அத்தியார் அருணாசலம்

1961 ம் ஆண்டு புரட்டாதி இருபத்திரண்டாம் நாளில் இறையடி சேர்ந்த அத்தியார் அவர்களின் நினைவு பல்லாண்டுகள் பல மாற்றங்கள் உண்டாகியும் மறையாமல் உள்ளமையூடாக அவரின் சிறப்பை உணர முடிகிறது. வலி கிழக்கில் சைவத்தமிழ் கல்வியை வளர்த்தெடுத்தலில் முன்னோடியாக விளங்கியோர் இருவர். ஒருவர் புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரியின் ஸ்தாபகர் மளவராயர் கந்தையா. மற்றையவர் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஸ்தாபகர் முதலியார் அத்தியார் அருணாசலம். அத்தியார் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். திறமையால் உயர்ந்து கொழும்பு கொமர்சல் கொம்பனியில் உத்தியோகம் செய்தவர். இந்நிலையில் நீர்வேலியில் சிவசங்க பண்டிதரால் ஸ்தாபிக்கப்பட்டு அவர் மகன் சிவப்பிரகாச பண்டிதரால் வளர்க்கப்பட்டு இயலாமை காரணமாக நடராச பண்டிதரால் கத்தோலிக்க கிறிஸ்தவ மிசனுக்கு விற்கப்பட இருந்த சிவப்பிரகாச வித்தியாசாலையை அத்தியார் கடனுக்கு பணம் பெற்று விலைக்கு வாங்கினார்.

நீர்வேலியில் அத்தியார் இந்துக் கல்லூரியை ஸ்தாபிக்காது இருந்திருப்பின் நீர்வேலியில் இன்று வரை நிலைத்துள்ள சைவத் தமிழுக்கு பேரிழப்பும் வீழ்ச்சியும் உண்டாகியிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே காலத்தினால் இவர் செய்த உதவி மிகப் பெரியது. நேர்மையும் விடா முயற்சியும் நிர்வாக வன்மையும் கொண்டவர் அத்தியார். ஆவர் தனக்கே உரிய முதுசம், சீதனம், சொத்து இவைகளை விற்றும் ஈடுவைத்தும் கல்லூரியை நிறுவினார் என்பது அவர் உயர் உள்ளத்தைக் காட்டுகிறது. ஒரு பெரிய கல்லூரியின் ஸ்தாபராகிய அவரது வாழ்வு ஒரு குடிசையிலேயே காணப்பட்டது எனலாம். தன் இரத்தத்தை வியர்வையாக்கி உருவாக்கிய கல்லூரியை முடிவில் அரசிடம் ஒப்படைக்க வேண்டியேற்றப்பட்டது. இந்நிலையில் மனைவி தங்கம்மா பெயரில் ஒரு பெண்கள் கல்லூரி நிறுவவும் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது இயலாமல் போயிற்று. அத்தியார் கந்தபுராண படனத்திலும் நிகரற்றவர் எப்போதும் கந்தபுராண திருநூல் அவரது கைகளில் காணப்படும் தவிர நீர்வேலி சிகரெட் புகையிலை தொழிலாளர் சங்கம், வாசிகசாலை என்பவற்றையும் இவர் நிறுவினார். நீர்வேலி கிராம அபிவிருத்தி சங்கத் தலைவராகவும் விளங்கினார். ஆத்தியார் பற்றி சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா தெரிவிக்கும் போது இம்மாபெரும் கல்லூரியை தன் சொந்த பணத்தில் நிறுவிய தருமச் செயலுக்காக இலங்கை அரசு முதலியார் அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.