கலாநிதி நா. சண்முகலிங்கன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல், சமூகவியற் துறைகளின் தலைவராக விளங்கும் நாகலிங்கம் சண்முகலிங்கன் மயிலிட்டி தெற்குத் தெல்லிப்பளையை பிறப்பிடமாகக் கொண்டவர்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்விமானி (பி. இ டி) சிறப்புப் பட்டப் பயிற்சி பெற்ற இவர் முதலாம் வகுப்புப் பட்டம் பெற்றார். பின் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாப் பல்கலைக்கழகத்தில் உயர்பட்ட ஆய்வுப் பயிற்சியைப் பெற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பதவியேற்றார். இங்கு கலை முதல்வர் (எம் ஏ), கலாநிதி ஆகிய பட்டங்களைப் பெற்றார். விவசாய மாற்றமும் சமூகக்கட்டமைப்பும் என்ற பொருள் பற்றி ஆய்வேடு சமர்ப்பித்து “ கலை முதல்வர்” (எம்.ஏ) பட்டம் பெற்றார். “ துர்க்கையின் புதிய முகம் இன்றைய யாழ்ப்பாணத்தின் சமய, சமூக மாற்றங்கள்” என்ற ஆய்வேட்டை சமர்ப்பித்து கலாநிதிப்பட்டம் பெற்றார். அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்ரன் பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் கணநாத் ஒபயசேகரா இவரது ஆய்வு வழிகாட்டியாக விளங்கினார்.

நாடகத்துறையிலும் இசைத்துறையிலும் இளமை முதலே சிறந்து விளங்கும் இவர் பல்வேறு பரிசுகளையும் பெற்றார். கலைக்கழகம் பாடசாலைகளிடையே நடாத்திய நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மகாஜனாக் கல்லூரியின் “ குருதட்சணை” நாடகத்தில் இவர் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். சன்மார்க்க சபை நடாத்திய நாடகப் போட்டியில் “ வன்தொண்டன்” நாடகத்தில் நடிகருக்கான முதல் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். மேலும் பல நாடகங்களில் பதக்கப் பரிசுகள் பெற்றார்.
வட இலங்கை சங்கீத சபை நடாத்தும் சங்கீதத் தேர்வில் 5ம் ஆண்டுத் தேர்ச்சி பெற்றார். வானொலியில் அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் பணியாற்றிய இவர் ஆக்க இசைக் கலைஞராகவும் பாடகராகவும் கவிஞராகவும் கலந்து கொண்டார். “கங்கையாளே” என்ற முதல் தமிழ் மெல்லிசைத் திரட்டில் இவரது இரு இசைப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திரு.எஸ். கே.பரராசசிங்கத்தின் “ஒலி ஓவியத்தில்” இவரது ஆறு இசைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பல ஆக்க இசை அரங்குகளிலும் பங்குபற்றியுள்ளார். இசை, நாடகத்தில் மட்டுமன்றி இயற்துறையாகிய பேச்சுப்போட்டியிலும் முதல் தங்கப் பரிசு பெற்றுள்ளார். சிறந்த பேச்சாளராகவும் விளங்குகிறார்.
சிறந்த ஆய்வாளராக விளங்கும் இவர் பல சர்வதேச கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டுள்ளார். பல சர்வதேச ஆய்வேடுகளிலும் இவரின் ஆய்வுக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
திரைப்படத்துறையிலும் இவர் ஆர்வமுள்ளவராக விளங்குகிறார். 1973ல் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபன பயிற்சி முகாமில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றார். 1979 ல் இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பான மாமியார் வீடு திரைப்படத்தின் இணை இயக்குநராகவும் பணியாற்றினார். “மட்டக்களப்பில் அம்மன் சடங்கும் வளிபாடும்” என்ற காட்சிசார் மானிடவியல் விவரணத் திரைப்படத்தை நெறிப்படுத்தி 1999 ல் தயாரித்தார்.
சமூக சர்வதேச மட்டத்துக் கல்விப் பணிகளில் மதிப்பீட்டாளராகவும் ஆலோசகராகவும் பதவி வகிக்கின்றார். ஜ.நா. சமூக பண்பாட்டு மேம்பாட்டு திட்டங்களில் மதிப்பீட்டாளராகவும் ஜ.நா அபிவிருத்தி திட்ட அமைப்புகளின் ஆய்வு  ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.
சண்முகலிங்கன் இதுவரை எட்டு நூல்களை வெளியிட்டுள்ளார். முதலாவது நூல் இதய ரஞ்சனி (காந்தளகம் சென்னை 1988) இதில் இடம்பெற்றுள்ள படைப்புக்கள் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பின் “ இதயரஞ்சனி” நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டது.  நம் பண்பாட்டின் சமூக பண்பாட்டு நிகழ்ச்சிகளான விழாக்கள், வழிபாட்டு மரபுகள், கிராமியக் கலைகள், சடங்குகள், நம்பிக்கைகள், மனவெழுச்சிகள், தொடர்புசாதனங்கள், ஆளுமைகள், முதலியன இடம்பெற்றுள்ளன.  எஸ்.கே. பரராசசிங்கம் இதன் இணை ஆசிரியர் ஆவார்.  இரண்டாவது நூல் சண்முகலிங்கனின் தந்தையாராகிய அமரர் நாகலிங்கன் அவர்களின் வரலாற்றைக்கூறும் “என் அப்பாவின் கதை” ஆகும்.  1988ல் ஒரு தனிமனிதனின் நிறுவனம், மகாஜனாக்கல்லூரியின் இலக்கிய பாரம்பரியம் ஆகிய சிற்றேடுகள் வெளியிடப்பட்டுள்ளன.  மகாஜனா .. பாரம்பரியம் என்ற நூல் தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரியில் பயின்ற மாணவரின் எழுத்தாற்றலை நிரல்ப்படுத்தும் மிகச்சிறந்த நூலாகும்.  பாடசாலைகள்தோறும் இத்தகைய ஆய்வு நூல்கள் வெளிவந்தால் ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றை மிகச் சிறப்பாக உருவாக்கலாம்.  “சந்தன மேடை (1992)” “நாகரிகத்தின் நிறம் (1993)” என்பன சண்முகலிங்கன் வெளியிட்ட இரு கவிதை நூல்கள்.  “சான்றோன் எனக்கேட்ட தாய்” பரிசுபெற்ற சிறுவர் நாவல் ஆகும்.  “உளசமூக மேம்பாடு’ என்பது மிக அண்மையில் வெளியான நூலாகும்.