இணுவை தந்த தவயோகி வடிவேல் சுவாமி

இணுவை தந்த தவத்திருயோகிகளுள் வடிவேல் சுவாமிகளும் ஒருவராவார். பெரிய சந்நியாசியார் வாழ்ந்த காலத்திலேயே அவரினைத் தெய்வமாகக் கொண்டு வாழ்ந்தவர் காசிநாதர் என்ற இயற்பெயருடைய சன்னாசிக்கந்தர். கந்தப்பருக்கு சின்னக்குட்டியை திருமணம் செய்து கொடுத்தவரும் பெரிய சந்நியாசியாரே. கந்தப்பருக்கு தொடர்ந்து ஐந்து பெண்பிள்ளைகள் பிறந்தனர் ஆறாவதாக பிறந்த குழந்தையே ஆண்குழந்தை அச்செய்தியை பெரிய சந்நியாசியிடம் தெரிவிக்க வடிவேல் எனப் பெயரிட்டார். ஒன்பது வயது குழந்தையை சுமந்து கொண்டு கந்தப்பர் மருதனார் மட காய்கறி சந்தைக்கு சென்ற வேளை அங்கேயே யோகர் சுவாமியுடைய தரிசனமும் கிடைத்தது. “பள்ளிப் படிப்புடன் கந்தர் மடத்திலுள்ள வேதாந்த மடம் சென்று சமய சாத்திரம் படி” என்று கட்டளையிட்டு சென்றார். பரமானந்த வல்லி ஆலயத்திற்கு  சிவாலயத் தொண்டும் செய்தார். கந்தர் மடத்திலே குருமூர்த்தியாக இருந்த மகாதேவசுவாமியிடம் சமய சாஸ்த்திரங்களையும் கற்றார். தலையில் குடுமியும் கழுத்திலே உருத்திராட்சமும் அணிந்து காணப்பட்டமையினால் இவரினை சுவாமி என அழைத்தனர். இவருடைய பணியினாலேயே பரமானந்த வல்லி ஆலயமும் உயர்வு பெற்றது. இவர் எல்லா இடமும் தமது பணி இடம்பெற வேண்டும் என்பதற்காக பல ஆலயம் சென்று பிரசங்கங்களை மேற்கொண்டார். அளவெட்டி சதானந்தா வித்தியா சாலையில் பண்ணிசை வகுப்பும் நடாத்தி வந்தார். நயினை முத்துச் சுவாமிகள் இவருடைய வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். நயினை முத்துச் சுவாமிகளின் வேண்டுகோளுக்கிணங்கவே காரைக்கால் ஆலயம் சிறக்கப் பெற்று பூசை வழிபாடுகள் நடாத்தப்பட்டு வருகின்றன. கொழும்புத்துறை யோக குருநாதனின் வேண்டுகோளுக்கிணங்க கிளிநொச்சிக்கு சென்றார். ஜெயந்தி நகரிலே  தமது தீட்சா குருவை நினைவு கூர்ந்து மகாதேவ ஆச்சிரமம் என்ற பெயரில் ஒரு தவச்சாலையை நிறுவினார். இன்நிறுவன மூலம் பன்முகப்படுததப்பட்ட தொண்டுகள் நடைபெற்று வருகின்றன. கிளிநொச்சி புதுக்குடியேற்ற மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கினார்.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்