அளவெட்டி கனகசபை புலவர்

வைத்தியநாதர் தம்பிரானுடைய வழித்தோன்றல் தந்தையிடம் சுதேச வைத்தியமும் டாக்டர் உவாட்டிடம் ஆங்கில வைத்தியமும் கற்று ஆங்கில சுதேச வைத்தியராக இருந்தார்.  கிறிஸ்தவரானவர்.  1751ல் விருத்தப்பாக்களைக் கொண்ட திருவாக்கு புராணத்தை பாடியுள்ளார்.  ஒரு சொல் பல பொருள் தொகுதி என்னும் நிகண்டையும் பல தனிப் பாடல்களையும் யாத்துள்ளார்.

சிங்கையாரிய சக்கரவர்த்திகள் ஆட்சி முடியும்வரை ஈழத் தமிழகத்தில் சைவ சமயச் சார்புடைய இலக்கியங்கள் தோன்றின.  பொர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்தில் சைவச் சார்புடைய இலக்கியங்கள் மட்டுமன்றி கிறிஸ்தவ, கத்தோலிக்க மத இலக்கியங்களும்; தோன்றின.  இக்கால இலக்கியங்கள் பற்றி பேராசிரியர் கா.சிவத்தம்பி பின்வருமாறு கூறியுள்ளார்.  “1619 – 1796 வரையுள்ள காலகட்டத்தில் கிறிஸ்தவம் தமிழரிடையே பரவுவதைக் காணலாம்.  இக்காலகட்டத்திலேயே போர்த்துக்கேயர் கத்தோலிக்க மதத்தினையும் ஒல்லாந்தர் புரட்டஸ்தத் கிறிஸ்தவத்தினையும் பரப்பினர்.  இவ்வாறு பரப்பும்போது தமிழிலக்கிய பாரம்பரியத்தின் சிற்றிலக்கிய வடிவமாக போற்றப்படும் அடிநிலை மக்கள் தொடர்புடைய இலக்கிய வடிவங்களை கையாண்டுள்ளனர்’.  மதம் மாறிய தமிழர்கள் தம் புதிய மதச் சிறப்புக்களை தமது பாரம்பரிய இலக்கிய வடிவங்களைக்கொண்டு ஆக்கினர்.  (ஈழத்தில் தமிழ் இலக்கியம் 1978)

சைவர்களாய் இருந்து மரபுவழித் தமிழ் பயின்ற சிலர் மரபுவழி இலக்கிய வடிவில் கிறிஸ்தவ இலக்கியங்களை படைத்தனர்.  வலிகாமம் வடக்கில் குறிப்பாக தெல்லிப்பளையில் வாழ்ந்த சிலரை இவ்வகையில் காணமுடிகின்றது.