கலாநிதி மனோன்மணி

கலாநிதி மனோன்மணியாழ்ப்பாணத்து தமிழ் பெண் ஆய்வாளராகவும், சிறந்த பேச்சாளராகவும் விளங்கும் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் (தோற்றம் – 14.10.1943) அவர்கள் தும்பளை சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியையும், பருத்தித்துறை மெதடிஸ்தமிசன் பெண்கள் கல்லலூரியில் இடைநிலைக்கல்வியை கற்று பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி, கலாநிதி ஆகிய பட்டங்களையும் பெற்றுக் கொண்டார். வடமராட்சியைப் பிறப்பிடமாகவும் “கோகுலம்“, பரமேஸ்வரா ஒழுங்க, திருநெல்வேலியை வாழ்விடமாகவும் கொண்டு வாழ்ந்து வரும் கலாநிதி மனோன்மணி அவர்கள் தமிழர் பண்பாடு தொடர்பாக பன்முறைப்படுத்தப்பட்ட ஆய்வுகளை தனித்தும், கணவருடன் இணைந்தும் மேற்கொண்டுள்ளார். பட்டடதாரி ஆசிரியையாக யாழ் முத்துத்தம்பி வித்தியாலயத்தில் பணியாற்றிய இவர் யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வருகை தரு விரிவுரையாளராகவும், ஆய்வாளர், விரிவுரையாளராக ஜப்பான், டோக்கியோ கச்சுயின் பல்கலைக்கழகத்திலும் சேவையாற்றியுள்ளார். சைவ வித்தியா விருத்திச் சங்க இல்லத் திட்ட பணிப்பாளராகவும் (1993 – 2003), பொருளாளராகவும் (2003 – 2006) பணியாற்றியுள்ளார்.

இவர் ஆற்றங்கரையான், தமிழ் மொழியும் ஜப்பானிய மொழியும் இலக்கண ஒப்புமை, சாதியும் துடக்கும், சி.வை. தாமோதரம்பிள்ளை ஓர் ஆய்வு, இத்தி மரத்தாள், World view and Rituals among Japanese and Tamils, ஜப்பானிய மொழியை தமிழில் கற்க, தமிழ்மொழி அகராதி தந்த சதாவதானி,பண்டைத் தமிழர் வாழ்வியல் கோலங்கள் 1,2, சென்ற காலத்தின் பழுதிலாத்திறன், புலோலி பசுபதீஸ்வரர் பதிற்றுப்பத்தந்தாதி உரை, குறுந்தொகை, தமிழர் – ஜப்பானியர் வாழ்வில் பொங்கல், காலம் தந்த கைவிளக்கு தமிழ்த்தோணி, காலத்தை வென்ற பெண்கள், சங்க காலத் திருமண நடைமுறைகள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். உலகப் பெண்கள் ஆண்டுமலர், சேர் பொன்னம்பலம் இராமநாதன் பற்றிய நூலடைவு, தமிழர் திருமண நடைமுறைகள், தமிழ்ப் பெண்களின் கண்ணோட்டத்தில் பெண்ணியம், எண்ணக் குவியல், சாளரம், தமிழ் நாவல்கள் – ஒரு மீள்பார்வை, சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் என்பன இவரது பதிவுகளாகும்.ஆக்க இலக்கியம், பந்தி எழுத்துக்கள், ஆய்வுக் கட்டுரைகள், என இவர் எழுதாத இலக்கிய வடிவங்கள் இல்லையென சொல்லலாம். பல மகாநாடுகள், ஆய்வரங்குகளில் எல்லாம் கலந்த சிறப்பித்துள்ளார். 2008 ம் ஆண்டில் வடமாகாண ஆளுனர் விருது, 1988 ல் பேராசிரியர் சண்முகதாசுடன் இணைந்து எழுதிய “இத்தி மரத்தாள்” நூலுக்கு யாழ் இலக்கிய வட்டப்பரிசு, நல்லூர் கலாசாரப் பேரவையின் 2008ம் ஆண்டுக்கான “கலைஞானச்சுடர்” விருது என்பன இவர் ஆற்றிய பணிகளுக்காக கிடைத்த கௌரவங்களாகும்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்