ஐயாத்துரை சிவபாதம்

யாழ்ப்பாணம் அள வெட்டியைப் பிறப்பிட மாகக் கொண்ட இவர் ஓர் மிருதங்க வித்துவான் ஆவார். மிருதங்கம் மட்டுமல்லாது, தவில், தபேலா, கெஞ்சிரா, கடம், கொன்னக்கோல் போன்ற தாள வாத்தியக் கருவிகளை வாசிப்பதிலும் திறமையுடையவர். ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயது முதல் கலையார்வம் கொண்டு விளங்கினார்.

மிருதங்கத்தின் ஆரம்பப் பாடங்களை திரு. ஆறுமுகம் என்பவரிடமும் பின்பு கலாசூரி ரி. இரத்தினம் அவர்களிடமும் பயின்றுள்ளார். மேலும் இந்தியா சென்று இத்துறையில் சிறப்புப் பயிற்சியினை திருவாரூர் நாகராஜனிடமும் பெற்றுக்கொண்டார்.
உலகப் புகழ்பெற்ற தவில் மேதை லயஞான குபேரபூபதி திரு. தெட்சணா மூர்த்தி அவர்களிடம் தவில் வாத்தியக் கலையைக் கற்றார்.

இலங்கையின் இசைக் கலைஞர்கள் N. சண்முகரத்தினம், S.சண்முகராகவன், இந்தியக் கலைஞர்கள் சித்தூர் சுப்பிர மணியம்பிள்ளை, ஆ.தியாகராஜன், கல்லாறு கிருஷ்ணபாகவதர், மகாராஜபுரம் சந்தானம், பண்ணிசைப் புலவர் S.இராஜசேகரம் ஆகி யோருக்கு மிருதங்கம் வாசித்துள்ளார். அத்துடன் இலங்கையின் புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்களான N.மு.பத்மநாதன், அளவெட்டி மு.பாலகிருஷ்ணன், திரு. நாகேந்திரன், திரு. பஞ்சமூர்த்தி – கானமூர்த்தி சகோதரர்கள், கோண்டாவில் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் தவில் வாசித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் இலங்கையில் மட்டுமன்றி, வெளி நாடுகளுக்கும் சென்று பல நிகழ்ச்சிகளில் பங்காற்றியுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். “பார்வதி – சிவபாதம்” என்ற பெயரில் ஒரு இசைக்குழுவை நடாத்தியுள்ளார். அத்துடன் காவடி, கரகம், நடிப்பு என்பவற்றோடு பாடல் இயற்றிப் பாடக்கூடிய தகுதியும் இவருக்கு உண்டு.

இவரின் கலைச் சேவையைப் பாராட்டி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களால் “லய வாத்தியத் திலகம்” எனும் பட்டமும், இணுவில் பண்டிதர் பஞ்சாட்சரம் அவர்களால் “பல்லியக் கலைமணி” என்ற பட்டமும் வலிகாமம் வடக்கு கலாசார பேரவையால் “கலைச்சுடர்” என்ற பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இவர் “கலாபூஷணம்” விருதும் 2008-12-15 அன்று வழங்கிக் கௌரவிக்கப்பட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி – அளவெட்டி இணையம்