ஈழத்து எழுத்தாளர் கே.எஸ். பாலச்சந்திரன்

ஈழத்து எழுத்தாளர் கே.எஸ். பாலச்சந்திரன் ஈழத்திலுள்ள பிரபலமான கலைஞர்களுள்  தனியான முத்திரை பதித்து உலகத்தின் மூலை முடுக்கெங்கும் அறியப்பெற்ற கலைஞர். அவரின் இன்னுமொரு படைப்பான ஒரு நாவல் கனேடிய மண்ணில் வெளிவந்துள்ளது. மகிழ்ச்சியான விடயம், அதற்கு காரணங்கள் பல, முக்கியமாக  குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக ஒன்று என் மண்ணில் பிறந்து ஒரு பிரபல்யமான கலைஞனின் படைப்பைப் பற்றியும் அவரைப் பற்றியும் என் குரலாலும் ஒரு பதிவிடக் கிடைத்த சந்தர்ப்பம் மற்றது உலகின் பிரபல்யமான ஒரு கலைஞன் வரலாற்றில் இடம்பிடிக்கும்வகையில் ஈழத்தின் நினைவுகளை நூலுருவாக்கி எதிர்கால சந்ததியினருக்கு வழங்கும் ஒரு காத்திரமான பங்களிப்பு

ஒருகாலத்தில் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் குரல் “அண்ணைரைட்” தனி நடிப்பு நகைச்சுவை நாடகத்தின் மூலம் உலகெங்கும் அறியப்பெற்றவர், நாடகம் வெளி வந்த காலங்களில் எல்லோர் வீடுகளிலும் வானொலிப்பெட்டியில் பென்னம் பெரிய சத்ததுடன் எப்போதும் ஒலிக்கக் கேட்கும் முக்கிய ரசனை நிகழ்ச்சி இது . அதைக்கேட்டுகேட்டு வயிறு குலுங்கக்குலுங்க சிரித்த அந்த நாடகத்தால் எல்லோர் நெஞ்சங்களிலும் இடம்பிடித்து விட்ட அற்புதமான கலைஞர்,
அதைவிட“ஓடலிராசையா, வாத்தியார் வீட்டில், மு.மு.மு.மூத்ததம்பி, செய்திகளில் நகைச்சுவைகள் கலந்து வாசித்தபடியே அமையப்பெற்ற ஒரு நடிப்பு”, என்றவாறாக அவரின் தனி நடிப்பில் அவரால் வெளிக்கொணரப்பட்ட நாடகங்கள் பல,
இதைவிட இவர் இயக்கிய நாடகங்கள் ஏராளம், அண்மையில் இவர் இயக்கிய “தூரத்து சொந்தம்” என்ற நாடகம் எம்மவர்களின் உணர்வுகளை படம் பிடித்துக்காட்டியதாக அமைந்தது.

இதே போல ஈழத்தின் திரைப்பட வரலாற்றிலும் முக்கியமான இடம் இவருக்கு உண்டு, “வாடைக்காற்று, நாடு போற்ற வாழ்க, சர்மிளாவின் இதய ராகம் மற்றும் ஜீவ நதி” இவர் நடித்த திரைப்படங்கள், இவற்றை விட ஒரு ஆங்கிலத் திரைப்படத்தில் கூட நடித்திருந்தார் என்று அறிந்திருந்தேன், ஆனால் இப்போது அந்த திரைப்படத்தின் பெயர் எனக்கு சரியாக நினைவு வராததால் குறிப்பிட முடியவில்லை,

கலையுலக வாழ்வில் நாற்பத்தைந்து ஆண்டுகளை தாண்டப்போகும் கே.எஸ்.அவர்கள் அடிக்கடி சொல்லும் விடயம் என்னவென்றால் ”நாடகத்துறையிலும் கலையுலக வாழ்விலும் என்னாலான பணிகள் நிறையவே சாதித்ததாக உணர்வதாகவும் இவற்றை விட எழுத்துலகலிலும் ஏதாவது படைக்க வேண்டும் என்ற ஆவல்” இருப்பதாக குறிப்பிடுவார், தன் நாடகத்தினாலும் கலைத்துறையாலும் கிடைத்த அனுபவங்களையும் அதன் இன்னும் பல விடயங்களையும் நூலுருவாக்க வேண்டும் என்ற ஆசையை அடிக்கடி வெளிப்படுத்துவார். தன்னோடு தன் கலையம்சங்கள் நின்றவிடாது இளைய தலைமுறைக்கும் அதை வழிகாட்டி அவற்றை வாழ வைக்கவேண்டும் என்பதில் கே.எஸ் அவர்கள் மிக ஆர்வமானவர் என்றால் மிகையாகாது. ஆகையால் அனுபவங்களை எழுத்துலகில் பதிந்துவிடுவதன் மூலம் அவை எக்காலத்திலும் அறியக்கூடியதாக இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அந்த வகையில் கே.எஸ்.அவர்களின் ஒரு படைப்பான நாவல் வெளிவரத்தயாராக இருக்கிறது, வடலி வெளியீட்டகத்தாரின் வெளியீடாக வெளிவரும் இந்த நூலுக்கு கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ”கரையத்தேடும் கட்டுமரங்கள் ”என்று பெயரிட்டிருக்கிறார், முற்றிலும் ஈழத்து நினைவுகளைச் சுமந்து வரும் இந்த நாவலி்ல் முக்கியமாக கடலோடிகளின் கதை சொல்லும் கதையாக வருகிறது, நாவலில் அங்கங்கு தன் அனுபவங்களை நாவலுக்குரிய பாங்கிலே தனக்குரிய பாணியில் எடுத்து செல்லும் அழகு மிகச்சிறப்பு,

இவரைப்பற்றியும் இந்த நூல் பற்றியும் உலகப்பிரசித்திபெற்ற அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் அவர்கள்
ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு காலச் சுவடாய் நிலைக்கக்கூடிய படைப்பு இது. புலம் பெயர்ந்த பின்னரும் தாயகத்தின் நினைவுகளைச்சுமந்து வாழும் ஒரு படைப்பாளியின் நினைவுச்சித்திரம்” என்று குறிப்பிடுகிறார்

அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்

”வானொலி, தொலைக்காட்சி, மேடை, திரைபடக்கலைஞர், நேர்முக வர்ணனையாளர்,
திரைப்படஇயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித்தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட திரு கே எஸ் பாலச்சந்திரன், மிகச்சிறந்த வானொலி மற்றும் மேடை நாடகங்களையும் படைத்த எழுத்தாளர். தன்னெழுத்தால், பயன்படுத்தும் சொற்களால், வரிகளால் வாசகன் உள்ளத்தில் காட்சிகளை விரியச்செய்து அந்த சூழலுக்கே அழைத்துச் செல்ல கூடிய ஆற்றல் கொண்டவனே எழுத்தாளன் ஆகமுடியும், இவரது எழுத்துக்களுக்கு அவ் ஆற்றல் உண்டு.
இவரது எழுத்தாற்றல் நாவல் இலக்கியத்துறையிலும் காத்திரமாய் வெளிப்பட்டுள்ளது, கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் படைத்த, கே எஸ்.பாலச்சந்திரன் அவர்களது பெயரும் வரலாற்றில் தடம் பதிக்க வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்துகிறார்.

இதைப்பற்றி கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்

”தினமும் வாழ்வுக்காக அலைகளோடு
ஜீவமரணப்போராட்டம் நடத்தி
மீளும் அல்லது தோற்றுப்போகும் ஒரு சமூகத்திடம் எனக்குள்ள நியாயமான மதிப்பு,
இரக்கமும் தான் என்னை இந்த நாவலை எழுத்த்தூண்டியிருக்கிறது “

என்று குறிப்பிடுகிறார்,

ஈழத்தில் தம் வாழ்வுக்காய் வாழ்வாதார தொழிலோடு வாழ்வு முழுவதும் வாழ்ந்து அதனால் அனுபவிக்கும் மகிழ்ச்சிகள், தோற்றுப்போவதால் கிடைக்கும் சோகங்கள் என்று அந்த சமூகத்தின் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நாவல் படைப்பாக கே.எஸ்.அவர்கள் தருகிறார், முற்றிலும் கிராமத்தின் மண்வாசனைப்படைப்பு.

அப்படியாக கலைஞர் கே.எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கலை மற்றும் எழுத்துலகின் பயணத்தில் கரையத்தேடும் கட்டுமரங்கள் என்ற நாவலும் வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையில் அமையும் என்பதில் சந்தேகத்துக்கேயிடமில்லை,

“பகலும் இரவும் முத்தமிட்டுக்
கொள்ளும் அந்த
மாலைப்பொழுதில்……

மேற்கிலிருந்து அடித்த
வாடைக்கச்சான் காற்று,

கடற்கரையை
பார்த்துக்கொண்டு நின்றிருந்த
அந்தோனியின் பொத்தான்கள்
இல்லாத சேர்ட்டை பின்னே
தள்ளி நெஞ்சுக்கூட்டை
குளிரினால் சில்லிடவைத்தது………

இவை கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவலிலிருந்து ஒரு சில வரிகள்

By – Shutharsan.S

நன்றி- மூலம்- கரவைக்குரல் இணையம்