எழுத்தாளர் புதுமை லோலன்

புதுமை லோலன்வண்ணார்பண்ணை கலட்டி அம்மன் கோவிலடியை வாழ்விடமாகக் கொண்ட எழுத்தாளர் புதுமை லோலன் யாழ் நாவலர் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை யாழ் வைத்தீஸ்வரா வித்தியாலயத்திலும் கற்று பலாலி அரசினர் ஆசிரிய கலாசாலையில் பயின்று பயிற்றப்பட்ட ஆசிரியராக பத்தொன்பது வயதில் வெளியேறி அரச பாடசாலைகளில் கற்பித்து, யா/ஆனைக்கோட்டை தமிழ்க் கலவன் பாடசாலையில் அதிபராக இருந்து ஓய்வு பெற்றவர். புதுமை லோலன் அவர்களின் இயற் பெயர் கந்தையா கந்தசாமி (தோற்றம் – 1929) புதுமை லோலன் என்ற புனைபெயரில் இலக்கிய உலகில் சஞ்சரிக்கும் இவர் சிறந்த மேடைப் பேச்சாளர். 1950, 1960 காலப்பகுதிகளில் ஈழத்து இலக்கியத் துறைக்குள் சங்கமித்த இவர் இலங்கை, இந்திய பத்திரிகைகளில் நிறையவே எழுதி வந்தவர். 1956 ம் ஆண்டில் சுதந்திரன் வாரப் பத்திரிகையில் ”அப்பே லங்கா”  என்ற இவரின் சிறுகதை வெளிவந்த போது அவரை ஒரு இன வாதியென முத்திரை குத்தினர். புதுமை லோலன் சிறுகதைகளில் பல கௌதம புத்தரோடு சம்பந்தப்பட்ட ஒழுக்க விடயங்களை வெளிப்படுத்தி உள்ளன. சிந்தனை, அவதாரம், அழகு, மயக்கம், புத்தன், பரிசு, கௌதமி, மாகந்தி ஆகியன அவ்வகைச் சிறுகதைகளாகும்.

இவர் சிறுகதை எழுத்தாளராகவும், சிறந்த மேடைப் பேச்சாளனாகவும், மட்டும் இருக்கவில்லை. ஏமாற்றம் (கருகிய ரோஜா) என்ற குறுநாவலையும், தாலி, நிலவும் பெண்ணும் என்னும் நாவல்களையும்  எழுதியுள்ளார். ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அமரர் வரதர் நடாத்திய ”ஆனந்தன்” என்ற திங்கள் இதழின் இணை ஆசிரியராகவும், ஒன்றரை ஆண்டு காலம் ”தமிழரசு” என்ற அரசியல் வாரப் பத்திரிகையின் ஆசிரியராகவும், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இலங்கை எழுத்தாளர் சங்கம், என்பவற்றின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இனவொடுக்கலின் பல்வேறு நிலைகளிலும் பாதிக்கப்பட்ட பங்காளனாக விளங்கிய புதுமை லோலன் தமிழ்த் தேசிய உணர்வுகளை பிரதிபலிக்கும் சிறுகதை எழுத்தாளனாக இம்மண்ணில் விளங்கியதோடு ஒரு காலகட்டத்தின் சமுதாய, அரசியல் செயற்பாடுகளைத் தன் சிறுகதை மூலம் ஆவணப்படுத்திய எழுத்தாளனாகவும் திகழ்ந்துள்ளார் என்பதை இலக்கிய உலகம் மறந்து விடல் ஆகாது.
By – Shuthan

 

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடு

Add your review

12345