போகோணுமெல்லே, என்னத்துக்கு நடை பயிலுறாய்? வேகாமப் போவன்” என்று தன் மாட்டோடு பேசிக் கையில் இருந்த தன் நீண்ட பூவரசம் தடியால் மாட்டின் முதுகைத் தட்டிக் கொடுத்து, இஞ்சை, இஞ்சை என்று மாட்டைப் போகும் திசை நோக்கித் திருப்புவார் மாட்டு வண்டிற்காரர். வாயில் நுரை தள்ள, என் கடன் பணி செய்து கிடப்பதே என்று மாடு வேகமெடுக்கும்.

சிலவேளைகளின் தன் சொந்த விசயங்களை மாடுகளுக்குச் சொல்லிக்கொண்டே மனத்தை ஆற்றிக்கொண்டுபோகும் வண்டிக்காரர்களையும் பார்த்திருக்கின்றேன். மனிதர்களுக்கு மட்டுமல்ல மாடுகளுக்கும் செல்லும் வழியில் இளைப்பாறி நீராகாரம் அருந்திப்போக வசதியாக முக்கிய சந்திப்புக்களில் நீர்த்தொட்டிகள் இருந்த காலமும் என் ஞாபக இடுக்குகளில் இருக்கின்றது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்குச் சமீபமாகவும் முனியப்பர் கோயிலடியிலும் இவை இருந்ததாக நினைப்பு.

எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோயிலுக்கு ஆறரைப் பூசைக்கு வண்டி கட்டி வந்து ஐயர் தந்த திருநீறையும் குங்கும சந்தனத்தையும் காளைகளின் நெற்றியில் தடவித் தன் வேலையைத் தொடங்கும் விசுவலிங்கமும், எங்கள் புகையிலைத் தோட்டத்திற்கு குழை தாக்கும் வேலைக்காகப் பூவரசம் இலை நிரவிய மாட்டுவண்டி சகிதம் தோட்டம் வரும் மாரிமுத்துவும் மாட்டுவண்டிக்காலத்தின் சில சாட்சியங்கள். 80 களின் நடுப்பகுதியில் இருந்து நவீனத்தின் ஆக்கிரமிப்பில் லாண்ட்மாஸ்டர் என்ற பதிலீடு மாட்டுவண்டிக்காலத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டியாக வந்து இப்போது முழு அளவில் ஆக்கிரமித்துவிட்டது என்றே சொல்லலாம்.

எங்களூர்த் தெருக்களில் ஜல் ஜல் என்று கழுத்துமணியெழுப்பி குழம்பொலிகள் சந்தம் சேர்த்த மாட்டுவண்டிகளுக்குப் பதில் லாண்ட் மாஸ்டரின் கர்ணகொடூரச் சத்தம். அடுத்த தலைமுறைக்கு மாட்டுவண்டிகள் காட்சிப் பொருளாகும் காலம் நெருங்கிவிட்டது.

இந்த நேரத்தில் மாட்டு வண்டியில் பூட்டப்படும் மாடுகள் தருவிக்கப்பட்ட வரலாற்றையும் சொல்லவேண்டும். வடக்கன் மாடுகள் என்றவகை மாடுகளே இதற்கெனத் தனித்துவமான பாவனையில் இருந்தவை. வடக்கன் மாடுகள் என்ற பதம் வரக்காரணம் ஈழத்தின் வடக்கே உள்ள இந்தியாவிலிருந்து தான் இவை முன்னர் தருவிக்கப்பட்டவை. இது பற்றி மேலதிக விபரங்களை நான் தேடியபோது சிட்னியில் தற்போது வாழும் வல்வெட்டித்துறைச் சேர்ந்த இ.சிவகுரு தாத்தா தந்த தகவல்களின் படி 1940 களின் தான் சின்னப்பையனாக இருந்த காலப் பகுதியில் பெரியோர்கள் சொன்ன கூற்றுப் படி வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, காங்கேசன் துறை போன்ற இறங்கு துறைகள் ஈழத்தின் பாரிய துறைமுகங்களாக விளங்கியவையாம். இந்த இறங்குதுறைகளுக்கே 40 களுக்கு முந்திய காலகட்டத்தில் இப்படியான தமிழ்நாட்டிலிருந்து மாடு தருவிக்கும் முறைமை இருந்ததாகச் சொல்லுகின்றார்.

சலங்கு என்ற பாய்மரக்கப்பல்கள் உதவியுடன் ஈடுபட்ட இந்த இறக்குமதி வர்த்தகம் வல்வெட்டித்துறையில் காற்றடிக்கின்ற காலத்தில், இறக்குமதியாகும் பொருட்களோடு ஊர்காவற்துறைத் துறைமுகத்தில் பாதுகாப்புக்காகக் கட்டிவிடும் பழக்கம் இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது. இப்படி ஊர்காவற்துறைக்கு மாற்றலாகும் முறைமை “ஒதுக்கானஇடம்” தேடிப் போவது என்று சொல்லப்பட்டுவந்தது.

தில்லைச்சிவனின் “அந்தக்காலக்கதைகள்” என்ற நூலை தட்டிப்பார்த்தேன். 1928 ஆம் ஆண்டு சரவணை என்ற தீவுப்பகுதியில் பிறந்த அவரின் பிள்ளைப்பிராய நினைவுப் பதிவாக இருக்கும் அந்நூலில் இப்படிக் கூறுகின்றார்.

“அப்பொழுதுதான் புதிதாக வாங்கிக் கொண்டுவந்த இரண்டு வடக்கன்மாட்டுகாளைகள். ஊர்காவற்துறையில் உள்ள மாட்டுகாலைக்கு இந்தியாவில் இருந்து கப்பலில் இருந்து வந்து இறங்கி நின்றவை அவை. அண்ணாமலை மாடுகள், வெள்ளை வெளேரென்ற நிறம். நன்கு கொழுத்ததும் தளதளவென்ற மினுமினுப்பும் கொண்டவை. ஈ இருந்தால் வழுக்கி விழுந்து விடக்கூடிய வழுவழுப்புள்ள காளைகளின் கொம்புகளோ, நீண்டுயர்ந்து கூடு போன்றவை..” அந்தக்காலத்த்தில் ஒரு ஆயிரம் ரூபாவுக்கு முன் பின்னாக விலை கொடுத்து எனது பாட்டனர் வாங்கிக் கொண்டு வந்தார், இப்படி நீண்டு செல்கின்றது அந்த நினைவுப்பகிர்வு.

வரதரின் மலரும் நினைவுகளில் கூட இதையே இப்படிச் சொல்கின்றார்.

அண்ணாமலை மாடுகள் தென்னிந்தியாவிலுள்ள “திருவண்ணாமலை” என்ற இடத்திலிருந்து காலத்துக்குக் காலம் யாழ்ப்பாணத்துக்கு இறக்குமதி செய்யப்படும். “உரு” என்று சொல்லப்படும் பெரிய வள்ளங்களில் அந்த மாடுகள் இந்தியாவில் ஏற்றப்பட்டு இங்கே ஊர்காவற்துறையில் இறக்கப்படும். இப்படி மாடு வரும், காலத்தில், அவ்ற்றை வாங்குவோரும், தரகர்களும், சும்மா விடுப்புப்பார்க்க வருபவர்களுமாக ஊர்காவற்துறை திருவிழாக்காலம் போலக் களை கட்டிவிடும்.

நீலாவணனின் கவியாழத்தின் விசாலத்தைப் பகிர எனக்கு இன்னொரு பதிவு தேவைப்படும். எனவே அவரின் கவிப் படையலில் தோன்றிய முத்து “வண்டிக்காரா” கவிதையையும் அது ஈழத்து மெல்லிசைப் பாடலாக எப்படி மாறியது என்பதையும் செவியில் நனைக்க இங்கே தருகின்றேன். இந்த மூலக்கவி ஈழநாடு பத்திரிகையில் 21.06.1965 ஆம் ஆண்டு வெளிவந்தது.

கவி வரிகளைப் பாருங்கள் எவ்வளவு அழகுணர்ச்சி தென்படுகின்றது. என் மழலைப் பருவத்தின் இலங்கை வானொலி அனுபங்களில் மெல்லிசைப் பாடலாக வந்த இந்தப் பாடல் காலம் கடந்தும் அதே சுவை குன்றாது என் ரசனையில் பதிவாகி இருக்கின்றது. கண்ணன் – நேசம் என்ற புகழ் பூத்த ஈழத்து இரட்டையர்களின் இசையும், மா. சத்தியமூர்த்தியின் குரலும் பாடலுக்கு அணி சேர்க்கின்றது. பாடலில் கலந்து வியாபித்திருக்கும் புல்லாங்குழல் போன்ற தேர்ந்தெடுத்த வாத்தியங்கள் பாடலைச் சேதாராம் பண்ணாமல் நம் தாயகத்துக் கிராமியச் சூழ்நிலைக்கு மனதைத் தாவவிடுகின்றன.

ஓ என் அருமை வண்டிக்காரா
ஓட்டு வண்டியை ஓட்டு
போவோம் புதிய நகரம் நோக்கி
பொழுது போமுன் ஓட்டு

காவில் பூவில் கழனிகளெங்கும்
காதல் தோயும் பாட்டு!
நாமும் நமது பயணந் தொலையக்
கலந்து கொள்வோம் கூட்டு! – ஓட்டு

ஓ என் அருமை வண்டிக்காரா….

பனியின் விழிநீர் துயரத் திரையில்
பாதை மறையும் முன்னே
பிணியில் தேயும் பிறையின் நிழல் நம்
பின்னால் தொடரும் முன்னே – ஓட்டு

ஓ என் அருமை வண்டிக்காரா
ஓட்டு வண்டியை ஓட்டு
போவோம் புதிய நகரம் நோக்கி
பொழுது போமுன் ஓட்டு

நன்றி – http://kanapraba.blogspot.com இணையம்

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com