எழுத்தாளர் யாழ் நங்கை

யாழ் நங்கையாழ்ப்பாணம் கல்வியன்காடு, திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அவர்கள் யாழ் நங்கை என்னும் புனை பெயரில் இலக்கிய உலகில் 1960 களில் பிரவேசித்தார். ஆரம்பக் கல்வியை கல்வியன்காடு செங்குந்தா இந்துக் கல்லூரியிலும், உயர் கல்வியை மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியிலும் பயின்றார். 1950 களில் ”கலைச்செல்வி” சஞ்சிகை மூலம் வளர்ந்த முக்கியமான பெண் எழுத்தாளர் யாழ் நங்கை ஆவார். இவர் தன் எழுத்துலகச் சிற்பியை என்றும் நன்றியுடன் நோக்குவார். இவரது முதலாவது சிறுகதை தினகரனில் அதுவும் டாக்டர் கைலாசபதி அவர்கள் ஆசிரிய பீடத்தில் இருந்த போது வெளிவந்தது. சிரித்திரன் சஞ்சிகையில் ”தீவாந்தரம்” என்னும் சிறுவர் தொடர்கதையும் இவர் சிறுவர் இலக்கியத்தில் காட்டிய ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன.

விழிச்சுடர்” என்ற குறுநாவல், வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்த ”உள்ளத்தின் கதவுகள்” என்ற நாவல், நெருப்பு, வெளிச்சம் என்ற சிறுகதைத் தொகுதிகள், ”இரு பக்கங்கள்” என்ற கவிதைத் தொகுதி ஆகியவை இதுவரை நூலுருப் பெற்ற அவரின் பிரசவங்களாகும். இவர் ஈழத்துப் பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர். முப்பத்தைந்து  வருடங்களுக்கு மேலாக இவர் இத்துறையில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆங்கிலக் கதைகள் பலவற்றை மொழி பெயர்த்துள்ள யாழ் நங்கை அவர்கள் தனது எழுத்துலக ஆரம்ப  காலத்தில் வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். சிறந்த பெண் பத்திரிகையாளர் என்ற வகையில் இவர் 1995 ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற பெண்கள் மகாநாட்டிற்குச் சென்றார். இம்மகாநாடு பற்றி இருபது வாரங்கள் வீரகேசரியில் எழுதியுள்ளார்.

1993 ம் ஆண்டில் இந்து கலாச்சார அமைச்சு இவருக்குத் ”தமிழ்மணி” என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. 1994ம் ஆண்டு ”எஸ்மண்ட் விக்கிரமசிங்க” விருது இவருக்குக் கிடைத்தது. ஈழத்துப் பெண் எழுத்தாளர் வரிசையில் முதன்மை பெற்று விளங்கும் இவர் சிறந்த பெண் பத்திரிகையாளர் என்பதையும் நிரூபித்துள்ளார்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்